அரியலூர் மாநாடு: காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

அரியலூர் மாநாடு: காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை

 எல்லாவற்றையும் வெல்லக்கூடிய அறிவு, ஆற்றல் உள்ள கட்டுப்பாடு நம் கைகளில் இருக்கிறது!

பெரியார் எதிலும் தோற்றதில்லை;  எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறார் வெற்றி நமதே! வெற்றி நமதே!! வெற்றி நமதே!!!

அரியலூர், ஆக.3- எல்லாவற்றையும் வெல்லக்கூடிய அறிவு, ஆற்றல் உள்ள கட்டுப்பாடு நம் கைகளில் இருக்கிறது!  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எதிலும் தோற்றதில்லை; எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறார்; வெற்றி நமதே! வெற்றி நமதே!! வெற்றி நமதே!!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நடைபெற்ற பட்டிமன்றத்தை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி  வருமாறு:

ஆகவே நண்பர்களே, அதற்கு முன்னால் நிற்க வேண்டிய இளைஞர்கள் இன்றைக்கு இங்கே வந்திருக் கிறார்கள்.

இந்த இளைஞர்களை மிகுந்த அளவிற்குப் பாராட்டுகிறோம் நாங்கள் எல்லோரும்!

இன்னுங்கேட்டால், இளைஞர்களே! நாம் வெற்றி பெற்றே தீருவோம்!

ஆனால், இந்தப் போர் முடியாது. இந்தப் போர் நடந்துகொண்டே இருக்கும். வெவ்வேறு ரூபத்தில் நடந்துகொண்டுதான் இருக்கும்.

எல்லாவற்றையும் வெல்லக்கூடிய அறிவு, ஆற்றல் உள்ள கட்டுப்பாடு நம் கைகளில் இருக்கிறது!

நம்மை ஏமாற்றுவதற்காக பல்வேறு வகையில் நம்மு டைய எதிரிகள் இருக்கிறார்கள். ஊடகங்கள் அவர் களுடைய கைகளில் இருக்கின்றன. பணக்காரர்கள் அவர்களுடைய கைகளில் இருக்கிறார்கள்; பொருளா தார சக்தி அவர்களுடைய கைகளில் இருக்கிறது.

ஆனால், எல்லாவற்றையும் வெல்லக்கூடிய அறிவு, ஆற்றல் உள்ள கட்டுப்பாடு நம்முடைய கைகளில் இருக்கிறது. 

கருஞ்சட்டைத்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிலே இருக்கிறது என்ற திட்டம் நம்மிடத் திலே இருக்கிறது.

ஆகவேதான் நண்பர்களே, ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன் -

அய்யா தந்தை பெரியார் அவர்கள், இந்த இயக்கம், தன்னைப்பற்றி, தன்னுடைய தொண்டைப் பற்றி, தான் ஏன் ஒரு பத்திரிகை நடத்தவேண்டும் என்பதைப்பற்றி எடுத்துச் சொன்ன கருத்து இருக்கிறதே, அதில் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன்.

எவ்வளவு பாடுபட்டு, நாம் எப்படிப்பட்ட தலைவர் தலைமையில் இருக்கிறோம், எப்படிப்பட்ட உணர்வு களை நாம் பெற்றிருக்கின்றோம் என்பதற்கு அடை யாளமாக இந்த ஒரே ஒரு கருத்தை நீங்கள் மனதில் நிறுத்தினால்,

எவ்வளவு பெரிய  வாய்ப்பு, இன்றைக்கு இவ்வளவு தூரம் உழைத்து இருக்கிறீர்களே!

இதைக் கேளுங்கள் - இதுதான் மெசேஜ் - இதை நம் மனதில் வைத்துக்கொண்டால், நமக்கு என்றைக்கும் பாடமாகத் திகழவேண்டும்.

நாம் அத்துணை பேரும் 

செய்யவேண்டிய பணி!

இளைஞர்களாக இருந்தாலும், மேனாள் வாலிபர் களாக இருந்தாலும், வயது ஒரு பொருட்டல்ல என்று கருதக் கூடியவர்களாக இருந்தாலும், பாலினத்தைப்பற்றி கவலைப்படாமல், நாம் எல்லோரும் ஓரினம் என்று நினைக்கக்கூடிய அளவிலே, மிக வேகமாக இருக்கக் கூடியவர்களானாலும், நாம் அத்துணை பேரும் செய்யவேண்டிய வேலை என்னவென்று சொன்னால், இது மிகமிக முக்கியமானதாகும்.

பெரியார் பேசுகிறார்!

நம்முடைய அறிவாசான் பேசுவதை அப்படியே உங்களுக்கு எடுத்து - அந்தப் பாடத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது.

என்னுடைய வேலை, ஒலிபெருக்கி போன்றது.

பெரியாருடைய பேச்சு, பெரியாருடைய சிந்தனை - இவற்றை மனதில் சுமந்து சென்றால், நமக்கு ஒருபோதும் தோல்வி ஏற்படாது.

அந்த அடிப்படையிலே சொல்லுகிறேன்.

1925 ஆம் ஆண்டு 

‘குடிஅரசு’ இதழில்...

1925 ஆண்டு வெளிவந்த ‘குடிஅரசு'  இதழில். 97 ஆண்டுகளுக்கு முன்பு - ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு. இங்கே இருக்கின்ற பல பேர் பிறந்திருக்காத பொழுது.

அந்தக் கருத்தை மட்டும் நான் சொல்லி என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன்.''

எந்தெந்த வேலை?

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை நீக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை - இதுதான் அவருடைய வேலை. வேறு எதுவும் கிடையாது. உலக வரலாற்றில், பதவிக்காக அரசியலுக்குச் செல்வார்கள். ஆனால், அரசியலுக்குச் சென்ற பிறகு, 26 பதவியை ஒரே நேரத்தில், ஒரே தாளிலே ராஜினாமா செய்துவிட்டு வந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் பேசுகிறார், கேளுங்கள்!

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். எனக்கு நினைவு தப்புங்காலம்வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன்’’

1973, டிசம்பர் 24 இல் அய்யா மறைந்தார். 23 ஆம் தேதிக்குப் பிறகுதான் கொஞ்சம் மயக்க நிலை மருத்துவ மனையில். அதுவரை அதே பணிதான், நாம் பார்த்து விட்டோம்.

‘‘எனக்குப் பிறகு, நான் பேசிய ஒவ்வொரு பேச்சும், நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும், என் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்.''

செய்கிறதா? இல்லையா?

இன்றைக்கு எதிரிகள் மருளுகிறார்களா? இல்லையா?

இன்றைக்கு நமக்குக் கிடைத்த பெரிய சொத்து என்ன?

எவரும் பறிக்க முடியாத சொத்து என்ன?

நமக்கு முதுகெலும்பை விட பலமாக இருப்பது எது?

பெரியாருடைய இந்த உறுதி அல்ல!

‘‘இதையெல்லாம் செய்ய நான் யார்? என்றால், பலவற்றை படித்தவன் என்றோ, பெரிய பண்டிதன் என்றோ,  மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக் கொண்டு, நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை.

வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பத்துவிட்டேன்.''

ஒவ்வொரு தோழரும், இளைஞரும் மனதிலே இதைத்தான், உங்கள் ரத்தத்தில் உறைய வைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

உங்கள் ஒவ்வொருவரையும் 

நான் அளவுகடந்து நேசிக்கிறேன்!

‘‘இதில் விருதோ, மதிப்போ கிடைக்காது என்று எனக்குத் தெரியும்; ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோ ரையும் பகைத்துக் கொள்ளவேண்டி இருக்கும். ஒவ் வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன், நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்கவேண்டி இருந்தாலும் பரவாயில்லை; எழுதுவோம் என்றுதான் ஆரம்பித்தேன்.

ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு, உரக்கப் பேச ஆரம்பித்தேன். நீங்கள் என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர்மீதும் நான் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ளமாட்டேன்.

வலிக்குமே என்று அஞ்சிக் கொண்டிருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கி றாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களையெல்லாம் விமர்சிக்கின்றேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்ட விடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்த நேரமும் கவனித்து வருகிறேன்.

நாக்கில் தழும்பேறும்வரை உங்களுக்காகப் பேசு வேன் -

கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன் -

கால்கள் துவளும் வரை உங்கள் பட்டிதொட்டிக ளெல்லாம் நடப்பேன்.

எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்பு வதைப்போல, நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்றே போதும்.''

என்று அய்யா அவர்கள் சொல்கிறார்.

பெரியார் எதிலும் தோற்றதில்லை; 

எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறார்

இப்படி ஒரு கருத்து சுதந்திரத்தைச் சொல்லி, இப்படி ஒரு சுயமரியாதைக் கருத்துகளைச் சொல்லி, ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பிரச்சாரம் செய்த பெரியார் - எதிலும் தோற்றதில்லை. அவர் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதனுடைய அடையாளம்தான், இன்றைக்குக் கம்பீரமாக எழுந்திருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி!

மாலையில் அதுபற்றி சொல்லுகிறேன்.

எனவே, இளைஞர்களே, களம் காணுவதற்குத் தயாராக இருங்கள்!

ஒரு பக்கம் மொழிப் போராட்டம் -

இன்னொரு பக்கம் கல்விப் போராட்டம் -

இன்னொரு பக்கம் பதவிக்கான சமூகநீதிப் போராட்டம் -

இவை அத்தனையும் தேவை என்பதற்காக - பயிற்சிக் களத்திற்கு வாருங்கள்!

வெறும் கொள்கையைத் தெரிந்துவிட்டு மட்டும் போகாதீர்கள். நான் சொன்னதைப்போல, கொள்கையினுடைய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டு மானால், பயிற்சிக் களத்திற்கு வாருங்கள் - பயிற்சி வகுப்புகளைத் தொடங்குங்கள்!

ஊர்தோறும் கழகக் கொடியை ஏற்றுங்கள்!

ஊர்தோறும் இளைஞரணித் தோழர்களுக்கு வேலைகள் என்னவென்றால், எந்த ஊராக இருந் தாலும், திரும்பிய உடனே, எப்படி அரியலூரில் திராவிடர் கழகக் கொடிகள் இருக்கின்றனவோ, அதுபோல, கழகக் கொடியை ஆங்காங்கே ஏற்றுங்கள்.

விடுதலை இல்லாத வீடில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல், நம்முடைய கருத்துகள் பரவாத தெருக்கள் இல்லை என்று சொல்லுங்கள்.

பிரச்சாரம் செய்யுங்கள்!

95 வயதுவரை, மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு பாடுபட்ட நம்முடைய தலைவர் வழியில் வந்திருக்கின்றவர்கள் நாம் - 

வெற்றி நமதே! வெற்றி நமதே!! 

வெற்றி நமதே!!!

எனவேதான்,  நமக்கு அவர் விட்ட பணியை, அவர் போட்ட பாதையில் நடத்துவோம் - எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல்  என்று அன்னை மணியம் மையார் அவர்கள் தலைமையில் அன்றைக்கு எடுத்த உறுதிமொழிப்படி, நம்முடைய பணியைத் தொடரு வோம்!

வாருங்கள் தோழர்களே,

வெற்றி நமதே! வெற்றி நமதே!! வெற்றி நமதே!!!

நன்றி,வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.

No comments:

Post a Comment