ஆசிரியர் அய்யா, கி. வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளிதழில் ஆசிரியராக 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது கண்டு மகிழ்ந்தேன். காலத்தின் தேவையை உணர்ந்து, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் ‘விடுதலை’ என்னும் தீப்பொறி!
‘விடுதலை’ என்னும் சொல்லுக்குள் எவ்வளவு ஆழமான அர்த்தச் செறிவு உறைந்து கிடக்கிறது என்பதை, சமூக விடுதலைப் போராட்ட வரலாறு தேக்கி வைத்துள்ளது.
சமூக விடுதலைப் போராட்ட வரலாறு கசடுகளையும், காலத்தால் நிராக ரிக்கப்பட்ட கழிவுக் குப்பைகளையும், கட்டிக் காப்பாற்ற நினைக்கிற சிந்தனைப் போக்கை எதிர்த்துப் போராட, தந்தை பெரியாரால் களமிறக்கப்பட்ட பேராயுதம்தான் ‘விடுதலை’!
அவர் ஏற்றிய தீக்கனல் சூடு தணிந்து விடாமல் காத்து நின்று களமாட வழிகாட்டி நின்ற ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள் கருத்துக் கிடங்கு! களப் போராளிகளைச் செதுக்கி, செப்பனிட்டு, களமிறக்குகிற உலைக்களம்! அதன் ஆசிரியராக 60 ஆண்டுகள் கடந்தும் பணியாற்றுகிற அய்யாவை தோழமை ததும்ப வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்.
என் சார்பில் மட்டுமல்ல, ஜனசக்தியின் சார்பாக! களம்பல கண்டு, விழுப்புண் பல பெற்று, தடைகள் அடக்குமுறைகள் பலவற்றைக் கடந்து, நிலைகுலைக்கிற நெருக்கடிகளிலெல்லாம் நிலைகுலை யாது நின்று போராடுகிற ஜனசக்தியின் சார்பில் வணங்குகிறேன்; வாழ்த்தி மகிழ்கிறேன். இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து வழி நடத்துவார் என்று உறுதிபட நம்புகிறேன்.
No comments:
Post a Comment