ஜிஎஸ்டியால் விபரீதம் பம்ப்செட் விற்பனை பெரும் சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

ஜிஎஸ்டியால் விபரீதம் பம்ப்செட் விற்பனை பெரும் சரிவு

கோவை, ஆக. 23 ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வால் வீடுமற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது என கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரான கோவை, பம்ப்செட் உற்பத்தியில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்களில் 55 சதவீதம் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பம்ப்செட்கள் ஆகும்.

கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

0.5 எச்.பி(குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி. மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட்கள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. ரூ.1,500 முதல் ரூ.4.5 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பம்ப்செட் விலை அதிகரித்துள்ளதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் விக்னேஷ் கூறியதாவது: பம்ப்செட் உற்பத்தி செலவு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் போர்வெல் பம்ப்செட் விற்பனை தான் அதிகம் உள்ளது.

கடந்த ஜூலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஏற்கெனவே விலை 40 சதவீதம் உயர்ந்த நிலையில் தற்போது 6 சதவீதம் சேர்த்து 46 சதவீதமாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு சேவை வரி குறைப்பு, நியாயமான விலையில் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உறுதி செய்தால் நெருக்கடியிலிருந்து இத்தொழில் மீண்டு வர உதவும் என்றார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறும்போது, ‘‘பம்ப்செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். காப்பர் விலை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரித்தது. தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எங்களை போன்ற நிறுவனங்கள் விலை ஏற்றினால் வாடிக்கையாளர்கள் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட்களை வாங்கிச் சென்று விடுகின்றனர். மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டியை மீண்டும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும்” என்றார்.


No comments:

Post a Comment