நேற்றைய ‘விடுதலை' (29.8.2022) இதழில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பிள்ளையார் சதுர்த்தி சம்பந்தப்பட்டு அப்பகுதி ஆளுமையின்கீழ் வரும் வழக்குகளை ஒரே நீதிபதியிடமே (திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடமே) விசாரிக்கவேண்டும் என்பதும் - இந்த நீதிபதியின் முந்தைய தீர்ப்புகள் பல, மக்களின் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளதுபற்றியும், பழைய ஆர்.எஸ்.எஸ். உணர்வாளரான அவரிடம் பிள்ளையார் வழக்குகள் விசாரணைக்கு வந்தால், உரிய நீதி கிடைக்குமா என்பதுபற்றியும் நாம் அறிக்கை விடுத்திருந்தோம்.
இந்த நிலையில், நேற்று (29.8.2022) அவ்வாணை கைவிடப்பட்டு, வழமையாக இம்மாதிரி கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி மாண்புமிகு சிவஞானம் அவர்களே விசாரிப்பார் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன!
இதற்குக் காரணமானவர்கள் அத்துணைப் பேருக்கும் நமது பாராட்டுகள்.
கண்ணைக் கட்டிய நிலையில்தான், நீதி தேவதை சிலை தராசு சாயாமல் அமைக்கப்பட்டுள்ள தாத்பரியத்திற்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதால், எழுதினோம். அந்த நிலை இந்த மாறுதல் உத்தரவு ரத்துமூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2022
No comments:
Post a Comment