‘விடுதலை' சந்தா சேர்ப்பு! - ஓய்வு ஒழிச்சலின்றி ஆயத்தமாவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

‘விடுதலை' சந்தா சேர்ப்பு! - ஓய்வு ஒழிச்சலின்றி ஆயத்தமாவீர்!

கி.வீரமணி

நேற்று (2.8.2022) சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் மன்றத்தில் கலந்துரை யாடிய திராவிடர் கழக தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், ‘விடுதலை'க்கு 60 ஆயிரம் சந்தாக்கள் வழங்கும் திராவிடர் ஊடகச் சாதனைத் திருவிழாவின் தேதியை ஒருமனதாக முடிவு செய்து அறிவித்து விட்டார்கள்!

27 ஆகஸ்ட் 2022இல் நமது இயக்க வரலாற்றில் சென்னையில் நடைபெறும் இவ்விழா ஒரு மிகப் பெரிய வரலாறு படைக்கவிருக்கும் வலிமை பொங் கும் விழாவாகும்!

திராவிடத்தின் எழுச்சியைத் திக்கெட்டும் பரப் பிடுவதற்கு என்னை அவர்கள் ஒரு கருவியாக்கிக் கொண்டு, களமாட ஆயத்தமாகி கால நேரம் கரு தாது, "கருமமே கண்ணாகக் கழகத்தவர் அனை வரும்" என்ற வரலாற்று வைர வரிகளின் பதிவுக்காக, சுறு சுறுப்புத் தேனீக்களாக சுற்றிச் சுற்றித் திரிந்து விடுதலை சந்தா தேனை வாசக மலர்களிலிருந்து சேகரித்திட சேதாரமின்றி உழைக்கப் புறப்பட்டு விட்டனர்

2024இல் வரவிருக்கும் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் தொடர்ச்சியாக அமைந்தால், மக்களாட்சியின் மரண சாசனம் முழுமையாக எழுதப்பட்டு நடைமுறைக்கு வரும் பேராபத்தினை தமிழ்நாட்டு வாசகர்கள் புலம் பெயர்ந்த உலக நாடுகள் வாழ் எம் இனத்தவருக்கும் புரிய வைக்க, பல விழுப்புண்களை ஏற்று வீரநடை போட்டாலும் "வீழ்வோம் என்று நினைத்தாயா?" என்று எதிரிகளுக்குச் சவாலை விட்டு வெற்றி வாகை சூடிடும் "திராவிட மாடல்" ஆட்சியின் பாதுகாப்புக் கேடயமான ஏடுகள் பரவ வேண்டாமா?

வாசகர்களிடையே பார்ப்பன ஏடுகள், ‘அவாளின்‘ பாதந்தாங்கிய பாசாங்கு பத்திரிகைகள் விஷம் பரப்பி, இன்றைய புகழ் மணக்கும் புத்தாக்க ‘திராவிட மாடலை'ப் பற்றி புளுகு மூட்டைகளைக் வீழ்த்துக் கொட்டுவோரின் விஷ முறிவு மூலிகையாக ‘விடு தலை' ‘முரசொலி' போன்ற ஏடுகள்தானே இருக்க முடியும்?

எனவேதான் அதனைப் பரப்புவதில், அதற்கான சந்தாக்களை ஆயிரக்கணக்கில் திரட்டுவது - அவ்வேடுகளின் கஜானாவை நிரப்ப அல்ல.

திராவிட உரிமைகளைக் காத்து, ஜாதியற்ற, சமத்துவ, சமூகநீதிச் சமூகத்தை உருவாக்கிடவே இந்தப் பேரா யுதம் ஆகும்!

பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, மண்ணுரிமை - மனித உரிமை - இவைகளை  மீட்க, காக்க, எழுச்சியூட்டும் ஏடுகள் மட்டும் அல்ல - “ஜனநாயகக் கருத்துக் களங்களில்" அரிய அறிவாயு தங்கள். அவைகளைப் பரப்பினால், நம் இன பாதுகாப்புப்பணி பல மடங்கு உறுதிப்படுமல்லவா?

அதற்குத்தானன்றி, இலட்சங்களைக் குவிக்க அல்ல - இந்த ஏடு பரப்பும் தெருப்பணி! திராவிட மக்களின் இழந்த - இழக்கும் உரிமை இலட்சியங்களை மீட்டெடுத்துப் பரப்பி, ஒரு புதுஉலகைப் படைப்பதற்கே இந்தக் காயுத ஏடு, ஆயுதமாகி அறிவுப் போரில் - அறப்போரில் அரிதான கவியாகி வெற்றியை எட்டும் கருவி என்பதற்காகவே ‘வீடுதோறும் விடுதலை!' அதன்மூலம் மக்கள் மான உணர்வின் சின்னமாக - நிமிர்ந்த தலையுடன், நேர்கொண்ட இலட்சியப் பார்வையில் இதுவரை நடமாடினோம் - இனி இதோ களமாடிடப் புறப்பட்டோம் என்று புறப்படத் தயாராவோம்.

கருஞ்சட்டை இளைஞர் பட்டாளமே! அரியலூரில் ஆர்ப்பரித்த சிங்க ஏறுகளே! விரைந்து முடியுங்கள்!!  வீதிகளில், வீடுகளில் ‘விடுதலை'யின் தேவையை விளக்கிச் சொல்லி அறிவுப் பாதுகாப்புக்கான இனக்கவசமான ‘விடுதலை'யை ஏந்தி வாசக மக்களிடம் செல்லுங்கள்.

கூச்சப்படாமல்  சென்று குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடியுங்கள், சுயநலம், சுயலாபம் பெறாத சுயமரியாதைத் தோழர்களே! பணி முடிக்கப் பணி செய்யும் ஒன்றே இந்த 25 நாளும் உங்களின் ஒரே பணி - இந்தப்பணியே! 

ஓய்வு - உறக்கம் - ஒழிச்சலின்றி ஆயத்தமாவீர்!

No comments:

Post a Comment