ஆசிரியரின் அறிவுப்பணி தொடரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

ஆசிரியரின் அறிவுப்பணி தொடரட்டும்!

 ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராக அறுபது ஆண்டுகள் இடையறாது பணியாற்றி வந்துள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஊடக உலகில் அறுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ‘தீக்கதிர்’ நாளேட்டின் சார்பில் வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் எண்ணற்ற ஏடுகள் வெளிவந்த போதும், பலர் அந்த ஏடுகளின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்திட்ட போதும், ஆசிரியர் என்று திராவிடர் கழகத் தோழர்களால் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களாலும் அன்போடு அழைக்கப்படுகிற பெருமையைப் பெற்றவர் கி.வீரமணி ஒருவரேயாவார்.

தந்தை பெரியார் எந்த நம்பிக்கையோடு இந்த ஏட்டினை கி.வீரமணியிடம் ஒப்படைத்தாரோ, அந்த நம்பிக்கையை இன்று வரை அவர் காப்பாற்றி வருகிறார். விடுதலையை நிறுத்தி விடலாம் என்ற நிலை வந்தபோது, கி.வீரமணி ஆசிரியர் பொறுப்பேற்றால் தொடர்ந்து நடத்தலாம் என முடிவெடுத்தார் - எவரையும் எளிதில் நம்பிவிடாத தந்தை பெரியார். தந்தையின் நம்பிக்கையை தளபதி ஒருபோதும் தளரவிட்டதில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்ட போது ‘ஜனநாயக உரிமைக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்தது திராவிடர் கழகத் தோழர்களும் விடுதலை ஏடுமே ஆகும்’ என்று புகழ்ந்துரைத் துள்ளார் பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஏ.கே.கோபாலன்.

ஜோதிடம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளைத் தாங்கி பல்வேறு நாளேடுகள் வெளிவந்தபோதும், பகுத்தறிவை பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது ‘விடுதலை’ ஏடு.

இந்த ஏட்டில் வெளிவரும் ஆசிரியர் கேள்வி-பதில் பகுதி, விளக்கம் தரும் விளக்காகவும் பகைவர்களின் அவதூறுகளை அறுத்தெறியும் வாளாகவும் விளங்குகிறது. எண்மப் பதிப்பு குறித்து பல ஏடுகள் நினைத்துக்கூடப் பார்க்காத காலத்திலேயே விடுதலை எண்மப் பதிப்பாகவும் வெளிவந்த பாங்கு அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எப்போதும் இந்த ஏடு முன்னின்று வந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

விடுதலையின் பயணம் என்பது நெருப்பாற்றை நீந்திக் கடந்த போராட்ட வரலாறு ஆகும். இந்த ஏடு சந்தித்த தடைகள் அடக்குமுறைகள் ஏராளம். அத்தனையையும் தூள் தூளாக்கி சுயமரியாதைச் சுடரொளியாக சுடர்ந்து கொண்டிருப்பது விடுதலை ஏடு. ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த ஏட்டின் வழியாகக் கண்ட சமூக நீதிச் சமர்க்களங்கள் ஏராளம். இடஒதுக்கீட்டுக்கு  இடையூறு செய்ய இடக்கர்கள் முயலும் போதெல்லாம், துடித்தெழுந்து சமூக நீதியை உயர்த்திப் பிடித்து வந்துள்ள ஏடு ‘விடுதலை’. 

இந்த ஏட்டின் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகளைப் படித்து உலக வாழ்க்கைக்கு உரமேற்றிக் கொண்டவர்கள் ஏராளம். ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் எழுதும் கட்டுரைகள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எடுத்துரைக்கும் வாதங்களைப் போல தர்க்கமும், நுணுக்கமும் நிறைந்தவை. உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு என்று போற்றத்தக்க ‘விடுதலை’ ஏடு சாதித்திருக்கிற சாதனைகள் பலநூறு!

88 ஆண்டுகளை கடந்துள்ள ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராக ஒருவர் தொடர்ந்து 60 ஆண்டுகள் பணியாற்றி இருப்பது என்பது உலக சாதனைகளில் ஒன்று! நூறு ரூபாய் அதிகம் கொடுத்தால் நாளொன்றுக்கு நான்கு பத்திரிகைகளுக்கு பணிமாறிச் செல்லும் ஊடகவியலாளர்கள் மத்தியில், கொண்ட கொள்கைக்காக ‘விடுதலை’யின் வேர்களோடு தன்னைப் பிணைத்துக் கொண்ட வரலாறு, ஆசிரியரின் வரலாறு. இந்த ஏட்டினை ஆசிரியர் நடத்தி வந்துள்ள பாங்கு என்பது இதழியல் கல்விக்கு நடத்தப்படும் தொலைதூரப் பட்டப்படிப்பு என்றே சொல்லலாம். 

‘விடுதலை’யின் வெளிச்சம் திக்கெட்டும் பரவட்டும்!  ஆசிரியரின் அரும்பணி நூறாண்டு தாண்டியும் தொடரட்டும்!


No comments:

Post a Comment