ஆசிரியர் உருவாக்கிய பேனாப் பட்டாளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

ஆசிரியர் உருவாக்கிய பேனாப் பட்டாளம்

 கருஞ்சட்டை இளைஞர்கள் திரண்டி ருக்கிறார்கள். சமூக விடுதலைக்கான உறுதி மொழியை ஏற்கிறார்கள். அரசியலுக்கு வருவதற்கு ஆதாயம் பார்க்கும் கூட்டங்களுக்கு நடுவே, பகுத்தறிவுக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் உணர்வுடன் இப்படியொரு இளைய பட்டாளம் அரியலூரில் திரண்டிருந்ததைப் பார்த்து தமிழ்நாடு வியப்படைகிறது. டில்லிக்கும் அதன் கிளைகளுக்கும் வியர்க்கிறது

அந்தக் கருஞ்சட்டைப் பட்டாளத்தின் இளைஞர்களிலேயே இளைஞராகத் தெரிகிறார் திராவிடர் கழகத் தலைவர்-தமிழர் தலைவர் ஆசிரியர். ஆம்... உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியரான அவரின் சிந்தனை முதிர்ச்சி மிக்க எழுத்துகளைச் செயல்வடிவமாக்குவதில் அவர் எப்போதும் 20 வயது இளைஞர்களுக்கான வேகத்துடன்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். முழுநேர பத்திரிகை ஆசிரியர்களே ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஓய்வுபெற்றுவிடும் நிலையில், அரசியல் களத்தை இயக்கக்கூடிய ஆற்றல் கொண்ட சமூக சீர்திருத்த இயக்கத்தின் தலைவரை ‘ஆசிரியர்’ என்றே அனைவரும் அழைக்கின்ற பெருமை வேறு எவருக்கும் வாய்க்காது.

அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் ஒன்று, விடுதலை நாளேட்டிற்கு சந்தா வழங்குவதாகும். திராவிடர் கழகத் தலைவராகவும் விடுதலையின் ஆசிரியராகவும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத வகையில், சமூக விடுதலை எனும் இலக்கின் குறி தவறாத இரட்டைக் குழல் துப்பாக்கியாகத் திகழ்கிறார் ஆசிரியர் அய்யா அவர்கள்,

தந்தை பெரியாரின் விடுதலை நாளேட்டில் அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்திருக்கிறார். ஈரோட்டில் உள்ள பெரியார் மாளிகையில் ஒரு சிறு பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து, அந்தச் சிறுபகுதியிலும் ஒரு பகுதியை நூலகம் போல அமைத்துக் கொண்டு கருத்துச் செறிவும் கரும்பைப் போன்றத் தமிழ்ச் சுவையும் கொண்ட படைப்புகளை அவர் தந்தார். ஆரியக் கோட்டை ஆட்டம் கண்டது. குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஆசிரியராக இருந்தபோது, மவுண்ட் ரோடு மகா விஷ்ணுக்கள் அலறும் வகையில் குத்தீட்டி எழுத்துகள் வெளிப்பட்டன.

பத்து வயதிலேயே மேடையேறி, பகுத்த றிவுக் கருத்துகளை முழங்கி திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அறிஞர் அண்ணா உள்ளிட்டவர்களால் பாராட்டப்பட்ட சிறுவன் வீரமணி, சட்டப் படிப்பு பயின்று, வழக்குரைஞர் பட்டம் பெற்று பதிவு செய்தபிறகு, தந்தை பெரியாரின் ஆணைக்கிணங்க விடுதலை நாளேட்டில் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். பெரியார், மணியம்மையார் ஆகியோர் இயக்கத் திற்குத் தலைமை தாங்கிய போது, களப் பணியிலும் கருத்துப் பணியிலும் தளபதியாக விளங்கியவர் ஆசிரியர். பின்னர், இயக்கத்தைத் தோளில் சுமக்கின்ற பொறுப்பு அமைந்தபிறகு, ஆசிரியர் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு இரண்டையும் சிறப்பாகச் செய்து வருகிறார். 'டபுள் இன்ஜின்' என்று இந்துத்துவவாதிகள் இப்போது திடீர் அரசியல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் செயல்படுத்தி வருகிறார்.

‘விடுதலை’ இலட்சங்களில் விற்பனை யாகும் ஏடல்ல. இலட்சியங்களைக் கொண்டு சேர்க்கும் ஏடு என்பதுதான் ஆசிரியர் எப்போதும் சொல்லும் வார்த் தைகள். இலட்சியங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு, இலட்சக்கணக்கில் இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கான படிகளாவது விற்பனையாக வேண்டும். அந்தப் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று திராவிடர் கழகத்தின் பெரியார் பெருந்தொண்டர்கள் முதல் இருபால் இளைஞர்கள், மாணவர்கள் வரை அனைவரும் ஆண்டுக் கட்டணம் (சந்தா) சேர்ப்பதை ஓர் இயக்கமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் தான் தலைமுறைகள் கடந்தாலும் விடுதலையின் பகுத்தறிவு-இனமான முழக்கம் ஓயாமல் ஒலிக்கிறது. தமிழர்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துகிறது.

கழகத் தலைவர்-விடுதலை ஆசிரியர் என்ற இரு பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்ட பிறகு, இயக்கம் கண்ட களங்களில் எல்லாம் விடுதலையும் போர்வாளாக-பீரங்கியாக-ஏவுகணையாக-புதிய வடிவிலான கருத்தாயுதமாகச் செயல்பட்டே வந்திருக்கிறது. மண்டல் ஆணையம் என்பது என்ன என்பதையும் அதை நிறைவேற்றுவதற்கான போராட் டத்தையும் முன்னெடுத்தது விடுதலை. இலங்கை இனப் பிரச்சினையின்போது போராளிகளுக்கு இணையான உணர்வுமிக்க கருத்தாயுதமாக விளங்கியது விடுதலை. ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்க முற்படும் போதெல்லாம் தார்ச் சட்டிகள் தயாராகட்டும் என களத்தை உருவாக்கும் முன்களப் பணியாளராகச் செயல்பட்டது விடுதலை. ஆரிய ஆதிக்கத்தின் பீடமாக இருந்த காஞ்சி சங்கர மடம் முதல் போலி மந்திரவாதிகள் வரை அத்தனை பேரின் ஒப்பனை வேடங்களைக் கலைத்து உண்மை உருவத்தை வெளிப்படுத்தியது விடுதலை. சனாதன-வருணாசிரமத்திற்கு எதிராகவும் பார்ப்பனிய விஷத்தன்மையை முறியடிக்கும் பகுத்தறிவு மருந்தாகவும் விளங்குவது விடுதலை, சமூக நீதிப் போர்க்களத்தின் சமரசமில்லாத போராளி விடுதலை.

ஆசிரியராக திராவிடர் கழகத் தலைவர் ‘மானமிகு’, ‘வாழ்விணையர்’ போன்ற சொற்சேர்க்கைகளை தமிழுக்குத் தந்திருக்கிறார். இன்று அந்தச் சொற்கள் எல்லாத் தரப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. மாண்புமிகு என்ற மரியாதை வரும் போகும். மானமிகு என்பதே நிரந்தரமானது என்பதை ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்றது ஆசிரியருக்கு அவரது கொள்கை அண்ணனிடமிருந்து கிடைத்த அங்கீகாரம். அதுபோலவே, வாழ்விணையர் என்னும் சொல் இல்லற வாழ்வைத் தொடங்கும் ஆண்-பெண் ஆகியோரின் சமத்துவத்தையும் சம உரிமைகளையும் வலியுறுத்தும் சொல்லாக இருப்பதால், life partner, better half போன்ற ஆங்கிலச் சொற்களையும் கடந்த அர்த்தம் பொதிந்த தமிழ்ச் சொல்லாக அமைந்துள்ளது. இளைய தலைமுறையினரிடம் இந்தச் சொல் வெகுவாகப் புழங்கப்படுவதை நேரில் காண முடிகிறது.

‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் அனுபவம் கலந்த அறிவுரைகளாக ஆசிரியர் எழுதிய கட்டுரைகளும் அவை தொகுப்புகளாக வெளிவந்திருப்பதும் இளைய தலைமுறைக்கான நல்வாழ்வு வழிகாட்டி. ‘பக்தி என்பது பொதுச் சொத்து; ஒழுக்கம் என்பது தனிச்சொத்து. பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்’ என்ற பெரியாரின் கூற்றுக்கு இணங்க, இளைய தலைமுறை மூடநம்பிக்கையிலிருந்தும் விடுபட வேண்டும், போதைப் பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனங்களில் இருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதை ஆசிரியர் தனது எழுத்துகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிற நமது அரசியல் சாசனத்தை எடுத்துக்காட்டி, அது குறித்த பரப்புரையை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இளையதலைமுறையினர் இணைய தளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அறிவியல் அடிப்படையிலான செய்தி களையும் தீர்வுகளையும் முன்வைத்து படைப்புகளை வழங்கி வருகின்றனர். ஆசிரியரின் தாக்கத்தை அத்தகைய இளைய பட்டாளத்திடம் காண முடிகிறது. விடுதலை ஆசிரியர் குழுவில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை பலரது எழுத்தாற்றலையும் படிக்கின்ற போது, ஓர் ஆசிரியராக அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கியிருக்கிற பேனாப் பட்டாளத்தின் வலிமை தெரிகிறது.

ஒற்றைப் பத்தி, பெட்டிச் செய்தி, மொழியாக்கக் கட்டுரைகள், ஆசிரியர் மற்றும் கழக முன்னோடிகளின் உரைகள், பெரியார் பெருந்தொண்டர்களின் பங்களிப்பு, சமூக நீதி சார்ந்தவர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களின் செயல்களை வெளியிட்டுச் சிறப்பிப்பது, ஞாயிறு மலரில் வெளியாகும் ஆசிரியரின் கேள்வி-பதில்கள், ‘விடுதலை’யிலிருந்து பிறந்த ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ உள்ளிட்ட இதழ்களின் படைப்புகள் என எல்லாவற்றிலும் ஆசிரியர் அவர்களின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஆசிரியரிடம் மாண வர்கள் கற்றுக் கொள்வது இயல்பு. விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியரிடம் பேராசிரியர்களும் பெரும் ஆராய்ச்சியாளர்களும்கூட நாள்தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

வெளியூர் நிகழ்ச்சிகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எங்கே இருந்தாலும் ‘விடுதலை’ ஆசிரியராகவே அவர் இருக்கிறார். விடுதலையை தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கேற்ற வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பே மின்னிதழாக வெளியிடச் செய்ததுடன், எந்த இடத்தில் இருந்தாலும் நேரடியான அச்சுத் தாள்களைப் பார்வையிட்டோ, கணினி வழியாகவோ மெய்ப்புப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கழக நிகழ்ச்சி மேடைகளில்கூட அவர் விடுதலை ஆசிரியராக, பக்கங்களைச் சரிபார்த்து அனுப்புவதை பெரியார் திடலில் பல முறை காண முடிந்திருக்கிறது.

பெரியாரை உலகமயப்படுத்தும் உயர்ந்த இலக்குடன் பயணம்  செய்யும் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அதற்கான கருத்தாயுதமாக விடுதலையைக் கையாள்கிறார். அவர் நூறாண்டு கடந்து வாழ்ந்திட வேண்டும். விடுதலையின் ஆசிரியராகத் தொடர்ந்திட வேண்டும்.

No comments:

Post a Comment