மக்கள் பணத்தை தொழில் தொடங்க கடனாக கொடுத்து விட்டு நாட்டை பெரும் ஆபத்தில் தள்ளி விடுகிறார் பிரதமர் மோடி.
இந்தியாவில் ஒட்டு மொத்த துறைமுகங்கள், விமான நிலையங்கள், அனைத்தும் அதானிக்குத் தாரை வார்த்தாகி விட்டது. ஒரு காலத்தில் மொத்தமாக எண்ணெய் வாங்கி ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்றுவந்த கவுதம் அதானி மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உலகின் 217 ஆவது பணக்காரராக இருந்தவர்; இப்போதோ உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பணக்காரர் ஆகி விட்டார்.
இவரின் அதானி குழுமம் மின் உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலையங்கள், எரிவாயு, பசுமை மின் ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அதானி பல துறைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றால் இவராக உருவாக்குவது இல்லை, அரசு நிறுவனங்கள் - ஏற்கெனவே இயங்கிக் கொண்டு இருக்கும் நிறுவனங்களை வாங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனங்களை வாங்குவதற்கான நிதியை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக தொடர்ந்து பெற்று வருகிறார்.
இந்நிலையில், கிரெடிட் சைட்ஸ் என்ற நிறுவனம், அதானி குழுமத்தின் கடன் தொகை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குழுமம் பிற நிறுவனங்களை விலைக்கு வாங்குவதில் அதிவேகமாக செயல்படுகிறது. அதனால் பெரும் கடன் சுமையில் அந்நிறுவனம் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்றைய தேதிக்கு அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு இரண்டு லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்; குழும நிறுவனங்களிடம் உள்ள ரொக்க தொகையை கணக்கிட்டாலும், அதானி குழும நிறுவனங்களின் கடன் தொகை ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்கிறது கிரெடிட் சைட்ஸ் அறிக்கை.
தொழில் துறை வட்டாரங்களில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களாலும் அதிகம் கவனிக்கப்படுவது, கவுதம் அதானியும், அதானி குழுமமும்தான் என்றால் மிகையில்லை. அதோடு அதானி தொடாத துறையே இல்லை, ஏற்கெனவே நடந்துவரும் பிற தொழில் நிறுவனங்களை அப்படியே வளைத்துப் போடுவது - அதானி குழுமத்தின் சாமர்த்தியம். இதற்கு முக்கிய பலமாக இருப்பது மோடியே! 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா சென்றார். அப்போது அதானியை அழைத்துச்சென்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச்சுரங்கத்தை வாங்கித்தரும் இடைத் தரகராக பணியாற்றினார்.
அதுமட்டுமா? அதானிக்கு ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து பெரும் தொகையைக் கடனாக பெற்றுத் தந்தார். அன்றிலிருந்து தொடர்ந்து எந்த நாட்டிற்குப் போனாலும் உடன் அதானி, அம்பானி இருவரின் அதிகாரிகளையும் அழைத்துச்செல்ல தவறுவதே இல்லை. தென் அமெரிக்காவின் பிரேசில், மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் தொழில் முதலீடுகளை அதானிக்கு அள்ளித்தரும் வகையில் மோடி நடந்து கொண்டார்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையைக் கூட விட்டுவைக்கவில்லை. அந்த அரசுடனும் பேசி அதானிக்கு மின்சார நிறுவனம் தொடங்க ஏற்பாடு செய்துள்ளார் பிரதமர் மோடி. அவரிடமிருந்து மின்சாரம் வாங்க இலங்கை மின்சார வாரியம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஒப்பந்தம் வாங்கித் தந்துள்ளார்.
இந்த நிலையில் அதானி குழுமத்தில் பணப் புழக்கம் கடுமையாக சரிந்துள்ளது. விரைவில் மிகப் பெரிய கடன் பொறியில் அதானி நிறுவனம் சிக்கும். அதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த இந்தியா தான்!
சமீபத்தில் ஒரு தனியார் பொருளாதார கடன் அமைப்பு கண்காணிப்பு நிறுவனம் கொடுத்த புள்ளி விபரம் இந்தி யாவையே அதிரச்செய்துள்ளது.
இந்தியாவில் அனைத்து முன்னணி வங்கிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார் அதானி. போதாக் குறைக்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் வங்கிக்கடன் பெற்று வாங்கிக் குவிக்கிறார்.
சத்யம், வீடியோகான் போன்றவை அனில் அம்பானியின் நிறுவனங்கள்; இதே போல் அகலக்கால் வைத்து ஒன்று மில்லாமல் போய்விட்டது, ஆனால் அது அவர்களின் சொந்தப் பணம்; ஆகையால் இழப்பு அவர்களுக்கு மட்டுமே. ஆனால், அதானியிடம் உள்ள பணம் மக்களின் பணம்; விஜய்மல்லையா, நீரவ்மோடி, மோகுல் சோக்ஷி போன்று இவரும் தனி விமானத்தில் ஏறி தென் அமெரிக்க நாடுகளில் எங்காவது போய் செட்டில் ஆகி விடுவார், ஆனால் மூழ்கிப்போன மக்களின் பணத்தை மீட்கப் போவது யார்?
நடப்பது மோடி - அதானி, அம்பானி கூட்டணி அரசே! மக்களிடம் தேவை எதிர்ப்புணர்வே!!
No comments:
Post a Comment