நீதி எது? தர்மம் எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

நீதி எது? தர்மம் எது?

கேள்வி: நீதி, நியாயம் ஒப்பிடுங்களேன்?

பதில்: இன்றைய நீதிமன்றங்களில் கிடைப்பது சட்டப்படி நீதி. பண்டைய பஞ்சாயத்துகளில் கிடைத்தது தர்மப்படி நியாயம்.

('துக்ளக்' 31.8.2022 பக்கம் 8)

என்னதான் காலம் மாறினாலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் அவர்களைப் பீடித்த மனுதர்மப் புத்தி மட்டும் போகவே போகாது.

இப்பொழுது சொல்லுவது எல்லாம் சட்டப்படியான நீதியாம். முன்பு சொன்னது எல்லாம் தர்மமாம். புரிய வில்லையா? அதுதான் மனுதர்மம்.

அந்தத் தர்மம் என்பது வருணாசிரம தர்மம். அந்த வர்ணாசிரமம் என்பது ஜாதி அடிப்படையிலானது. இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் ஒரு குலத்துக்கொரு நீதியே! 

எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம்.

"பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது (மொட்டையடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலை தண்டனை" (மனுதர்மம் அத்தியாயம் 8 - சுலோகம் 379).

நீதி வேறு தர்மம் வேறு என்று 'துக்ளக்' வட்டாரப் பார்ப்பனர்கள் பதம் பிரிப்பதன் தாத்பரியம் இதுதான்.

பார்ப்பான் கொலை செய்திருந்தாலும் அவனுக்குப் பரிசுகள் உண்டு என்று சொன்னால் யாரும் எளிதில் நம்பவே மாட்டார்கள்.

ஆனால் வரலாற்று ரீதியாகவே ஆதாரம் உண்டு - புராணக் கட்டுக் கதையல்ல.

முதலாம் ராஜராஜனின் தமையன் சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனை பார்ப்பனர்கள் ரவிதாசன், பரமேசுவரன், சோமன், தேவதாசன் ஆகிய பார்ப்பனர்கள் கொன்றனர். அந்தக் கொலைகாரப் பார்ப்பனர்களைத் தண்டிக்கப் பார்ப்பனர்கள் அடங்கிய குழுஒன்று உடையார்குடி சிவன் கோயிலில் கூடியது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது இதுதான்.

என்ன தண்டனை தெரியுமா? 32 பசுக்கள், 12 குடம் பொன் மற்றும் பணியாட்கள், ஆடைகள் கொடுக்கப்பட்டு, எல்லை வரையில், பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விடப்பட்டனர். (ஆதாரம்: தஞ்சைக் கல்வெட்டுகள் - சென்னை அருங்காட்சியகத்தில் காணலாம்).

கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள்  - அவர்களைத் தண்டிக்க அமைக்கப்பட்ட குழுவில் அத்தனைப் பேர்களும் பார்ப்பனர்கள்.

மாதம் மும்மாரிப் பொழிகிறதா? மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறதா? என்று மன்னன் மந்திரிகளைப் பார்த்துக் கேட்பான் - மதி மந்திரிகளோ பார்ப்பனர்கள்.

யாருக்கு நீதி கிடைக்கும் என்பது - சிற்றெறும்பு அளவில் அறிவுடையோரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!

சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவன் ஆகையால் அவனது நாக்கை அறுக்க வேண்டும். (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 270).

பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச் சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும் பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை. (மனுதர்மம் அத்தியாயம் - 8 - சுலோகம் 112).

பிராமணனின் பொருளை அபகரிக்கும் சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லலாம். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன்தன் விருப்பப்படி கொள்ளை இடலாம் (மனுதர்மம் அத்தியாயம் -9 - சுலோகம் 248)

மிகக் கொடிய குற்றம் செய்தாலும், பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகையதொரு துன்பத்திற்கும் ஆளாக்காமலும், அவனுடைய பொருள்களையெல்லாம் அவனிடமே கொடுத்து, அவனை அயலூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

(மனு தர்மம் அத்தியாயம் - 8 - சுலோகம் - 380)

இன்றைய நீதி - நீதிமன்றங்களில் கிடைப்பது; பண்டைய நீதி - தர்மப்படி கிடைப்பது என்று 'துக்ளக்' கூறுகிறதே - அது எத்தகைய யோக்கியதை உடையது என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளே இவை.

காலம் மாறினாலும் காகப்பட்டர் கும்பலின் புத்தி மட்டும் மாறவில்லை என்பதற்கு 'துக்ளக்'கின் இந்தத் தேதி வரையிலான எழுத்துக்களிலிருந்து விளங்கவில்லையா?

No comments:

Post a Comment