அய்யா பெரியார் - பேரறிஞர் அண்ணா கொள்கை வழி உறவினர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

அய்யா பெரியார் - பேரறிஞர் அண்ணா கொள்கை வழி உறவினர்!

விடுதலை இதழின் மேனாள் துணையாசிரியர் நிலவு பூ.கணேசன் பிறந்த நாள் நூற்றாண்டு

அறிவாசான் அய்யா பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் சிதம்பரம் வட்டாரத்தில்,  அரும்பணியாற்றியவர் ரிஜிஸ்ட்ரார் சு. பூவராகன் அவர்கள் ஆவார்.

அவரது தலைமகனாக நிலவு பூ.கணேசன் அவர்கள் 30.08.1923 அன்று பிறந்தார். தந்தையின் வழியொற்றி, இளமையிலேயே திராவிட இயக்கத் தத்துவ வழியில், பள்ளி - உயர் நிலைக்கல்வி கற்று, 1941 முதல் 1944 வரையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) தமிழ் வகுப்பு பயின்ற போது, நாவலர் இரா. நெடுஞ்செழியன் - பேராசிரியர் க. அன்பழகன் ஆகி யோருடன், 'ஒரே வகுப்பில், ஒரே பலகையில்' (Deskmates) என்று பெருமைப்படக் கூடிய வகை யில், தோழர்களாக இருந்தனர். மூவரும் அறிவா சான் அய்யா அவர்களைப் போற்றும் உணர்வு மிக்கவர்களாகத் திகழ்ந்ததால், இயல்பாகவே, நட்புணர்வுடன் பழகிவந்தனர்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்ற போதே, பூ.கணேசன் அவர்கள் பெத்த நாயக்கன் பாளையம் நிலக்கிழார் இராமசாமி கவுண்டரின் தலைமகள் பழநி அம்மாளை, தமிழறிஞர் கா.சு.பிள்ளை தலைமையில், சுயமரியாதை சீர் திருத்த திருமணம் செய்தார்.

இவ்வாழ்விணையருக்கு வெற்றிமணி, நிலவு மணி, அன்புமணி, செல்வமணி ஆகிய மகன் களும், பூங்கொடி, தேன்மொழி, மெல்லியல் ஆகிய மகள்களும் பிறந்தனர்.

கல்லூரிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், அறிவாசான் அய்யா அவர்களால், நிலவு பூ.கணேசன் அவர்கள் அழைக்கப்பட்டு, 'விடுதலை' நாளிதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய போது, பேரறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'மாலைமணி' நாளிதழில் துணையாசிரியராக, பூ.கணேசன் பணியாற்றினார்.

1950 ஆம் ஆண்டு, 'நிலவு' எனும் இதழைத் தொடங்கி, ஆசிரியராக விளங்கி, திராவிட இதழியல் மூலம் சமூகத்திற்குத் தொண்டாற்றி வந்தமையால், திரு.கணேசன் அவர்களுக்கு 'நிலவு' அடைமொழி ஆயிற்று.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இனமானப் பேராசிரியர் அவர்கள் பதவி வகித்தபோது, குடும்ப நலத்திட்டத்தின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்று, நாடகங்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை, பொது மக்களுக்கு எடுத்துரைக்கும், நாடகக் குழுக்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நின்றார்.

நெருக்கடி நிலை (மிசா) காலத்தின் போது,  தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர், சில ஆதிக்க மாற்று உணர்வு உள்ள ஆளுமைகளால், திராவிட முத்திரை குத்தப்பட்டு. நிலவு.பூ. கணேசன் அவர்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டார்.

அறிவாசான் அய்யா பெரியாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடந்தபோது (1978 - 1979)  - அதிமுக-வின் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், அமைச்சர்கள் டாக்டர் நாவலர், ஆர்.எம்.வீ ஆகியோரின் பரிந்துரையின் பேரில், தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும், விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்திய பெருமைக்குரியவர் நிலவு பூ. கணேசன் ஆவார்.

அவரது குடும்பத்தில் நடை பெற்ற அனைத்து திருமணங்களும், சுயமரியாதை சீர்திருத்த திரு மணங்களாக அய்யா பெரியார் - முத்தமிழறிஞர் கலைஞர் - டாக்டர் நாவலர் - இனமானப் பேராசிரியர் - மானமிகு ஆசிரியர் எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் - திருக்குறளார் முனுசாமி போன்ற தலைவர்கள் வருகை தந்து தலைமை தாங்கி நடத்தி வைத்த பெரு மைக்குரிய  இன உணர்வுப் பற்றாளர் நிலவு.பூ. கணேசன் அவர்கள் ஆவார்

இவர்தம் குருதிவழி பெயரன் - பெயர்த்தி களுக்கு, பூங்குழலி, பூங்குன்றன். பூம்பாவை. பூவழகன், வின்மதி, விண்ஒளி, செவ்விதழ் இளந்திரையன், செந்தளிர், பூவேந்தன், செம்பியன், இளமுகில், நல்லியல், யாழினி, இன்பன், இனியன், காவியன் வெண்டா, என்று தமிழ் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர் என்பது பெருமைக்குரியதும், மொழி ஆர்வமிக்க குடும்பத்தினர் என்பதும் புலப்படும்.

நிலவு பூ, கணேசன் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கும் இவ்வேளையில், கொள் கை உரம் மிக்கவராக - இன உணர்வு மிக்கவராக - பகுத்தறிவுக் கொள்கையில் பிறழாமல் பயணித் தவராக - தமிழ் மொழி ஆர்வலராக - ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்தல் - அனுசரித்துச் செல்லுதல் ஆகியவற்றை ஏணிப்படிகளாகக் கொண்டு - வாழ்க்கையின் புகழுக்குச் சென்றதை நினைவு கூர்ந்து, இவைகளை எந்த நிலையிலும், கடைப்பிடித்து, வாழ வேண்டும் என்பதை அவ்வப்போது, நிலவு பூ.கணேசன் அவர்கள் சுட்டிக்காட்டியதைத் தான், திராவிட இயக்கத்தின் இன உணர்வுச் சிந்தனையாளர் - சமூகநீதி வரலாற்றுச் சாதனை நாயகர் - மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் "திராவிட மாடல் ஆட்சியின்” மாட்சிமையில், ஒளிவிடும் தத்துவ நிலை என்பதை எடுத்துரைப்பதில் பேருவகை கொள்கிறோம்!

நிலவு பூ. கணேசன் அவர்களின் இளையத் திருமகனாரும் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினரும் - விழுதுகள் நண்பர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான - வழக்குரைஞர் க.செல்வமணி அவர்களும், அவர்தம் குருதிவழி உறவினர்களும், தோழர்களும் இணைந்து வருகிற, 30.08.2022 அன்று முதல், நினைவேந்தல் நிகழ்ச்சி, நினை வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் நூற்றாண்டு தொடக்க விழா மலர் வெளியீடு, ஆகிய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும், சென்னை , கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் நடத்த உள்ளனர்.


No comments:

Post a Comment