நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிய சாஸ்த்ரா பல்கலைக் கழகம் உடனே காலி செய்ய தமிழ்நாடு அரசு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிய சாஸ்த்ரா பல்கலைக் கழகம் உடனே காலி செய்ய தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை, ஆக.3 தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில்உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கான தொகையை செலுத்துவதாகவும் கோரியிருந்தது.

ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அந்த நிலத்தை 4 வார காலத்துக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் மூலமாக தாக்கீது பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று   (2.8.2022) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன், அரசு புறம்போக்குநிலத்துக்குப் பதிலாக மாற்றுஇடம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, ‘‘அந்தப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பி விட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதாகக் கூறுவதை ஏற்கமுடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென இந்த நீதிமன்றம்தான் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த பல்கலைக் கழகமும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது" என்றார். இதையடுத்து நீதிபதிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்துள்ள விண்ணப்பத்துக்கு 3 நாள்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆக. 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


No comments:

Post a Comment