அருமைக் கழகச் செயல் வீரர்களே, வீராங்கனைகளே!
60 ஆயிரம் சந்தாக்கள் என்ற பெரிய மலையேறும் அரிய இலக்குப் பணிக்காக, சுழன்றடிக்கும் சூறாவளி யாக சுற்றி வருகிற உங்களுக்குள் உள்ள சுறுசுறுப்புத் தேனீயாம் உழைப்புக்குப் பாராட்டுக் கலந்த நன்றிகள்!
இந்த 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் பொறுப் பான வாழ்வில் நேற்று (4.8.2022) நான் அடைந்த உவகையும், மகிழ்ச்சியும், உணர்ச்சிப் பிரவாகமாக என்னுள் ஓடியது!
விழுப்புரம் மாவட்டத்தின் சிறு கிராமங்களில், நமது விடுதலை வீராங்கனை மானமிகு
செ.திருமாமணி அவர்களும், அவரது தந்தையாரும், குடும்பமும் முன்னெடுத்து முன்பு ஆரியூர் கிராமப் பகுதியில் 113 சந்தாக்கள் சேர்த்து தந்ததை கழகத் துணைத் தலைவர் வரவேற்று எழுதி வாழ்த்துக் கூறியதை (21.7.2022) கண்டு பூரித்தேன்.
அதற்கு மேலும் போனஸ் மகிழ்ச்சி!
அதே விழுப்புரத்தின் சில கிராமப் பகுதிகளில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைவரிடமிருந்து விடுதலை சந்தாக்கள் 134அய் பெற்று - திருநங்கையர், பறை இசைக் கலை ஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய தோழர்களை அழைத்து வந்து பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகத்தில் பறை இசை கொட்டு முழக்கோடு சந்தாக்களை மகிழ்ச்சியுடன் அளித்து மகிழ்ந்தனர். நாமும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினோம்.
பெரியாரின் சமத்துவ சமுதாயம், பாலின அடிமை மாய்ப்பு, சமூகநீதி வளருவதற்குப் பாடுபட - அறிவு கொளுத்தும் ‘விடுதலை' வீடுதோறும் சென்றால் விடியல் தானே - ஆறு மாதங்களில் உருவாகுமே!
இதைவிட எமது உழைப்புக்கு வேறு என்ன ஊதியம் தேவை?
No comments:
Post a Comment