தந்தை பெரியாரின் உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியரின் காணொலி உரை
சென்னை, ஆக.6 ‘‘தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டக் கூடாது என்பதற்காகவே உங்களைக் கவனித்து வருகிறேன்!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
'விடுதலை'யின் எதிர்நீச்சல் - காணொலி சிறப்புக் கூட்டம்-2
கடந்த 26.7.2022 அன்று மாலை 'விடுதலையின் எதிர்நீச்சல்’ என்ற தலைப்பில் காணொலிமூலம் நடை பெற்ற இரண்டாம் நாள் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்; திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர்
அடுத்து பொன்னம்பல நாதன் அவர்கள், டி.ஏ.வி. நாதன் சென்னையில் இருக்கும்பொழுது ஆசிரியர். அதற்கடுத்து பிரசுரதாரர்களாக நம்முடைய ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்கள். பெரிய நாயக்கர் என்று அவரை ஈரோட்டில் அழைப்பார்கள். வைத்திய வள்ளல் என்று பெயர் பெற்றவர். சித்த வைத்தியத் துறையில் இருந்தவர். இலவசமாகவே ஒரு பெரிய மருத்துவமனையை நடத்தியவர்.
அவருக்கு அடுத்தபடியாக, ஆசிரியராக பண்டித முத்துசாமி பிள்ளை. பெரிய புலவர் அவர். அதற்கு அடுத்தபடியாக, பூவாளூர் பொன்னம்பலனார். ‘சண்ட மாருதம்‘ பத்திரிகை நடத்திய அனுபவம் பெற்றவர். அவருடைய உரையை நான் கேட்டிருக்கிறேன். நான் முதன் முதலாக மேடை ஏறியபோது, 1943 இல், கடலூரில் பெட்டிகோவில் திடலுக்கு முன்பு, அண்ணா அவர் களுக்கு ‘திராவிட நாடு’ பத்திரிகைக்கு நாங்கள் நூற்று சொச்ச ரூபாயைக் கொடுத்தோம் - அதுதான் பெரிய பணமுடிப்பு. அந்த மேடைதான் என்னுடைய முதல் அரங்கேற்ற மேடை. அந்த மேடையில் என்னுடைய ஆசிரியரும் இருந்தார்.
'போட்'மெயில் பொன்னம்பலம்
அப்பொழுது நான் பூவாளூர் பொன்னம்பலனார் அவர்களுடைய பேச்சைக் கேட்டேன். அவருடைய வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. போட் மெயில் பொன்னம்பலம் என்று அவருக்குப் பெயர்.
‘போட்' மெயில் என்பது இன்றைய இராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இருக்கிறதே, அதற்கு அந்தக் காலத்தில், ‘போட்'டை இணைப்பார்கள் தனுஷ்கோடியில். அதற்காக ‘போட்' மெயில் என்று அதற்குப் பெயர். வேகமாக வரும் ஒரே எக்ஸ்பிரஸ் மெயில் அதுதான்.
ஆகவே, அவரை‘போட்' மெயில் பொன்னம்பலம் என்று அழைத்தார்கள்.
அப்படிப்பட்ட காலகட்டத்தில், பொன்னம்பலனார் அவர்கள் எழுதியதாக அவருடைய பெயரில் அறிக்கை வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையைப் பார்க்கும் பொழுது, இது பொன்னம்பலனார் அவர்கள் எழுதியதா? அல்லது அய்யா அவர்கள் பொன்னம்பலனார் பெயரில் எழுதினாரா? என்று நினைக்கும்பொழுது,
அதில் விளக்கங்களை எல்லாம் சொல்கிறார்.
இது நீண்ட வரலாறு - ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வருகிறேன். என்னுடைய காலத்தைப்பற்றியெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். இது சாதாரணம்?
இதில் ஒன்றும் பெரிய விஷயங்கள் இல்லை.
‘‘சுதந்திர விடுதலையா? அடிமை விடுதலையா?’’
‘‘சுதந்திர விடுதலையா? அடிமை விடுதலையா?’’ என்ற தலைப்பில் எழுதப்பட்டு இருந்தது.
இந்தத் தலைப்பு மிகவும் விசித்திரமான தலைப்பாகும்.
சுதந்திர விடுதலையா? அடிமை விடுதலையா? எது வேண்டும்?
அதில் பத்ராதிபர் பொன்னம்பலனார் - அந்தக் காலத்தில் மொழி அதுதான்.
‘‘திராவிடப் பெருங்குடி மக்களே,
சுதந்திரமான ‘விடுதலை’ வெளிவரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அடிமை ‘விடுதலை’யாக வரவேண்டும் என்று நினைக்கின்றீர்களா?’’
மற்ற பத்திரிகைகளுக்கு எப்படியெல்லாம் நட்டம் ஏற்படுகிறது என்பதை விளக்கிவிட்டு,
‘‘ஆதலால், இந்த நட்டத்திற்காக நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்து, அடிமை ‘விடுதலை’யாகி, விளம்பரத் தாலும், செல்வவான்களிடம் நன்கொடை பெறுவதா?
நம்முடைய கொள்கைகளை விட்டுவிட்டால், விளம் பரங்கள் கிடைக்கும். அந்த விளம்பரங்களை வாங்கிப் பத்திரிகை நடத்துவதா? அல்லது செல்வவான்களிடம், பணக்காரர்களிடம் போய் துண்டேந்துவதைப்போல நன்கொடை பெறுவதா? அல்லது சுதந்திர ‘விடுதலை’ யாக இருந்து, எந்தவிதக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல், சகல விஷயங்களையும் உரிமையாக வெளியிடும் உரிமையுடன் நடத்துவதா? என்பதற்காகத் தான் ‘விடுதலை’யை சுதந்திரமாக நடத்தச் செய்கிறீர் களா? அல்லது அடிமை ‘விடுதலை’யாக நடத்த செய்கிறீர்களா? என்று கேட்கிறது ‘விடுதலை’.
இனியும் நம் இயக்கம் வலுக்க வலுக்க, நம்முடைய ‘விடுதலை’க்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதிருக்கும். அப்பொழுதுதான் நிலையானதும், நேர்மையானதுமான நிலையை, பிரயோஜனத்தை திராவிடர்கள் அடையக் கூடும்’’ என்று தெளிவாகச் சொல்லியுள்ளனர்.
‘விடுதலை’க்கு உதவுங்கள்! ‘விடுதலை’க்கு உதவுங்கள்!! பண முடிப்பு அளியுங்கள்!!
‘‘ஆகவே, திராவிட மக்களே ‘விடுதலை’க்கு உதவுங்கள்! ‘விடுதலை’க்கு உதவுங்கள்!! பண முடிப்பு அளியுங்கள்!!’’ என்று தந்தை பெரியார் திருவாரூர் மாநாட்டில் ‘விடுதலை’க்குப் பணம் கொடுங்கள் என்று அவர்கள் சொல்லும்பொழுது, ‘‘நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை. ஆனால், ஒவ்வொருவருமே அதை வாங்கிப் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பெரியார் சொன்ன அந்த வாசகத்தை நீங்கள் படிக்கவேண்டியது மிக மிக முக்கியம்.
ஆதலால், உடனே முந்தி உதவுங்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், தெளிவாகச் சொல்லு கிறார்.
என்னவென்றால், இந்த நஷ்டத்திற்காக நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்து, அடிமை ‘விடுதலை’யாக விளம்பரத்திலும், செல்வவான் களிடம் நன்கொடைகளைப் பெறுவதா? அல்லது சுதந்திர ‘விடுதலை’யாக இருப்பதா?
யாரிடமாவது நாம் பணம் வாங்கிவிட்டால், அவர்களுக்கு நாம் அடிமையாக இருக்கவேண் டுமே! அவர்களுக்கு எதிராக நம்மால் பேச முடியாதே!
பத்திரிகை சுதந்திரம் என்பதற்குப் பொருள் என்ன?
தந்தை பெரியார் இப்படி ஒரு சமரசமற்ற போக் கோடு, லட்சியத்தோடு நடத்துகிறார்கள் என்று சொன்னால், இது சாதாரணமானதா என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி வழக்குகள். பத்தாயிரம் ரூபாய் வரையில் ஜாமீன் வருகிறது.
அய்யா அவர்கள், பத்திரிகையை ஆரம்பிக்கும் பொழுது, எப்படி அந்த உணர்வுகளைச் சொல்லுகிறார்கள் என்பதை இளைஞர்களாக இருக்கின்றவர்கள், வரலாறு தெரியாது இருக்கின்றவர்கள் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சமுதாயத்திற்கு என்ன லாபம்?
ஒரு தமிழ் தினசரி, லாபத்திற்காக நடக்கவேண்டும்; வியாபாரத்திற்காக நடக்கவேண்டும். பெரியார் வியா பாரம் நடத்தி பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், அவருக்குள்ள ஆற்றல், திறமை, வியாபாரத்தில் அவருக்குக் கடல் போல் உள்ள அனு பவம் அவற்றை வைத்து கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டியிருப்பார். அதனால், சமுதாயத்திற்கு என்ன லாபம்?
இன்றைக்கு இருப்பதுபோல், அம்பானி, அதானி போன்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பில்கேட் சைத் தாண்டியிருக்கிறார் என்கிற பெருமைதானே மிஞ்சும்.
அதனால், சமுதாயத்திற்கு என்ன லாபம்?
வேண்டுமானால், பி.ஜே.பி.,க்கு லாபம் இருக்கலாம்; ஆர்.எஸ்.எஸ்.சுக்கு லாபம் இருக்கலாம்.
சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு அடித்தளத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு என்ன லாபம்?
கரோனா கொடுந்தொற்றினால் எல்லோரும் அவதிப் பட்ட நேரத்தில், தொழிலாளர்கள் குடிபெயர்ந்த செய்தி வந்த நேரத்தில்கூட, நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர்கள் அதானிகள் என்று செய்திகள் வந்தன. அது அவர்களுக்குப் போய்ச் சேரும்; அவர் களுடைய கஜானாவிற்குப் போய்ச் சேரும்.
‘‘பிச்சைப் புகினும் தொண்டு நன்றே!’’
அதுபோன்று சம்பாதிக்கவேண்டும் என்று பெரியார் நினைத்திருந்தால், சென்றிருக்கலாம்.
ஆனால், ஏன் ஒரு பிச்சைக்காரரைப் போல -
‘‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’’ என்பது பழமொழி;
பெரியார் அதை மாற்றினார்,
‘‘பிச்சைப் புகினும் தொண்டு நன்றே’’ என்று சொன் னார்.
அதில் புத்தரைத் தாண்டியவரானார் பெரியார்.
பிச்சைப் புகினும் தொண்டு நன்றே - அதுவும் சமூகத் தொண்டு - தனக்கென்று இல்லை - பிறருக்கென்று.
தனக்கென வாழா பிறருக்குரியவராக அவர் இருந்து கொண்டு, அதைச் செய்தார்.
‘‘இன்று முதல் ‘விடுதலை’ காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிக்கை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பல வழிகளிலும் முயற்சித்து வந்தேன்.
இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறையை எனது கவ னக்குறைவு என்று குற்றம் சாட்டியும், ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும், வேண்டுகோளும் செய்த வண்ண மாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும், தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத்தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்ட தாலும், அதற்குப் பெருங் காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிகை இல்லாதது என்று உணர்ந் ததாலும், அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து, மற்ற தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும், நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ்டமும், தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றை சமாளிக்கத் தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையின்மீது துணிந்து ஒரு தினசரி தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டு விட்டேன். இதற்கு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் அனுதாபிகளும் ஆதரவளிப்பதாக வாக்களித்ததால் எனது துணிவு சீக்கிரத்தில் என்னை காரியத்தில் இறக்கி அனுபவத்தில் கொண்டுவர அனுகூலமாக்கி விட்டது.’’
ஆகவே, ‘விடுதலை’ போன்ற பத்திரிகைகள் எல்லாம் இந்த முறையில் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் பின்னால் சொல்கிறார்.
நம்மை அறியாமல், கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது
இதைப் பார்க்கும்பொழுது நம்மை அறியாமல், கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.
தந்தை பெரியார் எழுதுகிறார்
அடுத்தகட்டமாக 1946 இல் தந்தை பெரியார் எழுதுகிறார்:
‘‘அடிக்கடி உடல்நிலை தொல்லை கொடுக்க நேரிடு கிறது; இந்தக் காரணங்களால் பெரியாருக்கு அவசரமும், நடப்பு விஷயங்களைப்பற்றி எழுத்து வேலை, கொள் கைகள், திட்டங்கள்பற்றிய கட்டுரைகள், கருத்துகள், சம்பாஷைணைகள் எழுத நேரமும், வசதியும் இல்லாமை என்றாலும், புதிய கருத்துகளையும், அரிய கருத்துகளையும் கொள்ளத் தயங்குவதில்லை என் றாலும், பாமர மக்களை மனதிற்கொள்ளாமல்’’ -
இந்த இடத்தை நன்றாக நீங்கள் கவனிக்கவேண்டும் - ஒரு நாளேட்டைத் தொடங்குவது, பத்திரிகைகளைத் தொடங்குவது, ‘குடிஅரசு’ காலத்திலிருந்து ‘பகுத்தறிவு’, ‘சுயமரியாதை’, ‘புரட்சி’, ‘ரிவோல்ட்’ போன்ற பத்திரிகை களைப் பெரியார் தொடங்கினார்,
பத்திரிகைகளைத் தொடங்குகிறவர், தங்களுடைய அறிவு, ஆற்றல், திறமை, அனுபவம், கனிந்த தெளிவு - ஆகா, இதை எவ்வளவு பிரமாதமாக எழுதியிருக்கிறார் - எவ்வளவு அழகான நடை இருக்கிறது - எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்று அறிவாளிகள் பாராட்டு வதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
ஆனால், அய்யா அவர்கள், சமானியர்களுடைய தலைவர். பாமர மக்களைத் திருத்தவேண்டும் என்பதற் காகவே, தன்னுடைய பொதுத் தொண்டில் அவர் இயங்கியவர்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் சொல் கிறார்கள், தன்னுடைய ‘விடுதலை’எப்படி மாறுபட்ட ஒரு தத்துவம். அன்றைக்கே அது நமக்குக் கொள்கை வயப்பட்டதாக இருக்கிறது.
ஒரு சாசனம் போன்றது!
‘கைடு லைன்ஸ்' - எப்படி பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பத்திரிகையை நடத்தவேண்டும் என்பதற்காக எழுதி வைக்கப்பட்ட ஒரு சாசனம் போன்றதாகும்.
மேலும் பெரியார் தொடருகிறார்:
‘‘வேறு பத்திரிகைகள் நமது இயக்கத்திற்கே இருக் கின்றன என்றாலும், புதிய கருத்துகளையும், அரிய கருத்துகளையும் கொள்ளத் தயங்குவதில்லை என் றாலும், பாமர மக்களை மனதிற்கொள்ளாமல், அறிஞர் களை கவர்ச்சி செய்யும் தன்மையில் விளங்குகிறது. அதுவும் வேண்டியதே என்றாலும், பாமர மக்களிடம்தான் நம் இயக்கத்திற்கு வேலை இருப்பதால், அதை முக்கியமாகவும், அறிஞர்களை அடுத்தபடியாகவும் நினைக்கவேண்டி இருக்கிறது’’ என்றார்.
அழகாகச் சொன்னார் இங்கர்சால், அறியாமைதான் நோய்களிலேயே மிகப்பெரிய நோய்.
அந்த அறியாமையைப்பற்றி சொல்லும்பொழுது, பாமர மக்கள்- அந்தப் பாமர மக்களைத் திருத் தினால்தான், சமுதாயம் விடுதலைப் பெற்றது - விடியலை அடைந்தது என்று அர்த்தமாகும்.
‘‘ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’’ என்று கேட்டார் அல்லவா, அதுதான் அதற்குக் காரணம்.
மேலும் பெரியார் தொடர்கிறார்.
‘‘பாமர மக்களிடம்தான் நம் இயக்கத்திற்கு வேலை இருப்பதால், அதை முக்கியமாகவும், அறிஞர்களை அடுத்தபடியாகவும் நினைக்கவேண்டி இருக்கிறது; என்றாலும், இந்த நிலையை, விடுதலை தினசரி ஏற்பட்டுவிட்டால், அதை கவனிக்க ஆட்கள் எங்கே என்ற பிரச்சினை வந்தாலும், அதையும் தாண்டி, நம் ஆயுதம் விடுதலை என்ற அளவிற்கு வந்திருக்கிறது’’ என்று மிகத் தெளிவான அளவிற்கு இதைக் கொண்டு அதை நடத்திக் கொண்டு வருகிறோம் என்று சிறப்பான வகையிலே ஏராளமான செய்திகளை இங்கே சொல்கிறார்.
நம்முடைய ‘விடுதலை’ தினசரி வெளியாவது என்பது சாதாரணமல்ல; குறைந்த அளவு காகிதக் கோட்டா என - பல சோதனைகள் இருக்கின்றன. இந்தப் பத்திரிகை பரவக்கூடாது என்று நினைக்கிறார்கள். அரசாங்கம் என்னென்ன சூழ்ச்சிகளையெல்லாம் செய் திருக்கின்றது. அச்சிட காகிதத் தாளை கேட்டதைவிட, குறைந்த அளவிற்குக் கொடுத்து, அதற்குமேல் கொடுக்க முடியாது என்று சொன்னது.
நேற்று கவிஞர் அவர்கள், பெரியார் பணத்திற்காக ஏடு நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
விளம்பரம் வேண்டாம் என்று சொன்ன ஓர் ஏடு உண்டா?
எனக்கு விளம்பரம் வேண்டாம் என்று சொன்ன ஓர் ஏடு உண்டா? அதுவும் நட்டத்தில் நடக்கின்ற ஏடு - லாபத்தில் நடைபெறும் ஏடாக இருந்தால்கூட பரவாயில்லை. நட்டத்தில் நடை பெறுகின்ற ஏட்டிற்கு இப்படி சொல்கின்றார் என்றால், இது சாதாரணமானதல்ல நண்பர்களே! இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த வாய்ப்புகளை அதிகமாக எண்ணிப் பார்க்கின்ற பொழுது, அதனுடைய கொள்கை சித்தாந்தங்கள் எப்படி என்பதைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். தன்னுடைய உறுதிப்பாடு.
இந்தக் கொள்கையிலே அவருக்கு எப்படிப்பட்ட உறுதி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தன் னுடைய கொள்கையைச் சொல்லுகிறார். தன்னுடைய பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன என்று சொல்லும் பொழுது, தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லு கிறார்.
முதலில் எடுத்துக்கொண்ட உறுதி - அடுத்தது அவர் எப்படி கஷ்டப்படுகிறார் என்கிற இரண்டு செய்திகளை இன்று எடுத்துச் சொல்கிறேன். ஏனென்றால், கடல் போன்ற செய்திகள் உள்ளன.
பெரியாருடைய எழுத்துகள் எப்படிப்பட்டவை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
பெரியார் ஓர் இலக்கியவாதியா? என்று கேட்டவர்களும் நாட்டில் உண்டு
பெரியார் ஓர் இலக்கியவாதியா? என்று கேட்ட அறிவாளிகள் எல்லாம் நம் நாட்டில் இருக்கிறார்கள்.
1925 இல் பெரியார் எழுதுகிறார் பாருங்கள்:
‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். (எது, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை நீக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு) நினைவு தப்பும் காலம் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன்.’’
என்ன அழகாக இயல்பாக எழுதுகிறார் பாருங்கள். பெரியார் அவர்கள் வார்த்தையைத் தேடிப்போகிறவர் அல்ல. வார்த்தைகள் அவரிடம் போய் வரிசையாக நின்று கொண்டுள்ளன.
‘‘எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும், நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.’’
எவ்வளவு பெரிய முன்னோக்கு - எவ்வளவு பெரிய தொலைநோக்கு!
இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறதா? இல்லையா?
எவ்வளவு பெரிய முன்னோக்கு - எவ்வளவு பெரிய தொலைநோக்கு.
அய்.நா. சபையினுடைய யுனெஸ்கோ மன்ற விருது என்பது சாதாரணமா?
‘‘இதையெல்லாம் செய்ய, சொல்ல நான் யார் என்றால், பலவற்றை படித்தவன் என்றோ, பெரிய பண்டிதன் என்றோ, மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே எடுத்து, மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.’’
1925 இல் சொன்னதை, 1972 ஆம் ஆண்டும், 1973 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் சொன்னார்.
ஆங்கிலத்திலே இரண்டு சொல்வார்கள்.
ஒன்று, concise என்ற வார்த்தை
இன்னொன்று precise என்ற வார்த்தை.
concise என்றால் சுருக்கமாக சொல்வது
precise என்றால், துல்லியமாகச் சொல்வது.
‘‘இது விருதோ, மதிப்போ கிடைக்காது என்று எனக்குத் தெரியும்.’’
தோழர்களே, நாமெல்லாம் பெருமிதப்படவேண்டும். பெரியாரை நம் வழிகாட்டியாக, நம்முடைய தலைவராக, நம்முடைய பேராசானாகக் கொண்டிருக்கின்றோமே, அதைவிட நமக்குப் பேறு வேறு என்ன?
அவருடைய ஏட்டை நம் கையில் கொடுத்திருக் கிறாரே, அந்த ஆயுதம் இருக்கிறதே, அது இப்போது நம் கையில் இருக்கிறதே, நம்மால் முடியும் என்று சொல்லுகின்ற ஆற்றல் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமே -
இதற்குத்தானே சந்தா சேருங்கள் என்று சொல்கிறோம்-
என்னுடைய பெருமைக்காகவா? அல்லது உங் களுடைய செல்வாக்குக்காகவா?
அல்ல நண்பர்களே!
இழிவைத் துடைக்க - இனத்தைக் காக்க!
அறிவு கொளுத்த - அறியாமையை விரட்ட - இழிவைத் துடைக்க - இனத்தைக் காக்க!
‘‘விருதோ, மதிப்போ கிடைக்காது என்று எனக்குத் தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக் கொள்ளவேண்டி இருக்கும். ஒவ்வொரு வரிடமிருந்தும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்று தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சடித்து, நானே படிக்கவேண்டியதாய் இருந்தாலும், பரவாயில்லை.’’
இந்த உறுதிதான், பெரியார் தந்த புத்திதான் என்னை இயக்குகிறது. தோழர்களே, எனக்கு வாழ்நாளில் கிடைத்த பெருமை இதைவிட வேறு என்ன?
இந்தத் தத்துவத்திலே நம்மை ஊற வைத்தாரே - அவருடைய வாழ்நாள் மாணவனாக இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே!
நான் மனிதன் என்று உணருவதற்கும், மனித உரி மைகளுக்காக மற்றவர்களுக்காகப் போராடவேண்டும் என்கிற ஒரு வாய்ப்பு - அந்த பேனா மூலமாக அவர் தந்ததின்மூலமாக, அறிவு என்பதை நிரப்பி, நிரப்பி ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறதே - இதைவிட நமக்கு வேறு என்ன பெரியது? பெருமையா? செல்வமா? பதவியா? வேறு எதைப் பெற முடியும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
‘‘எழுதுவோம் என்றுதான் ஆரம்பித்தேன். நீங்கள் என்னை, என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும், உங்கள் ஒருவர்மீதும் தனிப்பட்ட முறையில், ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ளமாட்டேன்.’’
என்மீது மலத்தை வீசலாம்; என்மீது செருப்பை வீசலாம்; என்னைக் கொச்சைப்படுத்தலாம்!
‘‘என் சமுதாய மக்களே, நீங்கள் என்னை கேவல மாகப் பார்க்கலாம்; என்னைத் தூற்றலாம், என்மீது கல்லை வீசலாம்; என்மீது அழுகிய முட்டை வீசலாம்; என்மீது மலத்தை வீசலாம்; என்மீது செருப்பை வீசலாம்; என்னைக் கொச்சைப்படுத்தலாம்; கேவலப்படுத்தலாம், திருடன் என்று சொல்லலாம், பணத்தை அடித்துக் கொண்டு போகின்றவன் என்று சொல்லலாம்; அல்லது இந்த வயதிலே இவன் திருமணம் செய்துகொண்டான் என்று கொச்சைப்படுத்தி, ஏதோ காம இச்சை உள்ளவன்போல நீங்கள் அறிவு இழந்து பேசலாம்.’’
அடுத்தது ஒரு விளக்கம் - என்ன ஓர் அற்புதமான விளக்கம்.
‘‘வலிக்குமே என்று அஞ்சிக் கொண்டிருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவை சிகிச்சை செய் கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களையெல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் அளவு கடந்து நேசிக்கிறேன்.’’
ஏன் விமர்சிக்கிறேன்? உங்களை நேசிக்கிறேன், ஆகவே நான் உங்களை விமர்சிக்கிறேன்.
தன்னுடைய பிள்ளையை கெட்டுப்போகாதே என்று ஒரு தந்தை கண்டிப்பது தவறா?
தமிழ் மொழி உலக அளவில் உயரவேண்டும் என்பதற்காகத்தான்!
தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொன்னார்?
தமிழ் மொழி உலக அளவில் உயரவேண்டும். போர்க் கருவியாக இருக்கவேண்டும் மொழி. அந்தப் போர்க் கருவிகள் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் ஏவுகணைகள், மிசைல் போன்று இருக்கவேண்டும்.
கவலை, பொறுப்பு, மக்கள்மீது இருக்கின்ற அளவற்ற பாசம்தானே காரணம்.
‘‘உங்கள் ஒவ்வொருவரையும் அளவு கடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்ட விடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்த நேரமும் கவனித்து வருகிறேன்.’’
‘‘பிள்ளைகள் உறங்கும்; தாய் உறங்கமாட்டார்.
ஈக்கள் நுழையாமல், இட்ட களை நடுவு.’’
தாலாட்டில் பாரதிதாசன் சொல்கிறார் பாருங்கள் எவ்வளவு அழகாக.
தாயுமானார், தந்தையுமானார்!
எப்படி ஒரு தாய் உறங்காமல், கண்விழித்துக் கொண்டு பார்க்கிறார்களோ, அதுபோன்று இவர் ஈரோட்டுத் தாய் - கொள்கைத் தாய் - இலட்சியத்தை நமக்கெல்லாம் வழங்கிக் கொண்டு - நம்முடைய மான வாழ்வுக்கும், உரிமை வாழ்வுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்தத் தாய் - அந்தத் தாய்மை உணர்வோடு - தந்தையாகி நின்று, தாயுமானார், தந்தையுமானார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு.
‘‘தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்ட விடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்த நேரமும் கவனித்து வருகிறேன்.’’
ஒவ்வொரு சொல்லையும் அப்படியே எழுதி வைக்கவேண்டும். பெரியார் திடலில், இந்தப் பகுதியை பதிவு செய்து வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
அதற்கடுத்து சொல்கிறார்,
‘‘நாக்கில் தழும்பேறும் வரையிலும் உங்களுக்காகப் பேசுகிறேன். கை சாய்ந்து தொங்கும் வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும் வரை, உங்கள் பட்டிதொட்டிகளெல்லாம் நான் நடப்பேன். எனக்கு உண்மை என்று நான் நம்புவதைப்போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று உங்களுக்குப் பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைக் காக்க போராடுங்கள்.’’
என்று அவர்கள் வேகமாக பேசிய பேச்சு இருக் கிறதே, அது சாதாரணமானதல்ல.
பரந்து விரிந்த கடலிலே முத்துக்களை எடுப்பதைப்போல...
எனவேதான், இந்தக் கருத்தை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! பரந்து விரிந்த கடலிலே முத்துக்களை எடுப்பதைப்போல, கருத்துகளை எடுத்துச் சொல்லும்பொழுது, அளவீட்டிற் குள்ளே இதைச் சொல்லியிருக்கிறேன்.
தங்கள் கருத்துகளை கேட்போரும், வாசிப்போரும் ஏற்கவேண்டும் என்று இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் நமக்குக் கட்டளையிடவில்லை.
புத்தம் என்பது மதமல்ல - அது நெறி!
நம்பித்தான் தீரவேண்டும், இது வேத வாக்கு - கேள்வி கேட்கக்கூடாது - கேட்டால் நரகத்திற்குப் போவீர்கள் - நம்பு, நம்பு என்று சொல்வதுதானே மதம் - இதுதானே ஆன்மிகம் - இதுதானே மிகப்பெரிய அளவிற்கு இருக்கக்கூடிய சனாதனம். சனாதனத்திலே கேள்வி கேட்க இடம் உண்டா? மதங்களில் கேள்வி கேட்பதற்கு இடம் உண்டா?
புத்தம் என்பதில்தான் விதி விலக்கு. புத்தம் என்பது மதமல்ல - அது நெறி.
அய்யா அந்த சுதந்திரத்தைக் கொடுக்கிறார், எழுதும் பொழுது-
நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்; தள்ளலாம் - உங்களுக்கு முழு உரிமை உண்டு!
‘‘நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்கு சுதந்திர நினைப்பு; சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி, அதை உங்கள்முன் சமர்ப்பிக்கின்றேன். என் எழுத்துமூலம், என் பேச்சுமூலம் சமர்ப்பிக்கின்றேன். அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்; தள்ளலாம் - உங்களுக்கு முழு உரிமை உண்டு.
நீங்கள் என்னைப் போலவே, உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவ உணர்ச்சி ஆகியவைகளால் பரி சீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளி விடுங்கள் என்கிற நிபந்தனை யின் பேரில்தான் எதையும் தெரிவிக்கிறேன். இதற்கு இடம் கொடுக்கவில்லையானால், அது நியாயமும், ஒழுங்கும் ஆகாது.’’
இதுதான் இந்தக் கொள்கை!
இதற்குத்தான் திராவிட ஏடுகள் இருக்கின்றன -
இதற்குத்தான் விடுதலை இருக்கிறது.
இல்லந்தோறும் விடுதலை -
உள்ளந்தோறும் பெரியார்!
எனவேதான்,
இல்லந்தோறும் விடுதலை -உள்ளந்தோறும் பெரியார்!
அதுதான் நம்மை மான வாழ்விற்கு அழைத்துச் செல்லும்!
உரிமை வாழ்விற்கு நம்மை உயர்த்தும்!
அதுதான் நம்மை மனிதர்களாக்கும்!
விடுதலை காகிதம் அல்ல -
ஆயுதம் - அறிவாயுதம்!
எனவே, நீங்கள் மனிதர்களாக ஆகவேண்டாமா?
அப்படியானால், விடுதலையைப் படியுங்கள் -
விடுதலையைப் படிக்க வையுங்கள்!
விடுதலை காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம்!
வாழ்க பெரியார்!
வளர்க விடுதலை!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment