சென்னை: மயிலை சங்கீத சபாவின் ஆதரவில் 4.8.44 மயிலாப்பூர் பி.எஸ்.அய்ஸ்கூல் ஹாலில் சிறந்த பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. இக்கச்சேரியைத் திறமையாக நடத்திய கோஷ்டியார் தோழர்கள் ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.சவுடையா, மணி அய்யர், வேணு நாயக்கர் ஆவர். கச்சேரியின் முடிவில் தோழர் எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி அய்யர் (அய்.சி.எஸ்) அவர்கள் சங்கீத கோஷ்டி யாருக்கு வந்தனம் சொன்னார்.
சுப்பிரமணிய அய்யரின் பாட்டைப் புகழ்ந்து பேசினார்; சவுடையாவின் பிடில் வன்மையைப் புகழ்ந்தார்; மணி அய்யரின் மிருதங்கத்தை மிகுதியாகப் பேசினார். கஞ்சீரா வாசித்த வேணு நாயக்கரைப் பற்றி ஒன்றும் பேசாமல் இருந்து விட்டார். இவரால் புகழ்ந்து பேசப்பட்ட மூவரும் பார்ப்பனர்கள். பார்ப்பனர் அல்லாத வேணு நாயக்கரைப் பற்றி வேண்டுமென்றே இவர் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். சபையை நடத்துவோரும், சபையில் இருந்தவர்களும் வேணு நாயக்கருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று அய்.சி.எஸ். அய்யருக்குக் கவனப் படுத்தினார்கள். கஞ்சீரா வேணு நாயக்கர் என்ற குரல் சபையின் பல மூலைகளிலிருந்தும் கிளம்பியது.
இத்தனை பேர் சொல்லியும் துவேஷ புத்தியுள்ள அய்.சி.எஸ். அய்யர், வேணு நாயக்கருக்கு வந்தனம் சொல்லாமல் கடைசி வரையில் சும்மாயிருந்து விட்டார். இந்த அய்.சி.எஸ். அய்யரின் துவேஷ புத்தியை சபையோர் வெறுத்தனர். சபை கலைந்து போகும் போதும் தெருக்களில் இதைப்பற்றியே ஜனங்கள் பேசிக் கொண்டனர். அரசாங்க இலாகா தலைமை ஸ்தானத்தை இந்த அய்.சி.எஸ். பார்ப்பனரிடம் ஒப்புவித்தால் இவர் தன் கீழ் உள்ள பார்ப்பனரல்லாத குமாஸ் தாக்களை என்ன பாடு படுத்துவார் என்றும், இவ்வளவு துவேஷம் கூடாது என்றும், இது மிகச் சிறுமதி என்றும் பேசிக் கொண்டனர்.
குடிஅரசு - செய்தி - 12.08.1944
No comments:
Post a Comment