‘விடுதலை’ நமக்காக அல்ல - நம்முடைய இனத்தைக் காப்பாற்ற - சமத்துவத்தை உருவாக்க!
மன்னார்குடி கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மன்னார்குடி, ஆக.25 ‘விடுதலை’யால் பல லட்ச ரூபாய் நட்டம் - ஆனால், கொள்கையில் பல லாபம். குலக் கல்வித் திட்டம் ஒழிந்திருக்குமா? ‘விடுதலை’ இல்லை யென்றால். குலக்கல்வித் திட்டம் ஒழியாமல் இருந்திருந் தால், நாமெல்லாம் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடி யுமா? 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்க முடியுமா? அந்த ‘விடுதலை’ நமக்காக அல்ல - நம்முடைய இனத்தைக் காப்பாற்ற - சமத்துவத்தை உருவாக்க - இன்றைக்கும் ஏதாவது கொடுமைகள் நடந்தால், சமூக அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதற்கு ‘விடுதலை’யைத்தவிர வேறு ஏடு உண்டா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடல்
கடந்த 13.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்து மன்னார்குடியில் நடைபெற்ற மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
விடாது கருப்பு!
கருப்பு எங்கே போயிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.
தஞ்சை ‘விபூதி வீரமுத்துசாமி
பழைய தோழர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்; தஞ்சையில் தான் இருந்தார் விபூதி வீரமுத்துசாமி ‘‘கருப்புக்கு ஒரு மறுப்பு’’ என்று எழுதினார்.
நம்முடைய தோழர்கள் அதற்கு வேகமாகப் பதில் சொன்னார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையெல்லாம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அவரே வந்து எனக்கு மாலை போட்டார் தஞ்சாவூர் நிகழ்ச்சியில்.
நம்முடைய இயக்கத்தின் பொருளாளராக இருந்த கா.மா. குப்புசாமி அவர்கள் மருந்துக் கடையைத் திறந்து வைக்க என்னை அழைத்திருந்தார். அந்த நிகழ்வில் விபூதி வீரமுத்துசாமி எனக்கு துண்டு அணிவித்து, மாலை போட்டு என் அருகிலேயே அமர்ந்தார்; அவர் முன்பு நம்மை எதிர்த்தவர்.
இன்றைக்கு அகில இந்திய அளவில் கருப்பு சென்றிருக்கிறது. இதற்கெல்லாம் எது காரணம்?
உலக அளவில் ஆய்வாளர்கள் பெரியாரை சுவாசிக்கிறார்கள்
இந்தக் கொள்கையை அய்யா பிரச்சாரம் செய்திருக்கிறார். இன்றைக்கு உலக அளவில் ஆய்வாளர்கள் பெரியாரை சுவாசிக்கிறார்கள். பெரியாரை வாசிப்பதைத் தாண்டி, பெரியாரை சுவாசிக்கிறார்கள்.
பெரியாரை நேசிப்பதைத் தாண்டி, பெரியாரை சுவாசிக்கிறார்கள். அடுத்த கட்டம் பெரியாரை யாசிப்பார்கள்.
பெரியார்தான் தேவை - பெரியாரை எங்களுக் குக் கொடுங்கள் என்று கேட்கக்கூடிய அளவிற்கு வருவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பெருமை நமக்கு இருக் கிறது. நாம் எத்தனை பேர் இருக்கிறோம் என்ற அளவுகோல் கிடையாது. இராணுவத்தினர் போன்றவர்கள் நாம்.
இன்றைய இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 130 கோடி இராணுவத்தினர் பாதுகாப் பிற்காக இருக்கிறார்களா? ஆனால், இராணுவத் தினருக்கு இருக்கின்ற மரியாதை, சாதாரண மக்களுக்கு இருக்கிறதா? காவல்துறையினருக்கு இருக்கின்ற மரியாதை, சாதாரண மக்களுக்கு இருக்கிறதா?
அத்தனைக்கும் அடித்தளம் ‘விடுதலை’ ஏடுதான்!
ஆகவேதான், இது அத்தனைக்கும் அடித்தளம் எது என்றால், ‘விடுதலை’ ஏடுதான்.
‘விடுதலை’யை நாம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. இத்தனை ஆண்டுகளாக ‘விடுதலை’யை நடத்துவதால், ஏராளமான அளவிற்குப் பொருள் நட்டம். அதை எப்படி நம்மால் சமாளிக்க முடிந்தது? அய்யா செய்த ஏற்பாட்டினால்தான்.
அய்யா அவர்கள் ஒரு அறக்கட்டளையை உரு வாக்கி, அந்த அறக்கட்டளையின் சார்பாக ‘விடுதலை’ பத்திரிகை நடக்கும்பொழுது, அதனால் ஏற்படுகின்ற நட்டத்தை அறக்கட்டளைதான் ஏற்கும்.
‘விடுதலை’யில் நான் பொறுப்பேற்கும்பொழுது 4 பேர் தான் பணியாற்றினோம். அவர்களைத் தவிர, அச்சுக் கோர்ப்பவர்கள் மூன்று, நான்கு பேர். ஆனால், இன்றைக்கு ‘விடுதலை’ அலுவலகத்தில் பணிபுரிகின்ற வர்களைப் பார்க்கும்பொழுது எனக்கே வியப்பு ஏற்பட்டது.
‘விடுதலை’ அலுவலக கூட்டுப் பணியாளர்களைப் பார்த்தபொழுது எனக்கு ஏற்பட்ட வியப்பு!
கடந்த 10 ஆம் தேதி, எல்லோரும் ஒன்று சேர்ந்து, நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் ஒன்று திரண்டு, என்னை அழைத்தார்கள். பெண்கள் ஒரு பகுதியாகவும், ஆண்கள் ஒரு பகுதி யாகவும் நின்றிருந்தார்கள். எல்லோரும் கூட்டுப் பணியாளர்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னுடைய 60 ஆண்டுகால ஆசிரியர் பணிக்காக எனக்கு சிறப்பு செய்து, ஒரு லட்சம் ரூபாயை ‘விடுதலை’ சந்தாவிற்காகக் கொடுத்தார்கள்.
எனக்கு ‘விடுதலை’ சந்தா கொடுத்த மகிழ்ச்சியைவிட, நம்முடைய அலுவலகத்திலா இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘விடுதலை’யினுடைய வெற்றி!
நான் வேடிக்கையாக கவிஞரிடம் சொன்னேன், அன்றைக்கு நாங்களேதான் எல்லா பணிகளையும் செய்வோம். ரயில் கிளம்புவதற்கு கொடியை அசைத்துவிட்டு, என்ஜினில் ஏறி, ரயிலை இயக்கு வோம்; நாங்களே பரிசோதகர் - இப்படி ஒரு காலகட்டம் இருந்தது.
இன்றைக்கு அதையெல்லாம் தாண்டி வளர்ந் திருக்கின்றோம் என்றால், அது ‘விடுதலை’யினு டைய வெற்றியாகும்.
பெரிய ஆட்களிலிருந்து சாதாரண ஆட்கள் வரையில், ‘விடுதலை’யினால் பயன் பெறாதவர் களே கிடையாது.
1930 ஆம் ஆண்டு இந்தியன் வங்கி, நகரத்தார் களால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான வங்கி. பிறகு தேசிய மயமாக்கல் என்ற பெயரால், பார்ப் பனர்கள் உள்ளே போக ஆரம்பித்தார்கள். இதற்கு வழி தெரியவில்லை - எப்படி அதைத் தடுப்பது என்று.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி முத்தையா (செட்டியார்) உருவாக்கியதுதான் - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எங்களுக்கெல்லாம் இணைவேந்தர் - இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்புகூட சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அவருடைய பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை ‘விடுதலை’யில் வெளிவந்ததை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள்.
யாருக்கும் தெரியாத தகவலை உங்களுக்கெல்லாம் சொல்கிறேன்.
என்னைப் பார்க்கவேண்டும் என்று சொல்லி அனுப்பியிருந்தார். எனக்கு அவர் கல்வி ஆசான் போன்றவர்; அவர் பல்கலைக் கழக இணைவேந்தர்; நான் அந்தப் பல்கலைக் கழக மாணவன். ‘விடுதலை’ யினுடைய ஆசிரியர்.
‘விடுதலை’யால்தான் முடியும் என்றார்!
நான் அவரைப் போய்ச் சந்தித்தேன்.
‘‘இவ்வளவு பெரிய அளவிற்கு இந்தியன் வங்கியை வளர்த்திருக்கிறோம். ஆனால், இப்பொழுது அது முழுவதும் பார்ப்பன மயமாகி இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துகின்ற ஆற்றல் யாருக்காவது உண்டு என்றால், அது உங்களால்தான் முடியும்; ‘விடுதலை’யால் தான் முடியும்; பெரியாரால்தான் முடியும்; திராவிடர் கழகத்தால்தான் முடியும் என்று எல்லோரும் சொல் கிறார்கள். ஆகவே, அதுகுறித்து நீங்கள் எழுதவேண்டும்’’ என்று சொன்னார்.
‘‘இந்தியன் வங்கியா? அக்கிரகாரமா?’’
‘‘இந்தியன் வங்கியா? அக்கிரகாரமா?’’ என்ற தலைப் பில் புள்ளிவிவரங்களோடு எழுதினோம் ‘விடுதலை’யில்.
அதற்குப் பிறகு இந்தியன் வங்கியில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.
அதேபோன்று, இன்றைக்கு நெய்வேலி நிறுவனத்தில் எவ்வளவு பெரிய கொடுமை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. முதன்முதலாக நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் தொடங்கும்பொழுது, எல்லாம் பார்ப்பன மயமாக இருந்தது.
‘‘நெய்வேலியா? பூணூல் வேலியா?’’
அப்பொழுது ‘விடுதலை’யில் ஒரு தலைப்பை போட்டோம் - ‘‘நெய்வேலியா? பூணூல் வேலியா?’’ என்று.
புள்ளி விவரங்களோடு செய்தியை வெளியிட் டதும், அதை மறுக்க முடியவில்லை.
அந்தச் செய்தியை இரண்டணாவிற்கு புத்தக மாக வெளியிடவேண்டும் என்று அய்யா அவர்கள் சொன்னார்.
16 பக்கங்களாக புத்தகம் அச்சிட்டு, நெய்வேலி பக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா உரையாற்றுகிறார். நெய்வேலியா? பூணூல் வேலியா? என்ற தலைப்பில் புத்தகமாக அச் சடித்துப் பரப்பினோம்.
அந்த ஊரில் இருந்த தோழர்களுக்குப் பயம்; பெரியார் உரையாற்றும் கூட்டத்திற்கு யார்? யார்? போகிறார்கள் என்று பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். கூட்டத்திற்கு வந்த அந்த ஊர் தோழர்கள் மேடைக்கு அருகில் வரா மல், தூரத்திலேயே நிற்கிறார்கள். மற்ற கிராமத்தி லிருந்து வந்த மக்கள் எல்லாம் மேடையின் அருகே வந்து கேட்டார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் தோழர்கள் மேடையருகே வந்தார்கள்.
அவர்களுடைய கையில் ஒன்றிய ஆட்சி இருக்கிறது என்கின்ற காரணத்தினால்...
அந்த நெய்வேலியில் அதற்குப் பிறகு மாற்றங்கள் ஏற்பட்டது. இப்பொழுது மறுபடியும் ‘வேதாளம்’ முருங்கை மரம் ஏறியிருக்கிறது. ஏனென்றால், அவர் களுடைய கையில் ஒன்றிய ஆட்சி இருக்கிறது என்கின்ற காரணத்தினால்.
இதைக் கண்டித்து இன்றைக்கும், நாளைக்கும் போராடவேண்டிய ஓர் இயக்கம் நம்முடைய இயக்கம். அதற்கான போராட்டக் கருவி என்பது மக்களுக்கு நியாயத்தை சொல்கின்ற ‘விடுதலை’ ஏடுதான்.
பல லட்ச ரூபாய் நட்டம் - கொள்கையில் பல லாபம்!
பல லட்ச ரூபாய் நட்டம் - ஆனால், கொள்கை யில் பலவகை லாபம். குலக்கல்வித் திட்டம் ஒழிந்திருக்குமா? ‘விடுதலை’ இல்லையென்றால்.
குலக்கல்வித் திட்டம் ஒழியாமல் இருந்திருந் தால், நாமெல்லாம் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்க முடியுமா?
ஆகவே, ‘விடுதலை’யினுடயை சிறப்பு என்ன என்பதைப்பற்றி மணிக்கணக்கில் அல்ல - நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்.
நம்முடைய இனத்தைக் காப்பாற்ற - சமத்துவத்தை உருவாக்க!
அந்த ‘விடுதலை’ நமக்காக அல்ல - நம்முடைய இனத்தைக் காப்பாற்ற - சமத்துவத்தை உருவாக்க.
இன்றைக்கும் ஏதாவது கொடுமைகள் நடந்தால், சமூக அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதற்கு ‘விடுதலை’ யைத் தவிர வேறு ஏடு உண்டா?
எல்லாவற்றையும் தாண்டி ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன் - இன்றைக்குப் ‘பார்ப்பான்’ என்ற வார்த் தையைப் போடக்கூடிய தைரியம் வேறு எந்த ஏட்டிற் காவது உண்டா?
தவறான வார்த்தை அல்ல அது.
திருவள்ளுவரே எழுதியிருக்கிறார் -
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
பாரதி என்ன சொல்லியிருக்கிறார்,
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று!
பார்ப்பான் என்று எழுதினால் என்னாகுமோ, என்னாகுமோ என்று நம்மாட்களே பயப்படுகிறார்கள்.
அய்யாதான் கேட்டார், நீ பிராமணன் என்றால், நான் சூத்திரன். அப்படியென்றால் என்னுடைய தாயின் நிலை என்னாவது? என்று.
இந்தக் கேள்வியை கேட்டது ‘விடுதலை’தான்.
மானமீட்பர் தந்தை பெரியார் -
அவர் தந்த ஆயுதம்தான் ‘விடுதலை’ ஏடு.
எவ்வளவு உறுதியாக இதில் அய்யா இறங்கியிருக் கிறார். கொள்கையில் லாபம் - ரூபாயில் நட்டம்.
அந்த நட்டத்திற்காகத்தான் அய்யா அவர்கள், தன்னுடைய சொத்து, பொதுமக்கள் கொடுத்த நன் கொடை எல்லாவற்றையும் காப்பாற்றி, ஓர் அறக்கட்ட ளையை ஏற்படுத்தினார். அந்த அறக்கட்டளைக்கும் எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தார்கள்; அதை அழிக்கவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி எடுத்தார்கள். அதை மீட்பதற்கு நாங்கள் பட்டபாடு எங்களுக்குத் தானே தெரியும்.
நெருக்கடி காலம் முடிந்து, வருமான வரித் துறை அதிகாரிகளை சந்தித்தோம்; அன்னை மணியம்மை யாரும் உடனிருந்தார்கள்.
நம்முடைய கட்டடங்களின் வாடகைகளைக்கூட நம்மிடம் கொடுக்கக்கூடாது என்றனர்!
நம்முடைய நிறுவனங்களைக்கூட நடத்த முடியாத அளவிற்கு, நம்முடைய கட்டடங்களின் வாடகை களைக்கூட நம்மிடம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி, வருமான வரித் துறையிடம்தான் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
வருமான வரித் துறை அதிகாரியை சந்தித்துப் பேசினோம்; மன்னார்குடியைச் சேர்ந்தவர்தான் அந்த அதிகாரி.
நீண்ட நேரம் அவருடன் பேசினோம். கோபமாகப் பேசினார்; நான் கோபமாகப் பேசினேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, மாதம் 12 ஆயிரம் ரூபாய் பழைய வரி பாக்கிக்காக கட்டுவது என்றும், தடையை நீங்கள் நீக்க வேண்டும் என்று அந்த அதிகாரியிடம் சொன்னோம்.
நான் பயிற்சி எடுத்த இடம் சாதாரணமானதா?
கெஞ்சினால் மிஞ்சினார்கள், மிஞ்சினால் கெஞ்சினார்கள் - குரலையெல்லாம் மாற்றிப் பேசி னார்கள்; நானும் அதற்குத் தகுத்தாற்போல் பேசினேன். ஏனென்றால், நான் பயிற்சி எடுத்த இடம் சாதாரணமானதா? அதுதானே முக்கியம்.
கடைசியாக அந்த அதிகாரி, சரி நீங்கள் சொல் வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றார்.
அவர் சொன்னார், உங்கள் வழக்கு எல்லாம் ஒன்றும் பெரிதாக வெற்றி பெறாது என்றார்.
சரி, பரவாயில்லை, நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்; ஒரே நாளில் எல்லாம் முடிவது இல்லையே என்றேன்.
நான் வேண்டுமானால் ஒரு யோசனையை உங்களுக்குச் சொல்லட்டுமா? என்றார்.
அப்பொழுதே தெரிந்தது, ஏதோ ‘பொடி’ வைத்துப் பேசுகிறார் என்று.
சொல்லுங்கள் என்றேன்.
‘விடுதலை’ பேப்பரை நிறுத்திவிடுங்கள் என்றார்!
‘‘உங்கள் பிரச்சினையெல்லாம் சரியாகவேண்டும் என்றால், ‘விடுதலை’ பேப்பரை நிறுத்திவிடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்குப் பிரச்சினையே இருக்காது’’ என்றார்.
நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்.
உடனே அந்த அதிகாரி, ‘‘என்ன சார், நான் கேட்டது பற்றி எதுவும் சொல்லவில்லையே நீங்கள்’’ என்றார்.
நாங்கள் ‘விடுதலை’யை நிறுத்தினால், நாளைக்கு என்னாகும் தெரியுமா? என்றேன்.
என்னங்க, இப்படி சொல்றீங்க? என்றார்.
வருமான வரித் துறை அலுவலகம் முன்பு மறியல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்!
கருப்புச் சட்டை போட்ட அத்தனை பேரும், வருமான வரித் துறை அலுவலகம் முன்பு மறியல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment