ஆளுநர் அரசியல் நடத்திட விரும்பினால் அண்ணாமலைக்குப் பதில் கட்சித் தலைவராகட்டும்!
ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு, ஆக.12 'ஆயாராம் - காயாராம்' வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது! ஆளுநர் அரசியல் நடத்திட விரும்பினால் அண்ணாமலைக்குப் பதில் கட்சித் தலைவராகட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கழகக் கலந்துரையாடலில் பங்கேற்க நேற்று (11.8.2022) ஈரோடு சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
'விடுதலை' போன்ற நாளேடுகள் வெறும் காகிதமல்ல; ஓர் ஆயுதம் - அறிவாயுதம்
'விடுதலை' ஏடு, தந்தை பெரியார் அவர்களால் நீதிக் கட்சிக் காலத்திலிருந்து தொடங்கப்பட்டு, தொடர்ந்து 88 ஆம் ஆண்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பகுத்தறிவு நாளேடாகும்.
இந்த நாளேட்டில் நான் ஆசிரியராகப் பொறுப்பேற்று நேற்று (10.8.2022) 60 ஆண்டுகாலம் நிறைவடைந்தது.
இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவேண்டும்; கார்ப்பரேட்டுகளும், காவிகளும் இந்த நாட்டையே மாற்றியமைக்கவேண்டும் என்ற சொல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால், 'விடுதலை' போன்ற நாளேடுகள் வெறும் காகிதமல்ல; அது முற்போக்குச் சிந்தனையுள்ள அனைவரும் இணைந்து உரிமைக் குரல் எழுப்பக்கூடிய ஓர் ஆயுதம் - அறிவாயுதம் ஆகும் என்ற நிலையுள்ளது.
எனவேதான், ஆங்காங்கே 'விடுதலை' சந்தாக்களை ஏராளமாக அனைத்துக் கட்சித் தோழர்களும், முற் போக்காளர்களும் திரட்டித் தருகிறார்கள். அந்த வகையில், இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, அவரவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி யிருக்கின்றோம்.
ஈரோட்டிலிருந்து எங்களுடைய பயணத்தைத் தொடங்கியிருக்கின்றோம்
எங்கே 'விடுதலை' தொடங்கப் பெற்றதோ, அதே நகரமான ஈரோட்டிலிருந்து எங்களுடைய பயணத் தைத் தொடங்கியிருக்கின்றோம்.
இந்தப் பயணங்கள் தொடரும். அந்த வகையிலே, நிச்சயமாக குறிப்பிட்ட தேதியிலே 60 ஆயிரம் சந்தாக்களை வழங்குவார்கள்.
ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அண்மைக் காலத்திலே ஆகிக் கொண்டிருக்கின்றது.
மதச்சார்பற்ற கொள்கை என்ற அரசமைப்புச் சட்ட நெறி காற்றிலே பறக்கவிடப்படுகிறது.
ஆகவேதான், இவற்றையெல்லாம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு வெறும் பொதுக் கூட்டம் மட்டும் போதாது; ஊடகங்களைத் தாண்டி, தனித்தன்மையோடு இந்தச் செய்திகளை, எந்த விளைவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்துச் சொல்லுகின்ற 'விடுதலை' போன்ற ஏடுகள் இங்கே வரவேண்டும். அந்த வகையிலே, அந்தப் பணியை செய்வது - ஒரு பிரச்சார பணி - அந்தப் பணிக்காக நாங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகின்றோம். அது ஈரோட்டில் இன்று தொடங்கி, புதுச்சேரியில் வருகின்ற 16 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.
5ஜியைப்பற்றி விரிவான, விளக்கமான கட்டுரைகள், ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிடுவோம்!
செய்தியாளர்: 5ஜி அலைக்கற்றை குறித்து தங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: 2ஜி அலைக்கற்றை என்பதை வைத்து, வினோத் ராய் என்ற ஒரு ஆடிட்டர் ஜெனரலை வைத்துக்கொண்டு, திட்டமிட்டு அன்றைய யு.பி.ஏ. அரசாங்கத்தைக் கவிழ்க்கவேண்டும்; அதைப்பற்றி மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தைப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் நட்டம் என்று பலரையும் நம்ப வைத்து, அவர்கள் பரப்பினர்.
வெறும் 30 ஆயிரம் மெகாட்ஸ் வாங்கக் கூடிய அளவிற்குத்தான் அன்றைக்கு இருந்தது 2ஜியில்.
இன்றைக்கு 50 ஆயிரம் மெகாட்ஸ் என்று சொல் லக்கூடிய அளவிற்கு, 5ஜி என்ற அளவிற்கு அது வளர்ந்துவிட்டது.
இது எத்தனையோ மடங்கு வந்திருக்க வேண்டிய நேரத்தில், இப்பொழுது அவர்கள் ஏலம் விட்டிருப்பது என்பது இருக்கிறதே, அது மிகமிகக் குறைவானது.
இதைப்பற்றிய விரிவான, விளக்கமான கட்டுரை கள், ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிடவிருக் கின்றோம்.
ஆகவே, இதில் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது ஒரு தவறான அவப்பெயரை உரு வாக்கவேண்டும். திட்டமிட்டே, தோழர் ராசா போன்றவர்களை, கனிமொழி போன்றவர்களை அவர்கள் சிறைச்சாலையில் வைப்பதற்கு, அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவர்கள் விடுதலை செய்த நிலையில்கூட அவதூறு செய் வதைத் தொடர்கின்றனர்.
அந்த வழக்கில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று அத்தனை பேரையும் விடுதலை செய்ததோடு மட்டுமல்ல, அந்த வழக்கில் தீர்ப்பு எழுதிய நீதிபதி ஷைனி அவர்கள் என்ன எழுதினார் என்றால்,
''நீங்கள் ஆதாரங்களைக் கொண்டுவந்து கொடுப் பீர்கள் என்பதற்காக நான் காத்திருந்தேன், காத்திருந் தேன் - காலமெல்லாம் காத்திருந்தேன்; நீங்கள் யாரும் வரவில்லை'' என்று எழுதியிருக்கிறார்.
இப்படி அவர் தீர்ப்பு எழுதிய பிறகும்கூட, வேண்டு மென்றே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, மீண்டும் மேல்முறையீடு என்று அவர்கள் சென்றி ருக்கிறார்கள். அதை நம்முடைய தோழர்கள் வழக்கு மன்றத்தில் சந்திப்பார்கள். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு...
ஆனால், அன்றைக்கு அதைச் சொன்னவர்கள், அதைவிட 50 மடங்கு வேகம் - இன்னுங்கேட்டால், 4ஜி என்று சொல்லக்கூடிய அந்த அமைப்பு, இன்றைக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கே கிடைக்கவில்லை. 5ஜி அலைக்கற்றை இனிமேல்தான் வரப் போகிறது; ஆனால், அது அம்பானிக்குக் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தால், கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு, இந்த நாட்டை எப்படிப் பாடுபடுத்துகிறார்கள்? என்பது புரிகிறதே! இந்த நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்குச் சிதைவுறுகிறது? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டவேண்டிய அளவிற்கு, இதைப்பற்றிய செய்திகள் விரிவாக, விளக்கமாக எங்களால் விரைவில் வெளியிடப்படும்.
நாடு தழுவிய அளவில் பிரச்சாரங்களை செய்வோம்; 'விடுதலை' அதற்குரிய மிக முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்.
கூலிப் பட்டாளம் போன்று ஆட்களை சேர்க்கிறார்கள்!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் தற்போதைய நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஏராளமான வடநாட்டுப் பணம் தாராளமாக இங்கே உள்ளே வருகிறது. யார் யாரை விலை கொடுத்து அந்தப் பணத்தால் வாங்கலாம் - கூலிப் பட்டாளம் போன்று ஆட்களை சேர்க்கலாம் என்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கத்தில், யார் யாரெல்லாம் தேடப்படும் குற்றவாளிகளோ, யார் யார்மீது வழக்கு இருக்கிறதோ, அவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்றால், காவிக் கட்சிக்குச் சென்றால்தான் வசதியாக இருக்கும் என்று அங்கே செல்கிறார்கள். ஊடகக்காரர்கள் சிலரை விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு எதிராக, 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராக - தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தினமும் சொல்லிக்கொண்டிருப்பதா?
'ஆயாராம் காயாராம்' வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது!
இன்னொரு பக்கத்தில், டில்லியில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிற தமிழ்நாடு ஆளுநர், ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலை. காரணம் என்னவென்றால், வடநாட்டில் நடப்பதுபோன்று, இங்கே சட்டமன்ற உறுப்பினர்களை அவ்வளவு சுலபத்தில் விலைக்கு வாங்கிவிட முடியாது.
' ஆயாராம் காயாராம்', வேலைகள் எல்லாம் இங்கே நடக்காது; எந்த ராமனுக்கும் இங்கே வேலையில்லை. அயோத்தியோடு அது நின்று விடவேண்டியதுதான்.
அவர்கள் ஏதாவது வித்தைகளை இங்கே காட்டலாம் என்று நினைக்கிறார்கள். அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. காரணம், இது பெரியார் மண்; இந்த மண்ணிலே மக்கள் பகுத்தறிவோடு இருப்பவர்கள்.
கருப்பு எப்படி படர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம், கருப்பு காவியாக இல்லை; காவி போட்டிருந்தவர்கள்கூட இப்பொழுது கருப்புப் போடக் கூடிய அவசியத்திற்கு, டில்லியிலே வந்துவிட்டார்கள்.
பெரியார் டில்லியைத் தாண்டி பயணம் செய்துகொண்டிருக்கிறார்
கருப்பு வண்ணத்தைக் கண்டு, பிரதமரேகூட கொஞ்சம் யோசிக்கவேண்டிய கட்டத்திற்கு, அதைப்பற்றி பேசவேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கிறார் என்றால், பெரியார் டில்லியைத் தாண்டி பயணம் செய்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
எனவே, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதைவிட, பெரியார் அகில இந்தியாவிற்கும், அகில உலகத்திற்கும் மிக முக்கியமாக பரவியிருக்கிறார்.
எனவே, எங்களுடைய பணி என்பது இன்னும் வேகமாக இருக்கும்.
காரணம், இதைத் தடுக்க முடியாது; என்னதான் அவர்கள் இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், இது விஞ்ஞானம் பெருமை பெற்றுள்ள காலம்.
விஞ்ஞானத்தை எப்படி தடுக்க முடியாதோ, அதுபோல், பெரியாருடைய தத்துவங்கள், சித்தாத்தங்களையும், திராவிட மாடல் தத்துவத்தையும், சமூகநீதியையும், மதச்சார்பின்மையையும் ஒருபோதும் அவர்களால் தடுக்க முடியாது. அதற்குரிய எச்சரிக்கைதான் நேற்று பீகாரில் ஏற்பட்டு இருக்கின்ற அனுபவம்.
ராஜ்பவன், ஆர்.எஸ்.எஸினுடைய கிளையா?
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநருடைய செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுகூட நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்தித்திருக்கிறார்; அரசியல்பற்றி பேசினோம் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: ஒரு நடிகர், ஒரு ஆளுநரைப் போய்ச் சந்திப்பதிலோ, அல்லது வேறு ஒரு நபர் சந்திப்பதிலோ நமக்கு ஆட்சேபணை இல்லை.
சந்தித்தவர் என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.
நாங்கள் அரசியல் பேசினோம் என்று சொல்கிறார். மக்களுடைய வரிப் பணம்தான் ஆளுநருக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.
வரிப் பணம் சம்பளமாக வாங்குவது அரசியல் பேசுவதற்காக அல்ல;
ரஜினிகாந்த் - ஆளுநர் சந்திப்பைப்பற்றி ஒரு வார ஏடு என்ன எழுதுகிறது என்றால், ''நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ஆளுநர் கேட்டதாக எழுதுகிறார்கள்.
அப்படியென்றால், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்றுதான் அர்த்தம்.
ராஜ்பவன், ஆர்.எஸ்.எஸினுடைய கிளையா? என்பதுதான் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற நியாயமான கேள்வி.
ஆளுநர் அரசியல் செய்யவேண்டும் என்றால், தன்னுடைய ஆளுநர் பதவியிலிருந்து விலகி, அண்ணாமலைக்கு அடுத்தபடியாகவோ அல்லது அண்ணாமலைக்கு மேலான ஒரு பதவியை பா.ஜ.க.வில் வாங்கிக்கொண்டு தாராளமாக செய்யட்டும்; அவரை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
திருமாவளவன் போன்றவர்கள் எடுக்கின்ற நிலை சரியான நிலைப்பாடுதான்
செய்தியாளர்: திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறாரே, அதைப்பற்றி...?
தமிழர் தலைவர்: கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஒரு ஜாதியமாக, தாக்குவது, ஆக்குவது என்று சிலர் அதில் முனைப்புக் காட்டுகிறார்கள். அது தவறு.
அங்கே மட்டுமல்ல, இன்று காலையில்கூட நம்பியூரில் பேசும்பொழுது சொன்னேன்; சில பகுதிகளில், ஜாதிகளை அடையாளங்காட்டக் கூடிய கயிறுகளை மாணவர்களின் கைகளில் கட்டிவிடுகிறார்கள்.
இன்னின்ன மாணவர்கள், இன்னின்ன ஜாதி என்று தெரிவதற்காக.
எனவேதான், ஜாதி, மதம், நிறம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட கல்விக் கூடங்களில் இதுபோன்ற முயற்சிகள் நீடிக்கக் கூடாது. அதை ஒருபோதும் ஜாதிப் போராட்டமாக, ஜாதிக் கலவரமாக ஆக்குவது கூடாது என்ற அவருடைய நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
உள்ளபடியே அதுபோன்று ஆக்க முயற்சிக்கிறார்கள்.
அதைப்பற்றி ஆய்வு செய்வதற்கு, தனியே ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
எனவே, இடையில் சிலர் திட்டமிட்டே ஊடகங்கள்மூலமாக, இன்ன ஜாதிக்கு, இன்ன ஜாதிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியமே கிடையாது.
உதாரணத்திற்கு உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், பேருந்து நடத்துநருக்கும், பயணிக்கும் ஏதாவது தகராறு ஏற்பட்டால், அவர் என்ன ஜாதி? இவர் என்ன ஜாதி? என்று அந்தத் தகராறை ஜாதிக் கலவரமாக மாற்றுவதா?
அந்த சம்பவம் இரண்டு பேருக்கிடையே நடைபெற்ற சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் திட்டமிட்டே இப்படி செய்கிறார்கள். மீண்டும் ஜாதி வெறியை உருவாக்குவதற்கு இது ஓர் ஆயுதம்; அதற்கு இடமளிக்கக் கூடாது.
நிச்சயமாக திருமாவளவன் போன்றவர்கள் எடுக்கின்ற நிலை சரியான நிலைப்பாடுதான்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment