கேள்வி: பல்வேறு நெருக்கடிகளிலும் தேஜஸ்விக்கு பீகார் அரசியலில் பாஜகவை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?
- நா.பார்த்திபன், பெரவள்ளூர்
பதில்: மக்கள் ஆதரவு என்பதும், உறுதியான முடிவும்தான் மூல, முக்கிய காரணம் ஆகும்!
- - - - -
கேள்வி: கருநாடகத்தில் கன்னட மொழிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, இதை மொழி வெறி என்று ஹிந்திபேசும் மாநிலத்தவர்கள் கூறுகிறார்களே?
- அ.தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: அவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தால் மொழி வெறி; இவர்கள் ஹிந்தியைத் திணித்தால் அது தேசபக்தி. என்னே விசித்திரமான வெட்கக்கேடான இரட்டை அளவுகோல்!
- - - - -
கேள்வி: கருப்பு ஆடையை அணிந்து கொண்டு மக்களிடையே அவநம்பிக்கையை பரப்ப சிலர் முயற்சி செய்கின்றார்கள் என்று மோடி கூறுகிறாரே?
-இன்பத்தமிழன், பிலாக்குறிச்சி
பதில்: கருப்பைக் கண்டு ஏனோ மிரளுகிறார்! நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் கருப்பைத்தானே அணிந்து நீதி வழங்குகிறார்கள். இவருக்கு ‘பிளாக் மேஜிக்‘ ஆக போராட்டக் கருப்பு தெரிகிறது என்பது அவரின் மனதின் குரல் மூலம் தெரிகிறது.
விடாது கருப்பு! பெரியார் கருஞ்சட்டை உதாரணத்தை ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது மிகச் சரியான பதிலாகும்.
- - - - -
கேள்வி: சாமியார்கள் மோசடி பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், மீண்டும் மீண்டும் மக்கள் ஏமாறுகிறார்களே?
- கலை அமுதன், அய்யர்மலை
பதில்: பந்தயம் கட்டி பக்தியின் பெயரால் இப்படி ஏமாறும் பரிதாபத்திற்குரியவர்களுக்கு புத்தி வர நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.
அரும்பாடுடனான பிரச்சாரப் போரை நடத்த வேண்டும்.
- - - - -
கேள்வி: மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டே கூட்டாட்சி பற்றி பேசுகிறார்களே?
- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை
பதில்: அதுதான் தலைசிறந்த அவாளின் “வித்தை!” இப்போது காவியின் அரசியல் வித்தை மக்களுக்கு நிச்சயம் புரியும்.
- - - - -
கேள்வி: சமூக வலைதளங்களில் - தமிழ்நாடு ஆட்சி முதலமைச்சர் குறித்து ஹிந்துத்துவ மற்றும் பாஜகவினர் பரப்பும் அவதூறு கருத்துகளுக்கு பெரும்பாலும் தமிழ்நாடு அரசு மவுனம் சாதிப்பது ஏன்?
- திராவிட வித்து, வீராக்கன்
பதில்: தமிழ்நாடு அரசு மவுனம் சாதிக்காது; திமுக மற்ற ஆதரவு கட்சியினர் கொள்கையாளர்கள் பதிலடி தருவது அவசரம் - அவசியம்.
அரசு எதையும் நிதானித்தே முடிவு செய்யும். ஆனால் இயக்கத் தோழர்கள் அதிரடி செயலில் சமூக வளைத்தளங்கள் மூலம் இறங்க வேண்டும்.
- - - - -
கேள்வி: முன்புபோல் போதை ஒழிப்புப் பிரச்சாரம் பள்ளிகளில் செய்யப்படுமா?
- தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்
பதில்: இது பள்ளிகளிலும், வெளியிலும் கூட - எல்லோரும் இதில் ஈடுபடவேண்டும். திராவிடர் கழகப் பேச்சாளர்கள் மேடைதோறும் இதற்கென நேரத்தை ஒதுக்கி அறிவுறுத்தலை மேற்கொண்டாக வேண்டும்.
- - - - -
கேள்வி: பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை, டெலிகிராப் போன்ற சில பத்திரிகைகள் நேரடியாக கண்டித்திருந்தாலும், அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவில்லையே?
- நிலவன், விருத்தாச்சலம்
பதில்: அரசியல் கட்சிகளில் பல அவர்களது கட்சியைக் காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்துவதால் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை என்பது பரிதாபத்திற்குரிய செய்தியாகும்.
No comments:
Post a Comment