மனிதநேயம் மிக்க ஒரு குடும்பத்தை பற்றிய தகவல் இது.! மனிதத்தை மட்டுமே பேசிய பெரியாரின் மாணவர் தங்களிடம் இதனை பகிர்ந்து கொள்வது எனது கடமை என கருதுகிறேன்.
நான் எம்.டி. படிப்பை முடித்து 2 மாதங்களே ஆன நிலையில், என் மருத்துவமனையில் 17.07.2022 அன்று கோவையை சேர்ந்தவரும், சிம்லா விமான நிலை யத்தின் பாதுகாப்பு அதிகாரியுமான சரவணன்-அய்ஸ்வர்யா ஆகியோரின் மூன்று வயது மகள் ஆராதனா குழந்தைகள் நல அவசர சிகிச்சைப்பிரிவில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப் பட்டார்.
நான் டில்லியில் உள்ள விடுதியில் இருந்தபோது இந்த தகவலை இமாச்சல் பிரதேசத்தின் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியான மதிப்பிற்குரிய சி.பால்ராசு அவர்கள் எனக்கு தெரியப் படுத்தினார். பின்பு குழந்தையின் தந்தை என்னை தொடர்பு கொண்டு தன் மகளின் உடல்நிலையை தெரியப்படுத்தினார்.
நானும் என் மருத்துவ நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் குழந்தை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு Severe ARDS என்ற நிலையில் இருப் பதையும் வெண்டிலேட்டர் துணையோடு இருப் பதையும் அறிந்து கொண்டேன். முதல் 4 நாள்கள் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந் தாலும் அதன்பின் இதய நிறுத்தம் (Cardiac Arrest), மூளை செயலிழப்பு என பல ஆபத்தான நிகழ்வுகள் நடந்து 29.07.2022 அன்று மூளைச்சாவு என்ற நிலையை அடைந்தாள் அந்த இளம்பிஞ்சு.
29.07.2022 அன்று இரவு குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்ட போது, எங்கள் மகள் உயிரோடு கிடைக்காவிட்டாலும் அவள் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று கூறி உறுப்புகள் தானம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர் அந்த இணையர்கள்.
எனக்கு உறுப்பு தானத்தை பற்றிய அனுபவம் இல்லை என்பதாலும், இமாச்சல் பிரதேசத்தில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவு என்பதாலும், வழிகாட்டலுக்காக தமிழ்நாடு உள்பட சில இடங்களில் உறுப்புகள் தானம் குறித்து அனுபவம் பெற்ற பலரை தொடர்பு கொண்டு பேசினேன்.
அவசர சிகிச்சை மருத்துவர் வி.பி. சந்திரசேகரன், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமலோற்பவநாதன், எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உறுப்பு தானத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வநாயகம் அவர்கள், எம்.ஜி.எம். மருத்துவ மனையில் பணிபுரியும் திரு.ஜார்ஜ், எம்.ஜி.எம். மருத்துவமனையின் துணை மருத் துவக் கண்காணிப்பாளர், குழந்தைக்கு மருத்துவம் செய்த மரு.நவீன், உடன் படிக்கும் மரு.சாராவின் தந்தையான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர், சண்டிகர் மருத்துவமனையில் உள்ள மரு. ஆஷிஷ் என அலைபேசியில் ஆலோ சனைகள் நீண்டது. இவர்களின் ஆலோசனை அடிப்படையில், குழந்தையின் நிலை மிக மோசமாக உள்ளதால் இடம் மாற்றி உறுப்பு தானம் செய்வது மிக மிக கடினம் எனவும், விழிக் கொடை மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்ந்து கொண்டோம்.
30.07.2022 அன்று காலை 11.30 மணிக்கு குழந்தையின் உயிர் பிரிந்தது. எங்கள் குழந்தையின் உறுப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் அவள் கண்களையாவது எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர் பெற்றோர் எனும் பெருந்தகைகள்.
அவர்கள் விருப்பத்தை மருத்துவக் கண்காணிப் பாளர் மருத்துவர் ஜனக் ராஜ் அவர்களிடம் தெரியப் படுத்தினேன். அவரின் வேண்டுகோளின் அடிப் படையில் 3 வயதே ஆன ஆராதனாவின் கண்களை எடுத்து பதப்படுத்தினார்கள் கண் மருத்துவர்கள்.
பின்பு குழந்தையின் உடல் சண்டிகரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 31.07.2022 அன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து பணிக்காக வந்து, தன் குழந்தையை இழந்து, உறுப்பு தானம் செய்ய விரும்பி அது முடியாத நிலையில் அவள் கண் களையாவது எடுத்துக்கொள்ளுங்கள் என்ற அந்த தொண்டறச் செம்மல்கள், குருதி-விழி-உடற்கொடையை ஊக்கு விக்கும் திராவிடர் கழகத்தாலும், அதன் தலைவர் ஆசிரியராலும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தமிழ்நாடு அரசால் நாட்டு மக்க ளுக்கு அடையாளம் காட்டப்பட்டு போற்றப்பட வேண்டியவர்கள்.!!
தமிழ்நாட்டில் கண் திறந்து, மூவாயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்து, அடையாளம் தெரியாத நோய் தொற்றால் 12 நாட்கள் போராடி தன்னுயிர் நீத்து இமாச்சல பிரதேசத்தில் உள்ள பார்வை இல்லாத இருவருக்கு பார்வை தரப்போகும் மூன்று வயது பிஞ்சு ஆராதனா மனிதநேயத்தின் குறியீடு.!!
வாழ்க ஆராதனா.!
வாழ்க அவள் பெற்றோர்.!!
இந்நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும் என் விருப்பம்.!
முக்கிய குறிப்பு: 30.07.2022 அன்று எடுக்கப்பட்ட ஆராதனாவின் விழிகளில் ஒன்று 31.07.2022 அன்று ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மற்றொன்று 1.8.2022 அன்று மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது.
அவள் கோவையில் புதைக்கப்படவில்லை.! மாறாக இமாச்சலில் விதைக்கப்பட்டாள்.!!
மனிதம் மிக்க இக்குடும்பம் நம் குடும்பம் என்ற முறையில்,
ஆராதனா குடும்பத்தில் ஒருவனாய்...
- மரு.உ.இரா.மானவீரன்
M.D (Anesthesiology), IGMC, Shimla (H.P)
No comments:
Post a Comment