தமிழ்நாட்டின் கல்வித்துறையில் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியவர்கள் அண்ணாமலை அரசரும், ராஜா சர். முத்தையா செட்டியாரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

தமிழ்நாட்டின் கல்வித்துறையில் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியவர்கள் அண்ணாமலை அரசரும், ராஜா சர். முத்தையா செட்டியாரும்!

முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!

சென்னை, ஆக.6 சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர் ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் 5.8.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாநிலக் கல்லூரி யின் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இச்சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.ராஜராஜன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் எம்.ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ராமன் தலைமை ஏற்று உரையாற்றினார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் இறுதியில் தலைமை விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் 

இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் சமூகக் காப்பு அணி அமைப்பாளரும், இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

எனது அறிவு ஆசான் பெரியார்! கல்வி ஆசான் முத்தையா செட்டியார்!

ஆசிரியர் தனது உரையில், “எனது அறிவு ஆசான் பெரியார், கல்வி ஆசான் முத்தையா” என்றார். ராஜா சர். முத்தையா பற்றி வழக்க மான செய்திகளைத் தவிர்த்துவிட்டு, 1938 இல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் தனித் தன்மை யோடு பங்கேற்றதையும், அந்தப் போராட்டத்தில் சிறைப்பட்ட பெரியார் பெல்லாரி சிறையில் வைக்கப்பட் டிருந்த போது, பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டதையும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய நடைபெற்ற ஊர்வலத்தில் தோளில் நீதிக்கட்சி கொடியை ஏந்தியபடி முத்தையா வேள் அவர்கள் நடந்துவந்த பாங்கை யும், அவர் மேயராக இருந்ததையும், சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போது, விடுதலை அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனையிட வந்த போது, அது குறித்துப் பேச ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்த சிறப்பையும், 1941 இல் மீண்டும் விடுதலை தொடங்கப்பட்ட போது, வந்திருந்து பெரியாரிடம் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசி சங்கடத்தைக் கொடுத் ததையும் மாணவர்களின் நினைவில் நிற்கும் வண்ணம் எடுத்துரைத்தார்.

துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி!

தொடர்ந்து ஒரு முக்கியமான தகவலை எடுத்துரைத்தார். அதாவது, அன்றைக்கிருந்த செல்வந்தர்கள் அனைவரும் புதியதாகக் கோயில் கட்டுவதும், கட்டிய கோயிலை புதிப்பிப்பதுமாக இருந்ததை சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலை அரசரும், அவருக்குப் பின் வந்த முத்தையா செட்டியாரும் கல்லூரிகளைக் கட்டி ஒடுக்கப் பட்டோரின் கல்விக் கண்களைத் திறந்த தையும் சொல்லி, இவர்கள் இருவரும் தமிழ்நாடு கல்வித்துறை வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர்கள் என்று புகழாரம் சூட்டினார். அவர்களை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் புரட்சிக்கவிஞரின் ”துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி தோன்றியது” என்ற கவிதையைச் சொல்லி, அண்ணாமலை அரசரைப்போலவே அவரது மகன் முத்தையாவும் கல்வித்தொண்டில் மிகச் சிறந்து விளங்கினார் என்று கூறி, பலத்த கையொலிகளுக்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் முனைவர் ஆர். ராவணன் வாழ்த்துரை வழங்கி னார். இறுதியாக சிறீதர் நன்றி கூறினார்.

நிகழ்வில் கல்லூரி வரலாறு, தமிழ்த் துறையைச் சேர்ந்த இருபால் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment