சமூகநீதிப் போராட்டம் முடிந்து விட்டதா? முற்றுப் பெற்று விட்டதா? அதிலே நிறைவு எய்தி விட்டோமா என்றால் இல்லை. இன்னமும் முழுமையான நிறைவு அந்தப் போராட்டத்திலே நமக்குஏற்படவில்லை. அதனால்தான் இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகின்ற முறையில் சமூக நீதிக்கான வீரமணி விருதை எனக்குத் தந்திருக்கிறார்கள். அந்த விருதுக்கு இருக்கிற பெயரே வீரமணி விருது. வீரமணி - வீரத்தை தன்னகத்தே கொண்ட விருது! மணியான விருது! இந்த வீரமணி என்ற பெயரை பேரறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு சுவைத்தார், எவ்வளவு விரும்பினார் என்பதற்கு அவர் எழுதிய ஒரு தொடர் கதையில் - அந்தக் காலத்தில் அவர் எழுதிய கதையில் - வீரமணி என்பவன்தான் கதாநாயகனாக, அண்ணா அவர்களால் சித்தரிக்கப்பட்டார் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆக அண்ணா அவர்களுக்கு - வீரமணி என்கிற இந்தப் பெயரில் எவ்வளவு ஆர்வம் உண்டு என்பது எனக்குத் தெரியும்.
அதைப்போல எனக்கும் அந்தப் பெயரிலே எவ்வளவு ஆர்வம் உண்டு என்பது அவருக்கு தெரியும். அப்படிப்பட்ட கவர்ச்சி மிக்க பெயர் வீரமணி என்பதாகும். அவருடைய பெயரைக் கேட்டாலே, அவருடைய உருவத்தைப் பார்த்தாலே, அவருடைய எழுத்தைப் படித்தாலே, அவருடைய உரையை ரசித்தாலே- தந்தை பெரியார் இத்தகைய உருவம் கொண்டு நம்மிடத்திலே பேசுகிறார், நடமாடுகிறார் என்று எண்ணுகின்ற அளவிற்கு - இன்றைக்கு பெரியாருக்குப் பிறகு - இந்த இயக்கம் அழிந்து விடாதா? இல்லாமல் போய் விடாதா? போகக் கூடாதா? என்றெல் லாம் எண்ணுகின்றவர்கள் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பெரியாருக்குப் பின் அல்ல, பெரியாருக்குப் பிறகு வீரமணி இருக்கின்ற காரணத்தால், அவர் அவருக்குப் பின்னர் பெரும்படை ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கின்ற காரணத்தால் (கைதட்டல்) பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது, சரியாது என்பதை இந்த அரங்கத்திலே நான் பெருமிதத்தோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
- விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலைஞர், சென்னை, 7.9.2008
- விடுதலை, 8.9.2008 பக். 2
No comments:
Post a Comment