செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... 

தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும். அப் பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக் கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக் களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப் பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்பட வில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்த விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரியாதையியக் கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கன வான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான் களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்பு கின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி.ரெட்டி நாயுடு, எம்.கே.ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்க ளையே தெரிந்தெடுத்தால் மிகுதியும் பொருத்த மானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.

நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரி கின்றது. தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும். பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர் களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகால் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படு கின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர்களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர் கள் என்பது தத்துவார்த்தம். இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.

தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சி யில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டு கிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.


No comments:

Post a Comment