கழக இலட்சியக் கொடி உயர்த்துதலுடன் தொடங்கப்பட்டது அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

கழக இலட்சியக் கொடி உயர்த்துதலுடன் தொடங்கப்பட்டது அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு

வரலாறு படைத்த அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு 

ஜூலை 30 காலை 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகத் தொடங்கியது. திராவிடர் கழகத்தின் பிரச்சார வடிவத்தில் ஒன்றான பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகள் திருத்தணி கலைமாமணி பன்னீர்செல்வம் - தஞ்சை பாவலர் பொன்னரசு குழு வினரால் சிறப்பாக நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திண்டி வனம் வழக்குரைஞர். தா. தம்பி பிரபாகரன் மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என்ற முழக்கத் துடன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்

இலட்சியக் கொடி

தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் முனை வர் வே.இராஜவேல் கழகத்தின் இலட்சியக் கொடியேற்றி உரையாற்றினார். அவரது உரையில்  கழகத்தின் லட்சிய கொடி உருவான வரலாற்றை எல்லாம் சுருக்கமாக சொல்லி, ஒரு காலத்திலே இந்த மண்ணில் தோளிலே துண்டு போடக்கூடாது, காலிலே செருப்பு அணியக் கூடாது, தெருக்களில் நடக்கக்கூடாது என்ற போது ஆமைகளாக அடங்கி இருந்தவர்களின் வாரிசுகள், இன்றைக்கு சிங்கங்களாக நவநாகரீக உடையணிந்து வலம் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்தக் கொடி செய்த புரட்சி. கடவுள் இல்லை என்று கூறும் கொடி என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், நம்முடைய இந்தக் கொடி கடவுள் உண்டு என நம்புகிற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பிய கொடி, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்று சொன்ன வள்ளுவர் பிறந்த மண்ணில், பிறப்பின் அடிப்படையில் ஜாதி இருக்கலாமா என்று கேள்வி கேட்டு, ஜாதியை ஒழிக்கும் சமத்துவக்கொடி. ஆகவே, அரியலூரில் அணி திரண்டு இருக்கும் அருமை இளைஞர்களே! நமது கழகக் கொடி, தமிழர்களுக்கான விடுதலைக் கொடி, அடிமை விலங்கை உடைத்தெறிந்த சுயமரியாதைக் கொடி, எந்தவித உயர்வும் தாழ்வும் இருக்கக்கூடாது எனும் சமதர்மக்கொடி, ஆரியர் திராவிடர் போராட்டத்தில் நாம் உயர்த்தும் ஓர் கொடி, ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயம் படைக்க பட்டொளி வீசி பறக்கும் நமது லட்சியக் கொடி. நமது ஆசிரியர் அவர்கள், தற்போது 90 வயதை தொட இருக்கும் நிலையிலும் உயர்த்திப் பிடிக்கும் உன்னத கொடி. மிக எழுச்சியோடு நடைபெறக்கூடிய மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் இளைஞர்கள், இனி இந்த மண்ணிலே நமது கழகக் கொடி இல்லாத ஊரில்லை என்ற நிலைக்கு வர வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரை யாற்றினார்.

திராவிட கழக இளைஞரணி மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் கோவை பிரபாகரன் அவர்கள் ஜாதிய வாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், சனாதான வாதி களுக்கும் எதிரான மாநாடாக இது நடைபெறுகிறது. இழிவை அழிக்கும் போரினில் அய்யாவின் வழி நடப் போம் என்று தனது தலைமை உரையில் உறுதியேற்று அமர்ந்தார்.

இளைஞர்களின் எண்ணிக்கையே,இயக்கத்தின் வலிமை

மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றிய கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள், அய்யாவின் கொள் கைகளை இன்றைக்கும் உலகமயமாக்கும் தலைவரை, அய்யாவின் கொள்கை வாரிசை நாம் பெற்றிருக்கிறோம். ஒரு இயக்கத்தில் இளைஞர்கள் எவ்வளவோ, அதைப் பொறுத்துதான் இயக்கத்தின் வலிமை அமையும். பெரியாரைக் காணாதவர்கள் இன்றும் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தமிழர் தலைவர் அவர்கள். இளைஞர்கள் கட்டுப்பாட்டுடனும் எழுச்சியுடனும் செயல்பட வேண்டும் என்ற அறிவு ரையை வலியுறுத்தி, நமது எதிரிகளின் முயற்சி அதிகமாக இருக்கிறது அதைவிட அதிகமாக கருத்தியல் அடிப் படையில் இளைஞர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இதழியல் துறை யில் நமக்கு வரக்கூடிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற இதழ்களை தொடர்ந்து வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என் றும், பெரியார் பெருந்தொண்டர்கள் கூத்தூர் பெரியசாமி, ஜெயங்கொண்டம் கலியமூர்த்தி அவர்கள் பெயரில் அமைந்து இருக்க கூடிய மாநாட்டினை திறந்து வைத்து உரையாற்றி அமர்ந்தார்.

பெரியார் ஆயிரம் தேர்வுகள்

கழகத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் பிரச்சாரமும் போராட்டமும். அந்த வகையில் மாநாட்டு மேடையி லேயே, அடுத்த கட்ட அறிவிப்பாக பெரியார் ஆயிரம் தேர்வுகள் குறித்த நிகழ்ச்சி அறிவிப்பினை பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.

கருத்தாழம் மிக்க கருத்தரங்கம்

கருத்தாழமிக்க கருத்தரங்கம் திட்டக்குடி புலவர் நாத்திக நம்பி அவர்களின் தொடக்க உரையோடு தொடங்கியது. அவரது தொடக்க உரையில், 1970 காலகட்டங்களில் எப்படி பகுத்தறிவு, கிராமப்புற பிரச் சாரங்களை மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் நடத்தினார்கள் என்ற வரலாற்றை எல்லாம் சொல்லி, இன்று சுய சிந்தனையோடு பெரியார் தோற்றுவித்த இந்த இயக்கத்தில் செயல்பட வந்திருக்கக் கூடிய இளைஞர்கள் எப்படி செயல்பட வேண்டும், எப்படி துடிப்புடன் இருக்க வேண்டும், எப்படி கழகப் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துரைத்து, ஆசிரி யருடைய அறிக்கையை வாசிக்கும் பழக்கத்தை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும், நமக்கு கிடைத்தற்கரிய தலைவர் ஆசிரியர், அவரின் வழியிலே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று உணர்ச்சி பெருக்குடன் தொடக்க உரையாற்றினார்.

மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணைநல ஒப்பந்தம்


திராவிடர் கழகம் என்பது ஒரு புரட்சி இயக்கம்; சமுதாய சீர்திருத்த இயக்கம். அதற்கு சான்றாக, திராவிடர் கழக மாநில இளைஞரணி திறந்தவெளி மாநாட்டில், திராவிடர் கழக அரியலூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீ.திராவிட விஷ்ணு அவர்கள்  சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் வீராக்கன். வீராசாமி - ஜமுனாராணி ஆகியோரது மகன் அரியலூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீ.திராவிட விஷ்ணு, ஜெயங் கொண்டம் ஒன்றியம் சுண்டிபள்ளம் விஸ்வநாதன் - புஷ்பவள்ளி ஆகியோரது மகள் விஜயராணி ஆகி யோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் தமிழர் தலைவர் தலைமையில், அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரா விட விஷ்ணு என்ற மணமகன் பெயரை, கழகக் தலைவர் 'திராவிட வித்து' என்று பெயர் மாற்றம் செய்தார்.

பார்ப்பனர்களின் சதித்திட்டம்

பேராசிரியர் காளிமுத்து அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அவரது தலைமை உரை யில்: இளைஞர்களோடு பழகியதால் தான் - பெரியார் தான் இளமையாக இருப்பதாக உணர்ந்ததை எல்லாம் எடுத்துரைத்து, அதனால்தான் புலவர் நாத்திக நம்பி போன்றவர்கள் எல்லாம் இந்த அகவைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்றும், தொடர்ந்து இளைஞர் களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக இருக்கக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்தே தீர வேண் டும், அது பார்ப்பனர்களின் சதித்திட்டம், அதை எதிர்த் துப் போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கி றோம் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, 1938 இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற பெரியாரின் முழக்கத்தை பற்றி விரிவாக கூறி, அந்த உணர்வுடன் இன்று நம் இளைஞர்கள் ஆசிரியர் தலைமையில் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்ற அறைகூவலுடன் கருத்தரங்கத்தை தொடங்கினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு‘ என்ற தலைப்பில் உரையாற்றிய கீழப்பாவூர் அ.சவுந்தரபாண்டியன், இந்தி திணிப்பு என்பது ஏதோ மொழி திணிப்பு அல்ல, இது ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பின் தொடர்ச்சி. 1930 இல் தொடங்கிய இந்திக்கு எதிரான போராட்டம் 2022 வரை தொடர்கிறது என்று, அடுக்கடுக்காக கால வரிசைப்படுத்தி இந்தி எதிர்ப்பு போராட்ட வடிவங்களை கூறி, இது அண்மையில் 30.04.2022 அன்று தமிழர் தலைவர் தலைமையிலே சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை தொடர்கிறது என்று உணர்ச்சிப் பெருக்குடன் இந்தித் திணிப்பை எல்லா காலகட்டத்திலும் எதிர்ப்போம் என்று சூளுரைத்து அமர்ந்தார்.

திராவிட மாடல் வெற்றி

‘திராவிட மாடல் வெற்றி‘ என்ற தலைப்பில் உரை யாற்றிய பேராசிரியர் ந.எழிலரசன் அவர்கள், திராவிடம் என்ற சொல் எதைக் குறிக்கிறது? நிலத்தையா? மொழியா?  இனத்தையா? திசைகளையா? என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆதிக்க கோட்பாட்டுக்கு எதிராக, எப்போதும் ஒரு விடுதலை கோட்பாடு இருக்கும். அதுபோல், பார்ப் பனியம் என்ற ஆதிக்க கோட்பாட்டுக்கு எதிராக திராவிடம் என்ற கருத்தியல் கோட்பாட்டை தந்தை பெரியார் வலியுறுத்தியதை வரலாற்று குறிப்புகளுடன் எடுத்துரைத்து, நீதிக்கட்சி தொடங்கி இன்று நடக்கும் திராவிட மாடல் ஆட்சி வரை அதன் சிறப்புகளை எல்லாம் கூறி, எங்கள் பாதையை தீர்மானிப்பது பெரியார் திடலும் தமிழர் தலைவர் ஆசிரியரும் என்ற முதல மைச்சரின் வரிகளை சொல்லி, ஆசிரியர் கரோனா கால கட்டத்திலும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்மொழிந்த முழக்கம் தான் "திராவிடம் வெல்லும்" என்பது. இன்றைக்கு திராவிடம் வென்று இருக்கிறது என்று குறிப்புகளோடு தனது உரையை நிறைவு செய்தார்

நீட் தேர்வு எதிர்ப்பு

நீட் தேர்வு எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக தனது உயிரை கொடுத்த முதல் போராளி மருத்துவர் அனிதா பிறந்த மண்ணில் நடை பெறும் இம்மாநாடு, அவரின் மறைவுக்கு முன்பே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் தேர்வின் ஆபத்தினை விளக்கி மேற்கொண்ட பிரச்சாரத்தையும், 90 வயதிலும் 4700 கிலோ மீட்டர் பயணம் செய்து நீட்டை எதிர்ப்பேன் என்று உறுதியாக இருப்பதையும், குலக்கல்வித் திட்ட ஒழிப்பு என்றால் பெரியார்; நீட் தேர்வு எப்படியும் ஒழித்தே தீருவார் தமிழர் தலைவர் ஆசிரியர் என்றும், இது, தகுதி திறமைக்கான தேர்வு அல்ல என்பதை, சென்னை மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், பொருளாதார அறிஞர்கள் கூறிய குறிப்புடன் பேசி அமர்ந்தார்.

மாநில உரிமை மீட்பு

மாநில உரிமை மீட்பு என்ற தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்கள், பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பெயரை எடுப்போம் என்று சொன்னவர்கள் இருக்கும்போது, இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பிலேயே பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி நடைபெறப்போகிறது. எப்போதும் பெரியார் தான் இறுதியில் வெற்றி பெறுவார் என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்து, இன்றைக்கு வரி என்ற பெயரால், ஜிஎஸ்டி என்ற பெயரால், ஒரு பக்கம் எளியவர்களை வஞ்சித்தும், மறுபக்கம் வாராக்கடன் என்று பணக்காரர்களுக்கு வழி விடும் ஒன்றிய அரசைக் கண்டித்து, சனாதனத்தை தூக்கி பிடிக்கும் ஆளுநரின் போக்கை தமிழர் தலைவர் எப்படி போஸ்ட்மேன் என்று அடையாளப்படுத்தினார் என்பதையெல்லாம் விளக்கி, பிரதமர் வருகையின் போது நமஸ்தே சென்னை என்றபோது எழுப்பப்படாத கைதட்டல்களையும், இன்றைக்கும் இந்திக்கும் சமஸ்கிருதத் திணிப்புக்கும் எப்படி தமிழ்நாடு எதிராக நிற்கிறது என்பதை எல்லாம் எடுத்துரைத்து ஆசிரியரின் கட்டளையை ஏற்று மாநில உரிமையை மீட்போம் என்று  சூளுரைத்து அமர்ந்தார்.

மதவெறி எதிர்ப்பு

மதவெறி எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் பூவை. புலிகேசி, அடுக்கடுக்காக 1948 இல் காந்தியார் மறைவின் போது எப்படி பெரியார் இந்த மண்ணை மதக்கலவரம் ஏதும் வராமல் தடுத்து நிறுத்தினார் என்பது தொடங்கி, 1966 காமராஜர் மீது ஆர்.எஸ்.எஸ்-இன் கொலை முயற்சி, மண்டைக்காடு கலவரம், 1992 பாபர் மசூதி இடிப்பு ஆகிய அனைத்து மதக்கலவரங்களிலும் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்து நின்றது, அதற்கு நமது கழகம் எடுத்த நிலைப்பாடு என்ன, ஆசிரியர் எந்த அளவிற்கு மதவெறி எதிர்ப்பு பிரச்சாரத்தினை  இந்த மண்ணில் விதைத்திருக்கிறார் என்பதை வரலாற்று குறிப்புகளுடன் எடுத்துரைத்தார். பகவத் கீதையை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்தாலும் சரி, கலைஞர் இடத்திலே பகவத் கீதையை ராமகோபாலன் போன்றவர்கள் கொடுத்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்தாலும் சரி, அது அனைத்திற்கும் விடையளித்த கீதையின் மறுபக்கத்தை அளித்த ஆசிரியர் தமிழர் தலைவர் என்றும், தொடர்ந்து மதவெறிக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழர் தலைவர் தலைமையிலே வென்று முடிப்போம் என்று உரை நிகழ்த்தினார்

புதிய தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு

புதிய தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இன்றைக்கு ஆளுநர் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம், பிரதமர் பேசக்கூடிய மேடைகளில் எல்லாம், தேசிய கல்விக் கொள்கை நன்மை செய்யும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி எதை வலியுறுத்துகிறதோ, அந்த ஒட்டுமொத்த ஆபத்தின் தொகுப்பு தான் தேசிய கல்விக் கொள்கை என்பதை விவரித்து, தேசிய கல்விக் கொள்கை வருவதற்கு முன்னால் ஆங்கில நாளிதழில் வந்த பெட்டி செய்தியை Indian Education  Service என்ற தலைப்பில் வந்த ஒரு நான்கு அய்ந்து வரி பெட்டிச் செய்தியைப் பார்த்து, நிச்சயம் இது மாநில உரிமையை பாதிக்கும், மாணவர்கள் இளைஞர்களுக்கு எதிராக அமையும் என்று தொடக்கப்பள்ளி முதல் எதிர்த்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்றும், இன்று வரிசையாக நுழைவுத் தேர்வு என்ற பெயரால் வந்திருக்கக்கூடிய நீட், க்யூட் என்ற அனைத்தையும் திராவிடர் கழகம் எதிர்க்கிறது என்பதை உரக்கச் சொல்லி, தேசிய கல்விக் கொள்கைகளில் இருக்கக்கூடிய ஆபத்தினை அடுக் கடுக்காக எடுத்துக்கூறி, ஒருபோதும் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக அழிக்காமல் கருஞ்சட்டை சேனை ஓயாது. தீச்சுடர் பற்றிப் பரவட்டும் என்று சொல்லி நிறைவு செய்தார்.

அடிமைத் தாலி அகற்றம்

திராவிடர் கழக மாநில இளைஞரணி திறந்தவெளி மாநாட்டில், அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் பொன். செந்தில்குமார் அவர்தம் இணையர் ராதிகா அவர்களின் ஒப்புதலுடன் தாலி அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் முன்னிலையில் செ. ராதிகா அவர்கள் தனது தாலியை அகற்றிக் கொண்டார்.

தீர்மான அரங்கம்

திராவிடர் கழக மேடைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், பின்னாளில் சட்ட வடிவம் பெறும் வலிமையை  பெற்றவை. அந்த வகையில், இளைஞர் அணி மாநாட்டில் 19 அரிய தீர்மானங்கள் 19 இளைஞர்களால் முன்மொழியப்பட்டது.

நூல் வெளியீடு

பேராசிரியர் காளிமுத்து அவர்கள் 'தமிழின மொழிக் காவலர் வீரமணி' என்ற ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய நூலை வெளியிட, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் பெற்றுக் கொண்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  அவர்கள் 'விழுப்புண்களை ஏற்ற விடுதலை வீரவரலாறு' என்ற ஆசிரியர். கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலை வெளியிட, தொழிலாளர் அணி மாநில செயலாளர் திருச்சி சேகர் அவர்கள் பெற்றுக் கொண்டார். கழகப் பொரு ளாளர் குமரேசன் 'சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி பொதுவுடைமை இயக்கம்' (பெரியா ரின் விளக்கமும் இன்றைய தொடர்ச்சியும்) என்ற நூலினை வெளியிட, பெரியார் பெருந்தொண்டர் தாரா சுரம். இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தமிழின முன்னேற்றத்திற்கு பெரிதும் தடை

மாநாட்டின் தொடர் நிகழ்வாக முனைவர் அதிரடி க. அன்பழகன்  தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது. தமிழின முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது ஆரிய சனாதனமா? அடிமை மோகமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் தொடங்கியது. பட்டிமன்ற நடுவர் அவரது முன்னுரையில், 1901இல் தமிழ்நாட்டினு டைய படிப்பு சதவிகிதம் ஒரு சதவீதமாக இருந்ததையும்,  2000 ஆண்டுகளாக படிக்காதது ஏன்? அதற்கு காரணம் ஆரிய சனாதனமா அடிமை மோகமா என்ற கேள்வியுடன் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

ஆரிய சனாதனமே

ஆரிய சனாதனம் தான் தமிழன் வளர்ச்சிக்கு முற்றிலும் தடையாக இருக்கிறது என்றும், கல்வி, ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் வந்துவிடக்கூடாது என்பதை எப்படி ஆரிய சனாதனம் வலியுறுத்துகிறது என்பதையும், ஆளுநர் உரையும் அவர் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் போக்கையும் எடுத்துரைத்து, அடிமை தமிழன் திருத்தப்பட வேண்டியவன்; ஆரிய சனாதனம் ஒழிக்கப் பட வேண்டியது. தமிழர் தலைவர் தலைமையில் அதை ஒழிப்போம் என்று கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வனும், மூளைக்கு இடப்பட்ட விலங்கு தான் இந்த ஆரிய சனாதனம். அடிமை மோகத்தில் இருந்து விடுபட முடியும், ஆனால் ஆரிய சனாதனம் மாற்றத்துக்கு உட்பட்டதல்ல. எரிப்பதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல் ஆரிய சனாத னத்தை ஒழிக்க வேண்டும் என்று கழக சொற்பொழிவாளர் கோவை வீரமணியும் தங்கள் அணியின் வாதத்தை எடுத்துரைத் தனர்.

அடிமை மோகமே

ஆரிய சனாதனம் ஒரு கோட்பாட்டை வலியுறுத் தினால், அதற்கு மாற்றான திராவிட கோட்பாட்டை உள்வாங்கி தமிழர்கள் மாற வேண்டுமா? கூடாதா? மாறியாக வேண்டும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் நடைபெற்று இருக்கும் போதும், இன்னும் ஆரிய சனாதனத்திற்கு அடிமையாக இருப்பது பெரிய தவறு. அடிமையாய் இருப்பதைவிட அடிமையாக இருப்பதில் சுகம் காண்பது தவறு என்ற அம்பேத்கரின் வரிகளை கழகத்தின் சொற்பொழிவாளர் ராம. அன் பழகனும் எடுத்துரைத்தும்,  ஆரிய சனாதனத்தை பெரியார் என்ற சம்மட்டியால் அழிக்க முடியும். ஆனால், அடிமை மோகம் சினிமா, ஜாதியம், கலாச்சாரம் என்று அனைத்திலும் இருக்கும் அடிமை மோகம் அழிக்க முடியாதது. இன்றும் கோமியத்தை குடித்தும், மூடநம்பிக் கைகளிலும் ஆட்கொண்டு இருக்கும் மக்களால், அடி மையாக இருக்கும் மக்களால் தான், தமிழன் வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது என்று கழக சொற்பொழிவாளர் யாழ்.திலீபனும் தங்களது அணியின் வாதத்தை பதிவு செய்தனர்.

உயர்ந்த நிலையில் இருந்த இனத்தை வீழ்த்தியது ஆரியம். வீழ்ந்த இனத்தை எழவிடாமல் தடுத்தது அடிமை மோகம். அடிமை மோகத்தை பெரியார், திரா விடர் கழகம் தகர்த்தது. தகர்த்தெறியப்பட வேண்டியது, அழிக்கப்பட வேண்டியது, தமிழன் வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக இருப்பது ஆரிய சனாதனமே என்று தீர்ப்பை வழங்கி பட்டிமன்ற நடுவர் பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.

தொல் திராவிடர் யோகக் கலை

தொடர்ந்து யோகா என்பது திராவிடர் கலை தான், வேதங்களின் ஆதாரங்களை யோகா ஏற்றுக் கொள்வ தில்லை. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இடைச்செருகல் என்பதையெல்லாம் எடுத்துரைத்து, திருப்பூர் இளை ஞரணி பொறுப்பாளர் மணிவண்ணன், சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மாணவ-மாணவிகள் இணைந்து சிறப்பான யோகா கலையினை ஆசிரியர் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர். பார்த்த அனைவரையும் அந்த இருபால் மாணவர்களின் யோகக்கலை வியப்பில் ஆழ்த்தியது.

பண்பாட்டு படையெடுப்பை எதிர்ப்போம்

காலை அமர்வின் நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். அவரது உரையில்: ஒரு பக்கம் விடுதலை சந்தா சேகரிப்பு பணி நடந்து கொண்டிருந்தாலும், குடி செய்வார்க்கில்லை பருவம் என்பதற்கு சான்றாக மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்துக் கொண்டிருக்கும், மாநில இளைஞர் அணி மாநாட்டினை பாராட்டி, தனது உரையை தொடங்கினார். நடைபெற்ற யோகா நிகழ்வினை, அதை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பாராட்டினை தெரிவித்து, யோகா என்பது மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி அவ்வளவே. அதிலும் பண்பாட்டுப் படையெடுப்பு நடந்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்தில் இருந்த சிற்பங்களில் மூச்சுப் பயிற்சிக்கான ஆதாரம் இருக்கிறது. யோகா என்ற திராவிடர் கலையில், பண்பாட்டுப் படையெடுப்பாக ஆரியம் கையில் எடுத்தது. பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பது தான் நம் இயக்கத்தின் வேலை. அந்த வகையில், தொடர்ந்து உண்மை இதழில் இது பற்றி விரிவாக வரும் என்றும், யோகா பற்றி அறிஞர்கள் சொன்ன தகவலை எல்லாம் எடுத்துரைத்தார். 

வன்முறை போர் அல்ல; அறிவுப் போர்

அரியலூர் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தாயார் மறைவிற்கு ஒரு நிமிடம் மரியாதை செலுத்தி, ஆசிரியர் தனது உரையை தொடர்ந்தார்.  பிரச்சாரம் போராட்டம் தான், நம் இயக்கம். நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்களில் சில தீர்மானங்கள் தான் அரசுக்கு. மற்றவை இளைஞர்களுக்கு என்பதை எடுத்துக் கூறி, இளைஞர்கள் தொடர்ந்து எதையும் கருதாமல் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். பெரியார் என்ற பேராயுதம் நம்மிடம் உள்ளதால், என்றைக்கும் நாம் தோற்கமாட்டோம் என்பதை வலியுறுத்தினார். இது பரம்பரை யுத்தம், தொடர் யுத்தம். ஆனால், நாம் நடத்துவது வன்முறை போர் அல்ல; அறிவுப் போர்! அதில் நாம் ஏந்த வேண்டிய அறிவாயுதம், பேராயுதம் தான் விடுதலை நாளேடு என்றும், தான் அறுபது ஆண்டுகள் ஆசிரியராக இருக்கிறேன் என்ற பெரு மையை விட, விடுதலை 88 ஆண்டுகளாக, ஒரு பகுத் தறிவு நாளேடு வருகிறது என்பதுதான் நமக்கெல்லாம் ஊக்கம் என்று கூறி, இப்படிப்பட்ட கட்டுப்பாடு மிகுந்த தோழர்களை, குடும்பம் குடும்பமாக வரக்கூடிய தோழர் களை உலகில் எங்கும் பார்க்க முடியாது. 

இயக்கத்தில் இணைந்த புதிய இளைஞர்கள்

அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி திறந்தவெளி மாநாட்டில், இயக்கத்தில் இணைந்த அரியலூர் மாவட்டம் விளாங்குடியைச் சேர்ந்த புதிய இளைஞர்கள்: மணிகண்டன் வி.ஜி.எம்., கலைவாணன், உதயகுமார் செழியன், பிரகாஷ், சரத்குமார், விஜயகுமார், கமலக்கண்ணன் ஆகியோருக்கு  கழகத் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

தந்தை பெரியார் பணி முடிப்போம்

பெரியார் மறையவில்லை. பெரியார் என்றால் அவர் ஈ.வெ.ராமசாமி இல்லை. பெரியார் என்பது தத்துவம், லட்சியம், சுயமரியாதை. கடைசி மனிதனுக்கும் சுயமரி யாதை உணர்வு ஏற்படும் வரை பெரியார் தேவைப் படுவார் என்பதை எடுத்துரைத்தார்.பெரியார் எப்படி தனது கொள்கையை, பத்திரிகையை பற்றி சொன்னார் என்பதை எடுத்துரைக்கும் வேளையில், "எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த வேலையைத் தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரை இதைத்தான் செய்வேன்" என்று 97 ஆண்டுகளுக்கு முன்னால் 1925 இல் பெரியார் பேசியதை இளைஞர்களின் மனக்கண் முன்னால் கொண்டு வந்து, "எனக்குப் பிறகு என் வேலையை, நான் பேசிய ஒவ்வொரு சொல்லும், நான் எழுதிய ஒவ்வொரு எழுத்தும், என் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்", என்ற பெரியாரின் வரிகளை எடுத்துரைத்து, அவரின் எழுத்தும் பேச்சும் இன்று அவரின் வேலையை செய்து இருக் கிறதா? இல்லையா? எதிரிகள் அஞ்சுகிறார்களா? இல் லையா? என்ற கேள்வியை ஆசிரியர் முன் வைத்தார். வந்திருக்கும் இளைஞர்களின் முக்கிய பணி என்பது, தொடர் பிரச்சாரம் தான். பயிற்சி வகுப்புகள், கிராமப்புற பிரச்சாரங்கள் என்று தொடர்ந்து பிரச்சாரக் களத்தில் இளைஞர்கள், தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இன்றும் கல்வி, மொழி, சமூக நீதிப் போராட்டம் தொடர்கிறது, 90 ஆண்டுகளில் பெரியார் எதிலும் தோற்றதில்லை. அதன் சாட்சி தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி. ஊர்தோறும் திராவிடர் கழகத் தில் இளைஞர்களை சேர்க்க வேண்டும். ஊர் தோறும் கழக கொடி பறக்க வேண்டும். விடுதலை இல்லா வீடே இல்லை என்ற அளவில் நம்முடைய பிரச்சாரம் இருக்க வேண்டும். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் செய்து முடிப்போம். வெற்றி நமதே! என்று உணர்ச்சிப் பெருக்குடன், மாநாட்டிற்கு வருகை தந்த இளைஞர்களுக்கு வழி காட்டுதல் உரையை ஆசிரியர் வழங்கினார்.


No comments:

Post a Comment