விடுதலை நாளிதழில் ஜூலை 25 அன்று வெளியான அரசு இதழிலேயே சாவர்க்கருக்கு புகழாரம் தலையங்கம் படித்தேன். ஒன்றிய அரசின் கலாச்சார இதழில் மகாத்மா காந்தியாருக்கும் குறைவானவரல்ல சாவர்க்கர் என எழுதியிருப்பது ஆர். எஸ். எஸ் இன் புத்தியையே காட்டுகிறது. பாஜக அரசு சாவர்க்கரை புகழ்வது பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால், காந்தியார் அவர்களோடு ஒப்பிட்டது பெரிய அவமானச்செயல். தேசத்தையே அவமதிக்கும் செயலாகும்.
ஆங்கிலேயரை எதிர்த்து கடைசி வரை அகிம்சையை கடைப்பிடித்து வென்றவர் காந்தியார். ஆனால் சாவர்க்கர் ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கடிதம் எழுதி, நாட்டை விட தன் விடுதலை தான் முக்கியம் என நினைத்தவர். இப்படிப்பட்ட ஒருவரை காந்தியார் அவர்களோடு ஒப்பிட்டது பெரிய அவமானம்!!
ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் பலமுறை மன்னிப்பு கேட்டது என்பது நாட்டையே காட்டிக் கொடுத்ததற்கு ஒப்பாகும்.
கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் எட்டப்பன் காட்டிகொடுத்து அவப்பெயர் உண்டானது. கட்ட பொம்மன் இன்றும் போற்றப்படுகிறார். எட்டப்பனை தெரிவதில்லை. அதுபோன்று தான், மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் நிலை.
தேசத்தந்தை காந்தியார் என்பதையே பாஜக ஏற்க மறுக்கிறது என்பதையே, ஒன்றிய அரசின் கலாச்சார இதழில் வெளிவந்த செய்தியில் அறியமுடிகிறது. சாவர்க்கர், கோட்சேவை சங் பரிவார் கூட்டங்கள் புகழ்ந் தாலும், நாட்டின் குடிமக்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் எட்டப்பர்களாகவே கருதுவார்கள் என்பதே உண்மை.
காந்தியாரை ஒழிக்க முற்படும் இந்த ஆர். எஸ். எஸ், சங்பரிவார், கூட்டத்தை உணர்ந்து தான் அன்றே, காந்தியார் மறைவின்போது நாட்டிற்கு 'காந்திநாடு', மதத் திற்கு 'காந்தி மதம்' என பெயர்சூட்ட தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் என்பது தற்போது புரிகிறது.
கரிசல்பட்டி மு.சுந்தரராசன், மதுரை
ஒற்றுமை என்பது வேறு -
ஒன்று போலிருப்பது என்பது வேறு
ஜூலை 31 விடுதலையில் "ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள் "என்ற முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களின் காணொலி உரை படித்து சிலிர்த்தேன்.
Magnum Opus என்பார்களே, இதுவரை முதலமைச்சர் ஆற்றிய உரைகளில் இதுதான் அது! அரசமைப்பு சட்டத்திற்கு இந்த உரையை சுருக்கவுரையாக கொள்ளலாம் எனத்தக்க அளவுக்கு கூட்டாட்சி (சமஸ்டி ஆட்சி)யையும் மாநில சுயாட்சியையும் இதைவிட பொருத்தமாக யாரும் விளக்கிவிட முடியாது. இந்தியாவுக்கு அடையாள மாகவும் இருந்து அதுவே அடித்தளமாகவும் இருப்பது கூட்டாட்சி,மாநில தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவையே என்பதை முதலமைச்சர் அவர்கள் அழுத்தம் திருத் தமாக வலியுறுத்துகிறார். இந்த கருத்தியல்கள்தாம் இந்தியாவை வலிமைப்படுத்தியவை,அதோடு இன்னும் வரும்பலநூறு ஆண்டுகளுக்கு வலிமைப் படுத்த வல்லவை என்பதை தெ ளிவாக்குகிறார்.
ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவைப் பண்பாடு கருதி அளவளாவிக்கொண்டு இருந்தால் திமுகவும் - பாஜகவும் கைகுலுக்கிக் கொண்டதுபோல பகல் கனவுகண்டவர்களை உலுக்கி எழுப்பியதுபோல நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கொலை நிகழ்த்தும் மோடியரசின் முகமூடியை முதலமைச்சர் கிழித்தெறியத்தவறவில்லை.ஒற்றுமை என்பது வேறு - ஒன்று போலிருப்பது என்பது வேறு என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவரித் திருப்பது அழகு!
ஒரே நாடு ஒரே மொழி ஒருபோதும் அமையாது அது இந்தியாவுக்கு ஆகாது! என்பதை முகத்தில் அறைந்தது போலிருந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை !
- கோ.அழகிரிசாமி
செம்பனார்கோயில்
அரியலூர் தீர்மானங்கள் அரியணையில் அமரட்டும்
'விடுதலை' நாளிதழ் ஆகஸ்டு 1 அன்று வெளிவந்த 'வழிகாட்டும் அரியலூர்' தலையங்கம் வாசித்தேன். கழக மாநாட்டின் வரலாற்று தீர்மானங்கள் பற்றியும், கழகத் தோழர்களின் பணிகள்பற்றியும் விளக்கியது அருமை.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தன்னலம், புகழ் இவைகளை எதிர்பாராமல் பணியாற்றுபவர்களால் தான் இந்த சமுதாயம் உயர்வடைகிறது. சமூகத் தொண்டு புரிபவர்கள் மறைந்தாலும் அவர்களின் தொண்டுகள் எப்பொழுதும் மறைவதில்லை.
அய்யா தந்தை பெரியார் அவர்கள் மக்கள் நலன் ஒன்றையே எண்ணி சமூகப்பணியாற்றிய திராவிடர் கழகம் எனும்ஆலமரத்தின் கீழ் தோழர்கள் நிழலாக இல்லாமல் விழுதாக திகழ்ந்தனர் . இந்த இயக்கம் ஆழமாக வேரூன்றி உள்ளது.
பதவிகள், பெருமைகள் எதையும் நாடாமல் அய்யா தந்த புத்தி ஒன்றே போதும் என இளைஞராக, என்றும் அய்யாவின் மாணவராக பணியாற்றும் ஆசிரியர் அவர்கள் வழியில் இளைஞர்கள் பணியாற்றுவது கழகத்தின் பெரும்பேறு. வரலாற்றுக்கு கிடைத்த அரிய தொண்டாகும்.
எங்களுக்கு எந்தப் புகழும், பட்டங்களும் வேண்டாம் 'மானமிகு' என்ற அடையாளம் மட்டும் போதும், அதுவே எங்கள் பணிக்கு உந்துதல், வழிகாட்டி என உணர்த்தியது தலையங்கம்.
சமுதாய தொண்டு புரிந்தவர்கள் எப்போதும் சாவதில்லை என்பதற்கு திராவிடர் கழகம், அதன் தோழர்கள் மட்டுமே எடுத்துக்காட்டு என்பதே நிகழ்வான மெய்யாகும். அய்யா பணி தொடர்வோம், அரியலூர் தீர்மானங்கள் அரியணையில் அமரட்டும். அய்யா கொள்கை என்றும் அகிலம் வெல்ல ஆசிரியரோடு களத்தில் பணியாற்றுவோம்.
மு.சு. அன்புமணி,
மதிச்சியம், மதுரை.
No comments:
Post a Comment