அய்யா தந்தை பெரியாரின் கொள்கைகளை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு உலகில் உலாவி வருகின்ற கருஞ்சட்டை அணிந்த கருஞ்சட்டை அணியாத அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் நானும் ஒரு கருஞ்சட்டைக்காரன் என்ற உரிமையோடு உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்; நம் வழிகாட்டியாகவும் நம் வாழ்க்கை ஏணியாகவும் இன்று வரை வழி காட்டுகின்ற நம் கருவிழியான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் என்பது நம் உள்ளம், இல்லம், உலகம் அறிந்த உண்மை. அந்த உண்மையை வெண்மையாக்க அவர் சொன்ன ஒரு வாசகத்தை நம் ஒவ்வொருவரின் வீட்டிலேயும் நுழைவு வாயில் முன்பு எழுதிப் போட்டு அது வருகின்றவர்களின் கருவிழியில் பட்டு உள்ளத்திற்குள் சென்று கருவாகவும், திருவாகவும் வேண்டும்.
அந்த வாசகம்தான்.
"சொந்த புத்தி நமக்கு வேண்டாம், பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்"
இப்படி எழுதிப் போடுவதனால் நம் பெற்றோர், நம் இணையர், பிள்ளைகளின் உள்ளத்தில் ரத்தமாக உரமாக வேண்டுவதோடு மட்டும் அல்லாமல், நம் உறவினர்கள் தெரிந்தவர், தெரியாதவர்கள் யார் வந்தாலும் இந்த வாசகத்தை படித்து விட்டு, இது ஒரு பெரியார் குடும்பம் என உறுதிப்படுத்தி விட்டுச் செல்வார்கள். மேலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யோசனை செய்வதும் பிறகு 'விடுதலை'யை படிப்பதும் காலப் போக்கில் 'விடுதலை'யை காசு கொடுத்து வாங்கவும் - அதுவே பின்பு 'விடுதலை' சந்தாதாரராகி அவர்கள் தலையும் நிமிர - 'விடுதலை' வழிகாட்டியாக வும் உருவாக ஆசிரியர் அவர்கள் சொன்ன இந்த வாசகம் அவர்களுக்கு ஒரு நல்ல ஒழுக்கம், பழக்கம், வழக்கம், முழக்கம், வணக்கம் இவைகளை முறையாக வும் நிறைவாகவும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்த வாசகம் நாம் வெளியே சென்று பிரச்சாரம் செய்யாமலேயே இல்லத்தில் எழுதிப் போட்ட "சொந்த புத்தி நமக்கு வேண்டாம் - பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்" வாசகம் நாம் செய்த செய்ய வேண்டிய முக்கியமான ஒரு உருப்படியான பணி என்பதும். இது ஆசிரியர் அவர்கள் நமக்கு கொடுத்த ஏணி என்றும் - நமக்கு பின்னால் வரும் ஒவ்வொருவரும் தெரிந்து தெளிவு பெற வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வாசகத்தில் ஒன்று அல்ல ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் இந்த வாசகம் நிறைவான முறையான உண்மை - உண்மையே. இந்த வாசகத்தை எழுதிப் போடுவதால் நாம் - தந்தை பெரியார், நாகம்மையார், மணியம்மையார் அவர் களுக்கு செய்கின்ற நன்றிக் கடன் என்பதோடு நம் வழிகாட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அம்மா மோகனா வீரமணி அவர்களுக்கும் இன்று வரை நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை - அவர்கள் விரும்பும் உடைமைதான் நாம் 'விடுதலை' தினசரியை தினமும் காசு கொடுத்து வாங்குவததோடு மட்டும் அல்லாமல் அந்த 'விடுதலை'யில் ஒரு எழுத்துக்கூட விடாமல் நம் கருவிழியில் பட்டு - படிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கருஞ்சட்டை மு. சுந்தரராசன், மேலக்கோட்டை
No comments:
Post a Comment