திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்! அத்தீர்மானங்கள் எல்லாம் ‘விடுதலை’யில் பகிரப்படுகின்ற கருத்துகளையொட்டித்தான் இருக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்! அத்தீர்மானங்கள் எல்லாம் ‘விடுதலை’யில் பகிரப்படுகின்ற கருத்துகளையொட்டித்தான் இருக்கும்!

எங்களை நாங்கள் பட்டைத் தீட்டிக் கொள்வதற்குக் காரணமாக இருக்கக்கூடியவர் ஆசிரியர் அய்யாதான்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சியுரை

சேலம், ஆக. 27  திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்; முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்து. அந்தத் தீர்மானங்கள் எல்லாம் எதையொட்டி இருக்கும் என்று சொன்னால், ‘விடுதலை’யில் பகிரப்படுகின்ற கருத்து களையொட்டித்தான் அதிகப்படியான தீர்மானங்கள் இருக்கும்;  எங்களை நாங்கள் பட்டைத் தீட்டிக் கொள்வதற்குக் காரணமாக இருக்கக்கூடியவர் ஆசிரியர் அய்யாதான் என்றார்  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். 

பெரியார் பெருந்தொண்டர் தங்கவேலு நூற்றாண்டு விழா

கடந்த 14.8.2022  அன்று  சேலம் ஆத்தூரில் நடை பெற்ற பெரியார் பெருந்தொண்டர்  தங்கவேலு அவர் களின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

உணர்ச்சிகரமான விழா!

அனைவருக்கும் வணக்கம்.

மிக உணர்ச்சிகரமான விழா - பெரியார் பெருந் தொண்டர் தங்கவேலு அவர்களுடைய நூற்றாண்டு விழா.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே,

எனக்கு முன்பு உரையாற்றி அமர்ந்திருக்கின்ற அன்புச் சகோதரர் மதிமாறன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒன்றியக் கழக, நகரக் கழக செய லாளர்களே, ஒன்றிய பெருந்தலைவர்களே, அனைத்து சான்றோர் பெருமக்களுக்கும், எதிரே அமர்ந்திருக்கின்ற பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும், பத்திரிகைத் துறை, ஊடகத் துறையைச் சார்ந்த அன்பு சகோதரர் களுக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கம்மாள் அம்மையாரின் படத்தைத் திறக்கச் சொன்ன ஆசிரியர் அய்யா!

முதலாவதாக, நம்முடைய திராவிடப் புரட்சிப் பெண் ணாக கருதப்படுகின்ற அங்கம்மாள் அம்மையாருடைய உருவப் படத்தினை திறக்கவேண்டும் என்று சொன்ன பொழுது, ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார்கள், ‘‘நீங்கள்தான் கயிறைப் பிடித்து, இழுத்துத் திறக்க வேண்டும்‘‘ என்று சொன்னார்கள்.

அந்த ஒளிப்படத்தை நான் திறக்கும்பொழுது, அங்கம்மாள் அவர்கள் என்னை உற்று நோக்கிப் பார்ப்பதுபோன்ற ஓர் உணர்வை நான் பெற்றேன்.

மறைந்த பிறகு, வாழ்க்கை இருக்கிறதா? இல்லையா? என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன என்று சொன்னாலும், ஒருவேளை அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொன்னால், அங்கம்மாள் அவர்கள் எங்கிருந்தாலும், நான் பெருமையோடு சொல்வேன், ‘‘உங்களுடைய திருவுருவப் படத்தைத் திறந்தவன் வேறு யாருமல்ல - ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்வதுபோல, தந்தை பெரியாருடைய செல்லப் பிள்ளையாக இருந்த அன்பில் அவர்களுடைய பேரனாகிய நான்தான் உங்களுடைய உருவப் படத்தி னைத் திறந்து வைத்திருக்கிறேன்’’ என்பதைப் பெருமை யோடு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டு இருக் கின்றேன்.

திராவிடர் கழக மேடை - பல கருத்துகளை உள்வாங்கக் கூடிய ஒரு மேடை!

திராவிடர் கழக மேடை என்பது, பல கருத்து களை உள்வாங்கக் கூடிய ஒரு மேடை. இங்கே உரையாற்றிய நம் அன்புச் சகோதரர் உரையாற் றும்பொழுது, யாரும் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; தயவு செய்து என்னுடைய கருத்து களைக் கேளுங்கள்; அதற்கான மேடைதான் இது என்று சொல்லும்பொழுது, மேடையில் இருக்கின்ற நாங்கள், எந்தப் பொறுப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும், எங்கள்மீது விழுகின்ற விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அது உங்கள்மீது விழுகின்ற விமர்சனங்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தக்க பதிலடி கொடுக்கின்ற இயக்கம் - திராவிடர் கழகம்!

இங்கே உரையாற்றுகின்ற தோழிகளாக இருந்தாலும், தோழர்களாக இருந்தாலும், நாங்கள் இருக்கின்ற இடத்தில் நீங்கள் அமர்ந்தாலும், நம்மைத் தேடித் தேடி விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் என்றைக் குமே இருந்துகொண்டுதான் இருக்கும்.

அந்தக் கூட்டத்திற்கு தக்க பதிலடி சொல்லுகின்ற முதல் இயக்கம் எந்த இயக்கம் என்று சொன்னால், அது திராவிடர் கழகம்தான்.

‘விடுதலை’யில் பகிரப்படுகின்ற கருத்துகள்தான் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்!

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்; முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்து. அந்தத் தீர்மானங்கள் எல்லாம் எதையொட்டி இருக்கும் என்று சொன்னால், ‘விடுதலை’யில் பகிரப்படுகின்ற கருத்துகளையொட்டிதான் அதிகப்படியான தீர்மானங்கள் இருக்கும்.

இன்றைக்கும் அதை தொடர்ந்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய வழியில், இன்றைக்கு நல் லாட்சி புரிந்துகொண்டிருக்கின்ற, இயக்கத்தை சிறப்புற நடத்திக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், கூறுவது போன்று என்னுடைய ‘ரெபரன்ஸ் புக்’ யார் என்று பார்த்தீர்களேயானால், திராவிடர் கழகத்தினுடைய புக்தான்.

அந்த வகையில்தான், இன்றைக்கு இந்த மேடையிலே நான் பெருமையோடு நின்று கொண்டிருக்கின்றேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் சொன்னதைப்போல, இந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கின்றவர்கள் அதிகமா னோர் இன்றைக்கும் ஆசிரியர் பணியைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார். துறையின் சார்பாகவும் நான் இந்த விழாவில் கலந்துகொண் டிருக்கின்றேன் என்கின்ற பெருமையை இந்த நேரத்தில் பறைசாற்ற நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

தங்கவேலு அய்யா அவர்களைப் பார்க்கின்றபொழுது, பெரியாருடைய தொண்டராக அவர் பணியாற்றி இருக் கலாம்; அவர் மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து, இன் றைக்கு இருக்கின்ற அவருடைய கொள்ளுப் பேரன்கள் வரை - பெரியாருடைய கொள்கையை இன் றைக்குத் தாங்கிப் பிடிக்கின்ற அளவிற்கு, ஒரு கொள்கைப் பிடிப்பு, கொள்கைவாதியாக அவர் வாழ்ந்து வருபவர்.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றித்தான் நடக்கக் கூடியவர்கள்

நூறு வயது என்று சொல்வது எங்களைப் பொறுத்தவரைக்கும், மிகக் குறுகிய காலமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை யில், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், பெரியாரு டைய கொள்கைகளைப் பின்பற்றித்தான் நடக்கக் கூடியவர்களாகத்தான் நாங்கள் இருப்போம் என்று சொல்லும்பொழுது, அதில் ஒரு சிறிய பகுதிதான் இந்த நூறு வயது என்பது.

தங்கவேல் அய்யா அவர்களைப் பார்க்கும்பொழுது நூறு வயது ஆனது போன்றே தெரியவில்லை; மிகவும் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுடைய பயணம்தான் நின்றிருக்கின்றதே தவிர, அவருடைய பயணத்தில் பங்கு பெற்றிருக்கின்ற, தந்தை பெரியாருக்கு உற்ற துணையாக இருந்த ஆசிரியர் அய்யா அவர்கள், இன்றைக்கும் பார்த்தீர்களேயானால், அவர் அதைச் சொல்லும்பொழுது, எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது - ‘‘தஞ்சாவூரி லிருந்து வருகிறோம் தம்பி, அப்படி வரும்பொழுது, நடுவில் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வருகி றோம்; இவ்விழாவில் பங்கேற்றுவிட்டு, அடுத்ததாக திருப்பூருக்குச் செல்லவேண்டும்’’ என்று சொன்ன பொழுது, நான் வியந்து போனேன்.

எல்லோருமே இளைஞர்களாகவே இருக்கின்றீர்கள். மேடையில் இருக்கின்றவர்களுக்கு வயது ஆகிவிட்டது என்று சொல்லவே முடியாது.

என் மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தேன்!

102 வயது அய்யா அவர்கள், நூறு வயது தங்கவேல் அய்யா அவர்களுக்கு சால்வை போர்த்தியதைப் பார்த்த பொழுது, என் மனதில் ஓடிய ஓட்டம் ஒன்றே ஒன்றுதான் - கலைஞருடைய பேரன் உதயநிதி ஸ்டாலின்; அன் பிலுடைய பேரன் அன்பில் மகேஸ் - இதுபோன்று 102 வயது, 100 வயது வரைக்கும் தந்தை பெரியாருடைய கொள்கையை கையில் தாங்கி, இதுபோன்ற ஒரு மேடை யில், அதுவும் திராவிடர் கழக மேடையில் ஒருவருக் கொருவர், சால்வையைப் போர்த்துகின்ற அந்த நாளை என் மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தேன்.

இவை அனைத்துமே பார்த்தீர்களேயானால், ஏதோ ஒரு பொறுப்பிற்காகவோ, ஒரு பதவிக்காகவோ அல்ல. இந்தக் கொள்கை எங்கே இருந்து வந்தது?

நான் ஈரோட்டு மாநாட்டில் பேசிய அந்தப் பேச்சுதான் என் ஞாபகத்திற்கு வருகின்றது.

தோளில் துண்டு போட முடியாது - இடுப்பில்தான் கட்டவேண்டும்; அல்லது கக்கத்தில் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது; வயதில் பெரியவர்களாக இருப்பார்கள், ஆனால், அன்றைக்கு இருந்த ஒரு சமுதாயம் அவர்களை எப்படி கூப்பிட்டது என்றால், ‘‘வாடா சுப்பா, வாடா குப்பா’’ என்பார்கள். 

பொன்னாடையை போர்த்திய- சுயமரியாதையைப் போர்த்திய மேடை - திராவிடர் கழக மேடை!

ஆனால், இந்தத் திராவிடர் கழக மேடைதான், எங்களுடைய மரியாதைக்குரிய சுப்பன் அவர்களே, எங்கள் மரியாதைக்குரிய குப்பன் அவர்களே என்று பொன்னாடையை போர்த்தியது - சுயமரியாதையைப் போர்த்திய மேடை இந்தத் திராவிடர் கழக மேடை என்று ஈரோட்டு மாநாட்டில் பேசியதுதான் என்னுடைய நினைவிற்கு வந்தது.

தங்கவேல் அய்யா அவர்களைப்பற்றி நாம் நிறைய சொல்லலாம். இதே ஆத்தூரில் தந்தை பெரியார் அவர்கள் இரண்டு மணிநேரம் பேசியிருக்கிறார். ஒடுக் கப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய உரிமைகளுக் காக உரையாற்றி முடிக்கும்பொழுது, கடைசியாக அவர் என்ன சொன்னார் என்றால், ‘‘நானே சொன்னாலும் நம்பாதே, நீயே சிந்தித்துப் பார்!’’ என்று சொன்ன அந்த வாக்கியம்தான் - அய்யா எஸ்.வி.டி. அவர்களை பெரியா ருடைய தொண்டனாக மாற்றியது என்பதை அறியும் பொழுது, எப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்போடு அய்யா எஸ்.வி.டி.  அவர்கள் இன்றைக்கும் வாழ்ந்து கொண் டிருக்கின்றார் - நமக்கெல்லாம் ஒரு பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இதையெல் லாம் ஓர் எடுத்துக்காட்டாக நான் பார்க்கின்றேன்.

மதிமாறன் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டுச் சொன் னார்கள், நேற்று நடந்த நிகழ்வுபற்றி. அமைச்சராக இருப்பதால், நாகரிகமாக பேசவேண்டும் என்று எங்க ளுடைய தலைவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக் கின்றார்.

திராவிடர் கழகத்துக்காரர்களைப்பற்றி திராவிட முன் னேற்றக் கழகத்துக்காரர்களிடம் கேளுங்கள்; திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்களைப்பற்றி திராவிடர் கழகத்துக்காரர்களிடம் கேளுங்கள்.

எதையும் தாங்குகின்ற இதயம் என்று அண்ணா அவர்கள் சொன்னதற்குக் காரணமே தந்தை பெரியார்தான்!

இன்றைக்கு எதையும் தாங்கும் இதயமாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகவும் கண் ணியத்தோடு ஓர் அரசியல் நடத்தவேண்டும் என்று நினைக்கின்றார். அந்தக் கண்ணியத்தைக் காக்கக்கூடிய வர்களாக, மாண்புமிகு அமைச்சர்களாக நாங்கள் எல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னாலும், எதையும் தாங்கும் இதயம் பேரறிஞர் அண்ணாவிடமிருந்து எங்களுக்கெல்லாம் வந்தது என்று சொன்னால், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எங்கே இருந்தது வந்தது தெரியுமா? எதையும் தாங்கு கின்ற இதயம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதற்குக் காரணமே தந்தை பெரியார்தான்!

தந்தை பெரியார் அவர்களுடைய 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை மலரில்’ பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து இதை நான் சொல்லுகிறேன்.

தமிழ்நாட்டில் பகுத்தறிவு அதிகம்; விதை போட்டது தந்தை பெரியார்!

ஆகவே, அப்படி நாங்கள் ஒரு கண்ணிய அரசி யலை நடத்தவேண்டும் என்று நினைக்கின்றோம். 

தயவு செய்து, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் போன்று நினைக்கவேண்டாம்; இங்கே பகுத்தறிவு அதிகம்; விதை போட்டது தந்தை பெரியார்.

பெரியார் என்பவர் புரட்சிகரமான கருத்துகள் பூத்துக் குலுங்குகின்ற பூங்கா

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொல்லும் பொழுது, ‘‘பெரியார் என்பவர் புரட்சிகரமான கருத்துகள் பூத்துக் குலுங்குகின்ற பூங்கா; அங்கே மலர்கின்ற மலர்களுக்கு வெறும் மணம் மட்டும் வீசாது; அங்கே பூக்கின்ற மலர்கள் ஒவ்வொன்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருக்கும்’’ என்று சொன்னார்.

‘‘நம்முடைய எஸ்.வி.டி. அய்யா போன்ற மலர்கள் எல்லாம் மருத்துவக் குணம் உள்ளதாக - சமூகநீதியைக் காக்கக்கூடிய மருந்தாக அந்த மலர்கள் இருக்கும் என்பதில் எந்தவொரு மாறுபாடும் இருக்காது. ஏனென் றால், அய்யா அவர்கள் பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றி வந்தவர்.

அந்த வகையில்தான், இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திராவிட இயக்க கொள்கையைச் சார்ந்துதான் அவருடைய திட்டங்கள் அதிகம் இருக்கும். எங்களுக்கும் அந்த ஊக்கத்தைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருப்பவர்.

இங்கே மதிமாறன் அவர்கள் சொன்னதுபோல, பள்ளிக் கல்வித் துறை என்பது மிகவும் சென்சிட்டிவான டிபார்ட்மெண்ட் - ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், முதன்முதலில் எனக்கு அறிக்கையை அனுப்புபவர்கள் யார் என்றால், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களும், அவருடைய புதல்வர் அவர்களும் உடனடியாக வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுவார்கள்.

எங்களை நாங்கள் பட்டைத் தீட்டிக் கொள்வதற்குக் காரணமாக இருக்கக்கூடியவர் ஆசிரியர் அய்யாதான்!

அதைப் பார்த்து, எந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு, எங்களை நாங்கள் பட்டைத் தீட்டிக் கொள்வதற்குக் காரணமாக இருக்கக் கூடியவர் ஆசிரியர் அய்யா அவர்கள்தான்.

ஆசிரியர் அய்யா அவர்களே, தொடர்ந்து உங்களு டைய வழிகாட்டுதல்கள் எங்களுக்குக் கிடைப்பதற்கு நீங்கள் வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அங்கம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம்!

மேடையில் இருக்கின்ற அய்யா எஸ்.வி.டி. அவர்கள், இதுவரையில் என்ன காரியம் செய்திருக்கின்றாரோ, இன்றைக்கும் அவர் இளைஞர்தான். அந்தக் கொள்கை தீபத்தை நாம் தாங்கிக் கொள்கின்ற நிகழ்வாக இந்த நிகழ்வை நாம் பார்க்கவேண்டும் என்று சொல்லி, அங் கம்மாள் அவர்களுக்கு நம்முடைய வீர வணக்கத்தைச் செலுத்துவோம்.

எஸ்.வி.டி. அய்யா அவர்களுக்கு என்றைக்குமே அந்தப் புகழ் வணக்கத்தை செலுத்துவோம் என்று சொல்லி, வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைச் சொல்லி, என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார்..

No comments:

Post a Comment