‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?' நூல் ஆய்வுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?' நூல் ஆய்வுக்கூட்டம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக, எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை யென்றால் எவர் தமிழர்? ‘ என்னும் நூல் ஆய்வுக்கூட்டம் 22.07.2022 மாலை 6.00 முதல் 8.00 மணி வரை காணொலிக் கூட்டமாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.  நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின்  மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், பகுத்தறிவு ஊடகப்பிரிவின் தலைவர் மா.அழகிரி சாமி, பகுத்தறிவு ஆசிரியர் அணித்தலைவர் தமிழ் பிரபாகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் 

கோ.ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடக் களஞ்சியம்

நிகழ்வுக்கு தலைமை வகித்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் மா.கவிதா உரையாற்றினார்.

அவர் தனது உரையில் ‘வாரந்தோறும் நூல் நேரம்‘ என்று அமைத்து தொடர்ந்து  நடைபெறுவது சிறப்பு. சிறப்பான ஒரு நூலைப்பற்றிய ஆய்வு இன்று நடைபெறுகிறது. சில புத்தகங் களின் தலைப்பு விடையாக இருக்கும். ஆனால் இந்தப்புத்த கத்தின் தலைப்பு வினாவாக இருக்கிறது. எழுத்தாளர் திருமா வேலன் அவர்களின் 20 ஆண்டுகால உழைப்பால் விளைந்த பலன் இது.இந்த நூலின் வெளியீட்டில் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெகுவாகப் பாராட்டி ‘திராவிடக் களஞ்சியம் ‘ என்று  எழுத்தாளர் திருமாவேலன் அவர்களைக் குறிப்பிட்டார்கள் என்றால் இந்த நூலின் பெருமையைத் தெரிந்துகொள்ளலாம் எனக் குறிப் பிட்டு, நூல் திறனாய்வாளர், பெரியாரிய ஆய்வாளர் 

பொ.நாகராசன் அவர்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டு மிகச் சிறப்பாக தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் “இன்று சமூக ஊடகங்களின் காலம். நமது பரம்பரை எதிரிகள் அவதூறுகளை அள்ளி எறியும் காலம். அவர்களின் அவதூறுகளுக்கு பதில் கொடுப்பதற்கு ஆய்வு நூல்கள் தேவைப்படுகின்றன. ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

‘கீழ்வெண்மணியும் பெரியாரும்‘

’வைக்கம் போராட்டம் ‘பற்றி ஆய்வு செய்து ஒரு அருமையான நூலைக் கொடுத்த எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களை ஆசிரியர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.அதைப்போல இந்த நூலின் ஆசிரியர் திருமாவேலன் அவர்களைத் ‘திராவிடக் களஞ்சியம்Õ என்று ஆசிரியர் பாராட்டுகின்றார் என்றால், திராவிடத்திற்கு எதிராக பொய் பரப்புகிறவர்களுக்கு எதிராக அருமையான ஆய்வு நூல்களை அய்யா திருமாவேலன் அவர்கள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 30, 40 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்களுக்கு எதிரானவர் பெரியார் என்று சொல்ப வர்களுக்கு ‘ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே பெரியாரா?’ என்னும் தலைப்பில் புத்தகம் கொடுத்தார்.

கீழவெண்மணி உண்மைச் சம்பவங்களை விட்டுவிட்டு, பொதுவுடமை இயக்கவாதிகள் சிலரே பெரியாரை குறை சொல்ல முனையும் காலத்தில் ‘கீழ வெண்மணியும் பெரியாரும் ‘ என்ற நூல் கொடுத்தார்.

தடைசெய்யப்பட்ட தலையங்கங்கள்

’தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கங்கள்’ என்ற ஒரு நூல் கொடுத்தார். அவர் எழுதியிருக்கும் நூல்கள் 15-க்கும் மேற்பட்டவை என்றாலும் ஒரு பத்திரிகையாளராக தந்தை பெரியாரைப் பற்றி எழுதியிருக்கும் நூல்கள் மிகச் சிறப்பானவை.அவரை வணங்கி, போற்றி மகிழ்கிறோம். அதனைப் போலவே திறனாய்வாளர் பொ.நாகராசன் ஒன்றிய அரசுப் பணியிலே இருந்து, பெங்களூரு, டில்லி போன்ற பல இடங்களில் பணியாற்றியவர்.

வடவர்களின் இந்தி வெறியை எல்லாம் நேரில் கண்டவர்.முக  நூலில் தொடர்ந்து இயங்குபவர். இந்த நிகழ்வுக்கு அடித் தளமாக இருக்கும் புதுமை இலக்கியத்தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் போல வெளி மாநிலங்களில்  பணி யாற்றிய போதும் திராவிட இயக்க உணர்வை நெஞ்சில் நிறுத்தியவர்.  சிறப்பான இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும்  நானும் வரவேற்று மகிழ்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர் ‘என்னும் நூலைப் பற்றி பொ.நாகராசன் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் “ அய்யா திருமாவேலன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம் போன்ற இதழ்களில் ஆசிரியராக இருந்தவர். ஏறக்குறைய 17 புத்த கங்கள் வெளியிட்டிருக்கிறார். முக்கியமாக இந்தப் புத்தகத்தை ‘இவர் தமிழர் இல்லையன்றால் எவர் தமிழர்?’ என்னும் மணி மகுடத்தை, அவருடைய "மாஸ்டர் ஆப்  பீஸ்" என்று சொல் லக்கூடிய, அவ்வளவு சிறப்பான புத்தகத்தை நம் பெரியாரி யலுக்கு, நமக்காக கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருவள்ளுவர் -தந்தை பெரியார்

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?’ என்னும் கேள்வி ஏன் எழுகிறது. அந்தக் கேள்விக்குப் பின்னால் என்ன வரலாறு இருக்கிறது?  என்பதை நாம் அறியவேண்டும். தமிழ் நாடு சிந்தனையாளர்களிடையே ஒரிஜினல் சிந்தனை யாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், இருவர்தான் நான் அறிந்தவரை. சூரியன்மாதிரி அவர்கள். அவர்களுக்கு முன்னால் அப்படி பேசியவர்கள், எழுதியவர்கள் யாரும் இல்லை என்று சொல்லத்தக்கவகையில்.அந்த இருவர் - ஒருவர் திருவள்ளுவர்.இன்னொருவர் தந்தை பெரியார்.திருவள்ளுவருக்கு  முன்னால் அப்படி ஒரு படைப்பை யாரும் கொடுத்ததில்லை.அதுபோல்தான் தந்தை பெரியாரும்.

மிகச் சிறப்பான படைப்பு

தந்தை பெரியாரை பார்ப்பனர்கள் மட்டும் எதிர்க்க வில்லை. ம.பொ.சி.போன்ற தமிழர்களும் எதிர்த்துள்ளார்கள். அந்த வகையில் நான் திருமாவேலனை எப்படிப்பார்க்கிறேன் என்றால் ,ஒரு தகப்பனை ஒரு வேற்றுவன் வந்து அவமானப் படுத்தி விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள்,ஒரு மகனுக்கு எப்படிப்பட்ட கோபம் வரும்?... சட்டையைப் பிடித்து கேட்பான் அல்லவா "எப்படிடா எங்க அப்பாவை நீ கேட்ப, யார்டா நீ“ என்று கோபத்தில் கேட்பார்கள் அல்லவா, அப்படியொரு கோபம் இந்தப் புத்தக ஆக்கத்தில் இருக்கிறது. திருமாவேலன் அவர்கள்,அவர் படைத்த படைப்பு 17 என்றாலும் இது மிகச்சிறப்பான படைப்பு.  இந்தப்புத்தகம். முதல் தொகுதி 816 பக்கங்கள் கொண்டது. 763 பக்கங்கள் கொண்டது 2ஆவது தொகுதி. மொத்தம் 1579 பக்கங்கள் கொண்டது. இதை எப்படி எழுதியிருக்கிறார் என்றால் பெரியாரின் குடிஅரசு இதழ்கள் அத்தனையும் படித்து , 4,5 வருடம் பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் அமர்ந்து அங்கு உள்ள குடி அரசு இதழ்கள், விடுதலை இதழ்கள் அத்தனையும் படித்து ,எடுத்து எழுதியிருக்கிறார்.

பெரியார் களஞ்சியம்

இந்த நூலிலிருந்து 15 நூல்கள் எழுதலாம்.அவ்வளவு பெரிய களஞ்சியம்.அய்யா ஆசிரியர் அவர்கள் மிகச்சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள் ‘திராவிடக் களஞ்சியம் ‘ என்று. திராவிடக் களஞ்சியம் என்று சொன்னது புத்தகத்திற்கும் சேரும், அவருக்கும் சேரும். புத்தகமும் ஒரு திராவிடக் களஞ்சியம்,அதனை எழுதிய ஆசிரியர் திருமாவேலன் அவர்களும் ஒரு திராவிடக்களஞ்சியம்.அந்த அளவிற்கு இந்தப் புத்த கத்தில் அவ்வளவு கருத்துகள் இருக்கின்றன.என்னைப் போன்றவர்களுக்கு, பெரியாரியலைத் தேடித்தேடி படிக்கிற வர்களுக்கு மிகப்பெரிய பெட்டகம் இந்தப் புத்தகம்.முதல் தொகுதியில் எடுத்துக்கொண்டால் ‘ஏன் இந்த வேண்டாத வேலை ?’,’தமிழர் தலைவரானது எப்படி ?’, ‘பெரியாரைப் பாராட்டிய 90 ஆளுமைகள்,புலவர்கள் ‘,’பெரியார் பாராட்டிய ஒரு 15 ஆளுமைகள் ‘, ‘தந்தை பெரியார் காலத்திலேயே அவரோடு இயைந்து வாழ்ந்த 50 தமிழ்ப்புலவர்கள்’, ’பெரியா ரோடு மிக நெருங்கிப் பழகி வந்த 10 ஆளுமைகள்’,அதுபோல ‘தமிழ்’,’தமிழர்’,’தமிழ் நாடு ‘ இவை எல்லாம் முதல் தொகுதியில் இருக்கும் தலைப்புகள்.முதல் தொகுதியில் இவ்வளவு செய்திகள்.

மூவரைப் புரிதல்

இரண்டாவது தொகுதியில் அவர் எடுத்துக்கொண்ட தலைப்புகள் ‘மூவரைப் புரிதல் ‘,அந்த மூவர் யார்?  ம.பொ.சி.,குணா., பெ.மணியரசன். இந்த மூவரும் தந்தை பெரியாரை எப்படி எப்படி எல்லாம் கேள்வி கேட்டார்கள் என்று சொல்லலாம் - அல்லது இழிவு படுத்தினார்கள் என்று சொல்லலாம் அவர்களைப் பற்றி பேசுவது கூட எனக்கு விருப்பமில்லை.ம.பொ.சி-யைப் பற்றி பெரியார் சொன்னது இந்தப்புத்தகத்தில் இருக்கிறது. “ ம.பொ.சி. 10 பார்ப்பனர்களின் விஷத்திற்கு சமமானவர்” என்று பெரியார் கூறியிருக் கிறார்.அந்த ம.பொ.சி.,பின்னால் அவரைப் போன்று வந்த வர்கள் என்று அவர்களைப் பற்றி மிக விரிவாக எழுதி யிருக்கிறார்” என்று குறிப்பிட்டார். ‘பெரியாரும் திராவிடமும், பெரியாரும் தமிழியமும் ‘,’தமிழ் ஈழமும் பெரியாரும் ‘ என்று மொத்தம் இரண்டு தொகுதிகளாக்க் கொடுத்திருக்கிறார். 1 மாதம் எடுத்துக்கொண்டு இந்தப்புத்தகத்தைப் படிக்க வேண்டும். அப்போதுதான் புத்தகத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் உள்வாங்க முடியும் என்றும் குறிப்பிட்டு நூலில் உள்ள பல அரிய செய்திகளை கேட்பாளர்களுக்கு விளக்கி இந்த நூலை ஒவ்வொரு பகுத்தறிவாளரும்,திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் படிக்கவேண்டும்.இந்த நூல் உங்கள் கையில் இருந்தால் ஒரு நூலகம் கையில் இருக்கிறது, ஒரு பெட்டகம் கையில் இருக்கிறது,ஒரு களஞ்சியம் உங்கள் கையில் இருக்கிறது என்று அர்த்தம் என்று சொல்லி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

நூல் ஆசிரியர் திருமாவேலன் அவர்கள்

வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு உங்கள் அனைவரையும் பார்ப்பது பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரி ஒரு  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திற்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுக உரையை ஆற்றிய தோழர் நாகராசன் அவர்கள் தொடர்ந்து பல்வேறு பெரியாரியல்  புத்தகங்களைப் படித்து அது குறித்து முக நூல் போன்ற தளங்களில் பதிந்து, பெரியாரியல் களத்தில், மிகப்பெரும்  பணியாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர் தோழர் நாகராசன்.இன்றைய முக்கியமான பணி என்பது எதிர்த்து சண்டை போடுவதுதான். என்னுடைய பணி என்பது, புத்தகத்தை எழுதுவது என்ற பெரிய கடமையோடு முடித்து விடுகின்றது. ஆனால் தினமும் காலையிலிருந்து இரவு வரை சண்டை போடுவது என்பதே பெரிய பணிதான் .அதனை நாகராசன் போன்ற தோழர்கள் முழுமையாக எடுத்துக் கொண்டு செயல்படுவது,பெரியாருக்குக் கிடைத்த,பெரியார் விட்டுச்சென்ற கைத்தடிகள் என்றுதான் நாகராசன் போன்றவர்களைச் சொல்லமுடியும்.இத்தகைய பல கைத்தடிகள் உருவாகணும்,இன்னும் வளரணும் என்று நினைக்கின்றேன்.அவர் வளர்வது மட்டுமல்ல, இன்னும் பல கைத்தடிகளை அவர் உருவாக்க வேண்டும் என்பதை என் வேண்டுகோளாகவும் வைத்துக்கொள்கின்றேன். அவர் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகவுரையில் சொன்ன ஒரு உருவகம் எனக்கே பிடித்திருந்தது. என்னையைப் பற்றி பல பேர் சொன்னதும் அதுதான்.ஒரு தந்தையைப் பற்றி ஒருவன் குறை சொன்னால்,மகனுக்கு என்ன கோபம் வருமோ, அப்படி ஒரு கோபம்தான் இந்தப்புத்தகத்தில் இருந்து தெரிந்தது என்று சொன்னார். இந்தப் புத்தகத்தைப் படித்த பலரும் சொன்னது, பெரியாருக்கு ஒரு மகன் இருந்து,பெரியாரைப் பற்றிக் குறை சொன்னால் எந்த மாதிரியான கோபம் வருமோ,அப்படி ஒரு கோபத்தைத்தான் உங்கள் புத்தகத்தில் பார்க்க முடிந்தது என்று சொன்னார்கள்.நான் எப்பவுமே சொல்வது,இந்தப் புத்தகத்தை நான் மட்டும் எழுதவில்லை. இந்தப் புத்தகத்தை விரும்புகிற,ஆதரிக்கிற அல்லது இது  மிகச்சரியான புத்தகம் என்று நினைக்கிற அல்லது என் தத்துவத்தை ஏற்றுக்கொள்கிற அனைவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் என்றுதான் நாம் எப்போதும் சொல்வது.அதனால் என்னுடைய உணர்வை இங்கு பதிவு செய்கின்ற அனைவரும் சேர்ந்து ஒரு பெரியாரின் தொண்டன், ஒரு பெரியாரின் மகன் வந்து இந்தப் புத்தகத்தை எழுதியதாகத்தான் நான் நினைக்கிறேன். இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட 10,15 ஆண்டுகள் உழைப்பில் உருவானது என்றால் கூட ,இதற்கான களம் என்பது பெரியார் திடல் நூலகம்தான்.பெரியார் திடல் நூலகம் என்பது உருவாக வில்லை அல்லது பெரியார் அப்படி ஒன்றை ஆரம்பிக்க வில்லை என்றால் நமக்கு இவ்வளவு பெரிய சொத்துகள் என்பது கிடைத்திருக்காது. பெரியார் விட்டுப்போன சொத்து என்பது அவர் நடத்திய பத்திரிகைகள்தான்.யாருமே எழுத வில்லை என்றாலும் கூட ,யாருமே படிக்கவில்லை என்றாலும் கூட,நான் பத்திரிகையை நடத்துவேன் என்று பெரியார் சொன்னது இருக்கிறது அல்லவா, அதுதான் இன்றைக்கு ஒரு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. அந்தச் சொத்தின் மூலமா கக் கிடைத்த பலன்தான் இந்தப்புத்தகம் என்ற அடிப்படையில் நமக்கான வேலைகளை ,நம்முடைய எதிரிகள் அதிகமாக உண்டாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.அதனால்தான் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல ‘வாழ்க வசவா ளர்கள்’ என்றதைப் போல எதிரிகள் அதிகமாக,அதிகமாக இந்த மாதிரியான புத்தகங்கள் நிறைய வரவேண்டும்.வரும்.அதற்கான தூண்டு கோளையும் ஒரு ஆர்வத்தையும் பாராட்டையும் நீங்கள் எல்லோரும் தெரிவித்தீர்கள்.நீங்கள் பேசியது எல்லாமே,நீங்கள் எழுதிய ஒரு புத்தகத்தை எப்படி பேசுவீர்களோ அப்படி ‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை ’ என்பது மாதிரியான பாரட்டு கிடைத்தது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.தோழர்கள் அனைவருக்கும் நன்றி “ என்று உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் பகுத்தறிவு கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் மாரி.கருணாநிதி அனைத்தையும் தொகுத்துக் கூறி நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment