நாம் நடத்துவது வன்முறைப் போர் அல்ல; அறிவுப் போர்!
அரியலூர் மாநாடு: காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
அரியலூர், ஆக.2- அன்றைக்கு எப்படி சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட முடியும் என்று ஒரு தந்திரத்தை வைத்திருந் தார்களோ, ஒரு சூழ்ச்சிப் பொறியை வைத்திருந்தார்களோ - அது இன்றைக்கு வேறு ரூபத்தில் வந்திருக்கிறது. அதற்குப் பெயர்தான் நீட் தேர்வு! அதற்குப் பெயர்தான் கியூட் தேர்வு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நடைபெற்ற பட்டிமன்றத்தை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கொள்கைகள், லட்சியங்களை நான் தெரிந்துகொண் டேன் என்று சொன்னால், அதுமட்டும் போதுமா? என்ற கேள்வியை கேட்டுவிட்டு, அழகாகப் பதில் சொன்னார்.
அதுமட்டும் போதாது.
பின்பு என்ன செய்யவேண்டும்?
அதை அடையக்கூடிய வழிமுறைகள் என்ன?
அதற்குரிய கருவிகள் என்ன?
வன்முறைப் போர் அல்ல -
அறிவுப் போர்!
இந்த இரண்டும் தெரிந்திருந்தால்தான், நாம் நம் முடைய இலக்கை அடைய முடியும்.
இந்த இரண்டும் தெரியாமல், நாம் நம்முடைய இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால்,
சரியான கருவிகள் இல்லை என்றால், எப்படி போரில் வெற்றி பெற முடியும்?
போர் என்றால், நம்முடையது வன்முறைப் போர் அல்ல -
போர் என்றால், அறிவுப் போர்!
நாம் எடுத்திருப்பது அறிவாயுதம் என்ற பேராயுதம் - தந்தை பெரியார் தந்திருப்பது.
ஆகவே, அந்தப் பேராயுதத்தை நாம் பயன்படுத்துகின்றோம். அதற்குக் கருவிகள் என்று சொல்லும்பொழுதுதான் நண்பர்களே, பிரச்சாரம்!
அந்தப் பிரச்சாரத்திற்கு எது மிக முக்கியமானது.
‘விடுதலை’ போன்ற நாளேடுகள்.
அய்யா தந்தை பெரியார் அவர்கள், எவ்வளவு கஷ்டத்திற்கிடையிலே, நீண்ட காலமாக நடத்தி, அதைத் தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லும்பொழுது,
பெரியார் என்ற ஜீவ நதி வற்றாமல் ஓடிக்கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான்...
என்னை ஊக்கப்படுத்துவதற்காக, தோழர்கள், மற்றவர்கள் 60 ஆண்டுகாலமாக ஆசிரியராக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். 60 ஆண்டு காலமாக நான் ஆசிரியராக இருப்பது முக்கியமல்ல. 88 ஆண்டுகாலமாக ஒரு பகுத்தறிவு நாளேடு - உலகத்திலே நடப்பதற்கு அடித்தளமிட்ட ஆசான் இருக்கிறார்களே, அந்த பெரியார் வாழ்ந்து கொண் டிருப்பதால், பெரியார் என்ற ஜீவ நதி வற்றாமல் ஓடிக்கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான், அதை உருவாக்கிய தோழர்களாகிய நீங்கள், உற்சாகத்தில் குன்றாதவர்களாக எப்பொழுதும் இருக்கிறீர்கள்.
வயதானவர்கள் என்ற
முன்னாள் வாலிபர்கள்
இந்த அரங்கத்தைப் பார்த்தால், இளைஞரணி மாநாடு என்றால், வெறும் இளைஞரணியினர் மட்டுமல்ல. நம்முடைய அறிவாசான் அய்யா எழுதும்பொழுது, வயதானவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. முன்னாள் வாலிபர்கள் என்று சொல்கிறார்கள்.
அவர் சொல்லும்பொழுது, முன்னாள் வாலிபர்கள்; நாம் எல்லாம் யார் என்றால், முன்னாள் வாலிபர்கள். அவர்களுடைய உணர்வுகளைக் குறைப்பதே இல்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அந்தக் கருவிகளைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கருவிகள்தான் எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருக்கிறது. அதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது இருக்கிறதே - காலங் காலமாக தொடர்ந்து நடத்தக் கூடிய அளவிற்கு, வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.
எனவே, அதற்குரிய கருவிகளை நாம் பலப்படுத்த வேண்டும். எப்படி நாம் பயன்படுத்துகிற கருவி, கூர்முனை மழுங்காமல் இருக்கிறதா என்று, அதைத் தீட்டிக்கொண்டே இருக்கிறோம். சாணைத் தீட்டுகிறோம். அதுபோலத்தான் நண்பர்களே, இது ஏராளமாகப் பரவவேண்டும் என்பதற்கான முயற்சிகளை இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு பகுதி.
பிரச்சாரம், போராட்டத்திற்குத்
தயாராக இருக்கிறார்கள்!
நம்முடைய இயக்கம் - பிரச்சாரம். பிரச்சாரத்திற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள், போராட்டத்திற்கு. எல்லோரும் தயாராக இருக்கிறார்கள்; இதில் ஒன்றும் வயது இடைவெளியே கிடையாது, நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில்.
அப்படி ஒரு இயக்கம், நல்ல தத்துவங்கள், கொள் கைகள் - தெளிவானவை.
வழிநடத்தக் கூடிய ஒப்பற்ற தலைமை - அறிவாசான் தந்தை பெரியாருடைய வழிகாட்டல்.
அதற்கடுத்து, அதைப் பின்பற்றக்கூடிய கட்டுப்பாடு மிகுந்த தோழர்கள் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள் என்று சொன்னால், உலக அளவிலேகூட இப்படிப்பட்ட தொண்டர்களைப் பார்க்க முடியாது.
அந்த அடிப்படையிலே, இந்தப் பணிகள் இன்றைக்கு வேகமாக நடைபெறுகிறது. இன்னும் நம்முன் ஏராளமான பணிகள் இருக்கின்றன.
இந்த இயக்கம் தொடங்கப்பெற்றது, திராவிடர் இயக்கம் தொடங்கப் பெற்றது, சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்றது ஜாதி ஒழிப்பிற்காக - சமத்துவத் திற்காக - பகுத்தறிவிற்காக - பெண்ணடிமை நீக்கத்திற் காக - மனித உரிமைகளுக்காக - மனிதநேயத்திற்காக - அதை நாம் தொடருகிறோம் இன்றைக்கு.
குடும்பம் குடும்பமாக நாம் சந்திக்கின்ற நேரத்தில், மிக முக்கியமான ஓர் அம்சமாகத்தான் இந்த அரியலூரிலே நாம் கூடியிருக்கின்றோம்.
இங்கே நண்பர்கள் பேசும்பொழுது, கருத்தரங்கத்தில் சொன்னார்களே,
பெரியார் என்ற நுண் ஆயுதம், நுண் கருவி, நுண்ணாடி நம்மிடத்திலே இருக்கிறது
பெரியாருடைய காலத்தில், அய்யாவினுடைய காலத்தில், தொடர்ந்து ஆரியம் போராடிக் கொண்டி ருக்கின்றது; அது பலப் பல ரூபத்திலே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலே, ஒவ்வொரு உருவம் எடுக்கிறது. அவர்கள் மொழியில் சொல்லவேண்டு மானால், ‘அவதாரம்' எடுத்துக் கொண்டிருக்கிறது. அதை நம்மால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். ஏனென் றால், பெரியார் என்ற நுண் ஆயுதம், நுண் கருவி, நுண்ணாடி நம்மிடத்திலே இருக்கிறது.
அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் -
இன்றைக்கு தேசிய கல்வித் திட்டம்.
பெயர் மாற்றம்தான், வேறொன்றும் இல்லை.
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்றோம் - நல்ல வாய்ப்பாக பச்சைத் தமிழர் காமராசர் கிடைத்தார். காமராசர் ஆட்சி என்று சொன்னாலும், அது தேசிய ஆட்சி என்பதைவிட, திராவிட முத்திரையோடு இருக் கின்ற ஆட்சி என்பதற்காகத்தான் பெரியார் ஆதரித்தார்.
சனாதனத்திற்கும் - திராவிடத்திற்கும்
என்ன வேறுபாடு?
நண்பர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார்களே, திராவிடம் என்றால் என்ன? சனாதனம் என்றால் என்ன? என்று கேட்கிறார்களே, அதற்கான பதிலை சுருக்கமாகச் சொல்லலாம்.
படிக்காதே, எல்லோரும் படிக்காதே
ஒடுக்கப்பட்ட மக்கள் - படிக்காதே
தாழ்த்தப்பட்ட மக்கள் - படிக்காதே
பெண்கள் - படிக்காதே
இதை சொன்னது ஆரியம், சனாதனம், மனுதர்மம்.
படியுங்கள்! எல்லோரும் படியுங்கள்! அனை வரும் படியுங்கள், எப்பாடுபட்டாவது படியுங்கள்! என்று சொல்வது திராவிடம்.
இவ்வளவுதான்.
மீறிப் படித்தால் தண்டனை என்று சொன்னது ஆரியம், சனாதனம்!
படிக்காதே என்று சொன்ன சமுதாயத்தில், படி! படி! என்று சொன்னது மட்டுமல்ல, நீ படிக்காமல் இருந்தால் உனக்குத் தண்டனை! கட்டாயமாக, சிறைச்சாலைக்குக் கூட கட்டாயக் கல்வியைக் கொடு என்று சொல்வது திராவிடம்.
படித்த பிறகு, வேலை வாய்ப்பு. எனக்குத் தகுதி இருக்கிறது, எனக்கு அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக் கிறது - அதைக் கொடுங்கள் என்று சொன்ன நேரத்தில்,
அறிவுக்குப் படிப்பு; சரி உடலுக்கு மருத்துவம்.
மருத்துவம் படிப்பதற்கு அன்றைக்கு என்ன சூழல்?
எல்லோரும் டாக்டராக முடியாது; யார் டாக்டராக முடியும்? பார்ப்பான் மட்டும்தான் டாக்டராக முடியும். சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான், மருத்துவம் படிப்பதற்கு மனுவே போட முடியும்.
ஆனால், இன்று!
எல்லோரும் படிக்கலாம்; படிக்கவேண்டும். இன்னுங் கேட்டால், வாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை கொடு. அதுதானே இட ஒதுக்கீடு - அதுதானே சமூகநீதி!
அன்றைய சூழ்ச்சி
இன்றைக்கு வேறு ரூபத்தில் வந்திருக்கிறது!
அதை ஒழிக்க, அன்றைக்கு எப்படி சமஸ் கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட முடியும் என்று ஒரு தந்திரத்தை வைத்திருந்தார்களோ, ஒரு சூழ்ச்சிப் பொறியை வைத்திருந்தார்களோ - அது இன்றைக்கு வேறு ரூபத்தில் வந்திருக்கிறது.
அதற்குப் பெயர்தான் நீட் தேர்வு!
அதற்குப் பெயர்தான் கியூட் தேர்வு!
படிக்காதே என்று தடுப்பது!
ஆகவேதான், தத்துவம் ஒன்றுதான், இந்தப் போரில்!
அவர்கள் ஒரு அணி!
நாம் ஒரு அணி!
இந்த அணிகள் நேருக்கு நேராக இருக்கும்.
இது பரம்பரை யுத்தம்!
தொடர் யுத்தம்!
பெரியார் மறைந்துவிடவில்லை -
தத்துவமாக - லட்சியமாக வாழ்கிறார்!
இந்தப் பரம்பரை யுத்தத்தில், அவர்கள் அங்கே நின்றிருப்பார்கள் - பெரியார் மறைந்துவிடவில்லை நண்பர்களே - பெரியார் என்பது ஈ.வெ.ராமசாமி அல்ல!
பெரியார் என்பதை மறந்துவிடாதீர்கள்!
பெரியார் என்பது தத்துவம்!
பெரியார் என்பது லட்சியம்!
பெரியார் என்பது சுயமரியாதை!
எனவே, கடைசி மனிதனுக்குக் கோபம் வருகிற வரை, சொரணை வருகிற வரை, சுயமரியாதை இருக்கிறது என்றால்,
பெரியார் வாழ்கிறார்!
இந்த இயக்கம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது இன்று.
எனவே, நம்முடைய பணி என்பது இருக்கிறதே, எல்லோருக்கும் எல்லாம்!
அய்யா அழகாக சொன்னார், சுருக்கமாக!
அனைவருக்கும் அனைத்தும்
இதைத்தான் திராவிட மாடலுக்கு எடுத்திருக்கிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்கக்கூடாது என்பது இன்னொரு அணி.
அதற்குத்தான் இன்றைக்குப் போராட்டம்!
(தொடரும்)
No comments:
Post a Comment