90 வயதிலும் ஆசிரியர் அய்யா அவர்கள் 19 வயது இளைஞரைப் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

90 வயதிலும் ஆசிரியர் அய்யா அவர்கள் 19 வயது இளைஞரைப் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்!

வருண, வர்க்கப் பேதத்தை ஒழிக்க இறுதிமூச்சு அடங்கும்வரை ஓயாது உழைத்தவர் தந்தை பெரியார்!

அரியலூர் மாநாட்டில் அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் உரை

அரியலூர், ஆக. 4-  "ஆசிரியர் அய்யா அவர்கள் 90 வயதில்கூட, 19 வயது இளைஞரைப் போன்று, இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரே தலைவர்;  வருண, வர்க்கப் பேதத்தை ஒழிக்க இறுதிமூச்சு அடங்கும்வரை ஓயாது உழைத்தவர் தந்தை பெரியார்" என்றார் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள்.

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில திறந்தவெளி மாநாட்டில், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஆசிரியர் அய்யாவின் பெருந்தன்மைக்கு நன்றி!

அரியலூரில் நடைபெறுகின்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நிகழ்ச்சியில், எனக்கு முன்பாக சிறப்பானதொரு உரையைத் தொடங்கி வைத்து, இறுதியில் உரையாற்றுவேன் என்று பெருந்தன்மையோடு சொல்லி, எனக்கு வழிவிட்டிருக்கின்ற அருமை ஆசிரியர் அய்யா அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அய்யா ஆசிரியர்மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பும், மரியாதையும் உண்டு.

இங்கே அமர்ந்திருக்கின்ற நம்முடைய கழகத் தோழர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத் தினையும், நன்றியையும், அதேநேரத்தில் என்னை மன்னிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

எனக்கு முன்பு உரையாற்றிய என் பாசமிகு அருமை அண்ணன், தமிழ்நாட்டினுடைய போக்குவரத்துத் துறை அமைச்சர், பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் சிவசங்கர் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன்பாக இங்கே உரையாற்றி இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் 

கண்ணன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சின்னப்பா அவர்களே,

நேரமின்மை காரணத்தினால், அனைவரின் பெய ரையும் இங்கே விளித்ததாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

குறிப்பாக, எங்களுடைய மாவட்டத்தைச் சார்ந்த அருமை அண்ணன், நான் கூட்டத்தில் பின்னால் நின்றிருந்தேன் என்றால், முன்னால் வாருங்கள் தம்பி என்று என் கையைப் பிடித்து முன்னால் வரச் சொல்லும் அருமை அண்ணன் சுபாசந்திரசேகர் அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், போக்குவரத்துத் துறை அமைச்சரும், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் இருந்தோம்.

அவரிடமும் பேசினேன்; சரியான நேரத்திற்குச் சென்றுவிடுவோம் என்று நினைத்திருந்தோம்.

எதிர்பாராதவிதமாக ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வரவேண்டிய சூழ்நிலை. அந்தத் திரு மணத்தை முடித்து, வரும்பொழுது, வழி தெரியாமல் சென்றுவிட்டோம்; அதனால்தான் காலதாமதம் ஆகிவிட்டது.

ஆகவே, இங்கே சிறப்பாக நிறைய பேர் உரையாற்றி இருக்கிறார்கள். அண்ணன் சிவசங்கர் அவர்களைவிட கொஞ்சம் குறைவாகத்தான் எனக்குப் பேசத் தெரியும்.

அடையாளம் தெரியாது இருந்தவர்களை எல்லாம் அடையாளம் காட்டிய மேடை!

இந்த மேடை என்பது ஒரு சிறப்புக்குரிய மேடை. வரலாற்றுச் சிறப்புக்குரிய மேடை. பல பேர் அடையாளம் தெரியாது இருந்தவர்களையெல்லாம் அடையாளம் காட்டிய மேடை.

இன்னும்சொல்லப்போனால், என்னுடைய அப்பா, என்னுடைய தாத்தா, என்னுடைய முப்பாட்டன் எல்லாம் இடுப்பிலே துண்டைக் கட்டிக்கொண்டு, தண்ணீர் குடிப்பதற்குக் கையிலேந்திக் குடித்த நிலையை மாற்றி, இடுப்பில் இருந்த துண்டை தோளில் போட வைத்து, சட்டை அணியாமல் இருந்த எங்களையெல்லாம் சட்டை அணிய வைத்து, மேடையில் கம்பீரமாக நின்று, கணேசனையும் பேச வைத்த ஒரு இயக்கம்தான் இந்த இயக்கம் என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த இயக்கம் என்பது சாமானிய மக்களை, தாழ்த்தப் பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, மிகவும் பிற் படுத்தப்பட்ட மக்களை, சாலையில் நடப்பதற்கு, மேடை யில் நிற்பதற்கு, அனைத்துத் தகுதிகளையும் உருவாக் குவதற்கு அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார்.

அன்று அவர் அடித்தளம் அமைத்ததை, நடத்திக் காட்டியவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைக்காரர். தனக்கென்று எதையும் விரும்பாதவர்; தனக்கென்று எதுவும் வேண்டுமென்று நினைக்காதவர். மனதிலே பட்டதை, பட்டென்று சொல்லக்கூடியவர்.

டில்லிக்குப் போகவேண்டும் வாருங்கள் என்று எங்களை அழைத்தால், புதுசட்டை அணியவேண்டும்; வேட்டி கட்டவேண்டும்; பவுடர் பூசவேண்டும்.

வருண, வர்க்க வேறுபாட்டினைக் களைந்து எறிவதற்காக தன்னுடைய இறுதிமூச்சுவரை போராடியவர் 

தந்தை பெரியார்!

ஆனால், தந்தை பெரியாரைப் பொறுத்த வரையில், வாருங்கள், கிளம்பலாம் என்று உடனே புறப்படுவார். பம்பாய்க்குச் செல்லவேண்டும் என்றாலும், வாருங்கள் புறப்படலாம் என்று உடனே கிளம்புவார். அப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு மனிதர் அவர்.

ஆண்டான் - அடிமை

ஏழை - பணக்காரன்

இருப்பவன் - இல்லாதவன்

உயர்ந்தவன் - தாழ்ந்தவன்

என்ற வருண, வர்க்க வேறுபாட்டினைக் களைந்து எறிவதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர்.

இன்னும்சொல்லப்போனால், தன் உயிர் போகின்றவரை, மூத்திரச் சட்டியைக் கையிலேந்திக் கொண்டு, நம்மைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை கைதூக்கி விடுவதற்காகப் போராடிய ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள், 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாநாட்டில், பெண் களுக்கும் சமத்துவம் வேண்டும்; அவர்களுக்கும் சமூகநீதிவேண்டும் என்று தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்.

பெரியாருடைய எண்ணங்களை, கொள்கைகளை, லட்சியங்களை நெஞ்சிலே தாங்கியிருந்த ஒரு தலைவர் டாக்டர் கலைஞர்

1929 இல் தீர்மானம் கொண்டு வந்தார் - 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த வுடன், பெரியாருடைய எண்ணங்களை, கொள்கைகளை, லட்சியங்களை நெஞ்சிலே தாங்கியிருந்த ஒரு தலைவர்தான், நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். 

பெண்களுக்குச் சொத்திலே சம பங்கு உண்டு என்ற சட்டத்தினைக் கொண்டு வந்து நிறைவேற்றியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அதற்குப் பிறகு, பெண்களுக்கு 33 சதவிகிதம் உள்ளாட்சித் துறையிலே இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், தந்தை பெரியார் அவர்கள் என்ன விரும்பினாரோ, அதை நிறைவேற்றக் கூடிய தலைவர் அவர்.

சமூகநீதி, சமூகநீதி என்று சொல்கின்றோமோ, அந்த சமூகநீதிக்கு வித்திட்ட பெரியாருடைய எண்ணங்களை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சமூகநீதி என்றால் என்ன?

சமூகநீதி என்றால் என்ன? என்பது குறித்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு மேடையில் உரையாற்றியதை நான் கேட்டேன்.

ஒரு ரயிலில் உள்ள கம்பார்ட்மெண்ட்டில் ஒருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்படித் தூங்குகிற ஒருவர், எழுந்து உட்கார்ந்தால், நான்கு பேர் அமர்ந்து செல்லலாம். நான்கு பேர் அமரக்கூடிய ஒரு இடத்தில், ஒருவர் மட்டும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்படி தூங்குகின்றவனை எழுப்பியதுதான் திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம்; அதனால்தான் தூங்குகின்றவனை எழுந்து உட்கார வைத்தோம்; நின்று கொண்டிருந்த நான்கு பேரை அமர வைத்திருக்கிறோம்.

இதுதான் சமூகநீதி என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஆனால், தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, கோவில்களுக்குச் செல்ல முடியாது; தெருவிற்குள் நடக்க முடியாது; பெண்கள் ஜாக்கெட் போட முடியாது; செருப்பு அணியக் கூடாது.

இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று விரும்பியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில்கூட அவருடைய பெயரை பல்கலைக் கழகத்திற்கு வைக்க முடியவில்லை!

மகாராட்டிர மாநிலத்தில் அம்பேத்கர் அவர்கள் பிறந்தார். அந்த மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க முடியவில்லை. கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு, வன்முறை ஏற்பட்டது.

ஆனால், அம்பேத்கர் பிறக்காத மாநிலமான தமிழ் நாட்டில், சட்டப் பல்கலைக் கழகத்திற்கு, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரிக்கு, அம்பேத்கர் கல்லூரி என்று பெயர் சூட்டியவர்.

சென்னை கடற்கரை சாலையில், அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அம்பேத்கர் பிறந்த நாளை, சமத்துவ நாள் என்று அறிவித்த  மாபெரும் முதலமைச்சர் நம்முடைய தளபதி!

ஏன், கலைஞர் அவர்களுடைய மகனாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டின் முதலமைச்சர், இந்தியாவிலேயே இருக்கின்ற முதலமைச்சர்களிலேயே, தலைசிறந்த முதலமைச்சர் - நெம்பர் ஒன் முதலமைச்சரான தளபதி அவர்கள், அம்பேத்கர் பிறந்த நாளை, சமத்துவ நாள் என்று அறிவித்த மாபெரும் முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இன்னொரு இடத்தில் நம்முடைய தலைவர் அவர்கள் சொன்னாரே, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நாமெல்லாம், கேம்பியன் பள்ளியிலோ, ஜோசப் பள்ளியிலோ அல்லது ஹோலி கிராசிலோ, எத்திராஜிலோ, டபிள்யூ.சி.சி.யிலோ - இதுபோன்ற உயர்ந்த பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ படிக்க முடியுமா? என்றால், முடியவில்லை.

ஆனால், உயர்வகுப்பினர்கள், வசதி வாய்ப்பு படைத்த செல்வந்தர்கள் எல்லாம் இதுபோன்ற பள்ளி களில், கல்லூரிகளில் படித்து, நிறைய மதிப்பெண் பெற்று செல்வார்கள்.

நம்முடைய கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரு டைய கொள்கைகளைக் கொண்டவர்; அதை நிறை வேற்றம் என்பதிலே குறியாக இருக்கக்கூடியவர்.

முதலமைச்சராக இருந்தபொழுது ஒரு சட்டம் கொண்டு வந்தார் அவர்.

கிராமப்புற மாணவர்களுக்கு அய்ந்து மதிப்பெண்!

அது என்ன சட்டம் என்றால், ஒரு மாணவன், முதல் பட்டதாரியாக இருந்தால், அவருக்கு அய்ந்து மதிப்பெண் கள் வழங்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்.

உதாரணமாக, ஒரு உயர்ந்த வகுப்பைச் சார்ந்த மாணவன், 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

 நம்முடைய மாணவன், கிராமப்புறத்தில் படித்தவன் - அவனுக்கு அவ்வளவாக விவரம் இல்லை - அவன் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

உயர்வகுப்பைச் சார்ந்த மாணவன், பெரிய பள்ளியில் படித்து 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவனுக்குத்தான் சீட் கிடைக்கும்; நம்முடைய கிராமப்புற மாணவனுக்குக் கிடைக்காது.

அந்த இடத்தில்தான் கலைஞர் நிற்கிறார். கிராமப்புற மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தவுடன், 80 சதவிகித மதிப்பெண், 85 சதவிகிதமாக ஆனவுடன், கிராமப்புற மாணவன்,  மருத்துவப் படிப்பிற்கோ, பொறியியல் படிப் பிற்கோ, வழக்குரைஞர் படிப்பு படிப்பதற்கோ வாய்ப்பு ஏற்படும். இதுதான் சமூகநீதி.

சாதாரண மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்னொரு முக்கியமான செய்தி, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்,

கிராமப்புறங்களில் சேரி தெரு, பள்ளர் தெரு, அருந்ததியர் தெரு, முதலியார் தெரு, கோனார் தெரு, செட்டியார் தெரு பல தெருக்கள் இருக்கும். ஒவ்வொரு தெருவிலும் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ முடியும்.

ஆனால், பெரியார் என்ன விரும்பினார்?

பெரியார் நினைவு சமத்துவபுரம்

சமத்துவம் இருக்கவேண்டும்; ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது; உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது - ஆகவே, சமூகநீதி அமையவேண்டும் என்று பெரியார் விரும்பினார்; அதற்காகப் போராடினார்.

அவருடைய தம்பியான தலைவர் கலைஞர் அவர்கள், செட்டியாரையும், முதலியாரையும், நாயுடுவையும், பிராமணரையும், அருந்ததியரையும், ஆதிதிராவிடரையும் ஒரே இடத்தில் குடியிருக்கக்கூடிய பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர் நம்முடைய டாக்டர் கலைஞர் அவர்கள்.

எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ சாதனைகளை நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்திருந்தாலும், மிக முக்கியமானது என்னவென்றால்,

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் கொண்டுவரவில்லை; எந்தத் தலைவரும் விரும்பவில்லை; எந்தக் கோவிலுக்குள் ஆதிதிராவிடரும், அருந்ததியரும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் செல்லக்கூடாது என்று சொன்னார்களே, எந்தக் கடவுளைப் பார்க்கக் கூடாது என்று சொன்னார்களே, எந்தக் கடவுளை வழிபட முடியாமல் தவித்தார்களோ, அந்தக் கோவிலுக்குள் சென்று, அந்தக் கடவுளையும் பாதுகாத்து, அந்தக் கடவுளுக்கே வழிகாட்டக் கூடிய வழியிலே - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு நம்முடைய, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் அந்த சட்டத்தை இன்றைக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடியவர் நம்முடைய முதலமைச்சர்

நம்முடைய தளபதி அவர்கள், தமிழ்நாட்டில் இன்றைக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய முதலமைச்சராவர். 

நம்முடைய தளபதி அவர்கள், தந்தை பெரியாராக, பேரறிஞர் அண்ணாவாக, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞராக, தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்கின்ற வகையிலே, மிகச் சிறப்பான வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே, தந்தை பெரியாருடைய லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றக் கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆசிரியர் அய்யா அவர்களை எனக்கு மிகவும் படிக்கும். ஆசிரியர் அய்யா அவர்களின் உரையை நான் நிறைய கேட்டிருக்கிறேன். ஒரு மணிநேரம் பேசுவார் அவர். நான் இளைஞனாக இருந்தபொழுது, அவர் உரையை கேட்கும் பொழுது, இவர்  இவ்வளவு நேரம் பேசுகிறாரே, எப்பொழுது முடிப்பார்? என்று நினைப்பேன்.

ஒருமுறை திட்டக்குடி வந்து அவர் உரையாற்றினார். அந்த உரையை நான் கேட்டுத்தான், அவருடைய ‘பக்தனாக’ நான் மாறினேன்.

அப்பொழுது அவர் உரையாற்றும்பொழுது, கோவில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததியர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆனால், ஒரு உயர்வகுப்பினர் விபத்தில் சிக்கி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; அவருடைய ரத்த வகையோ மிகவும் அபூர்வமானது; எங்கேயும் அவருடைய ரத்த வகை கிடைக்கவில்லை. ஒரு ஆதிதிராவிடர் முன்வந்து, அவருக்கு ரத்தம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அடிபட்ட அந்த உயர்ஜாதிக்காரரிடம் சென்று, ஏங்க, உங்களுடைய ரத்த வகை எங்கேயும் கிடைக்கவில்லை; ஒரு ஆதிதிராவிடர் உங்களுக்கு ரத்தம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார், பரவாயில்லையா என்று கேட்டபொழுது,

இப்பொழுதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் என்பார்!

பரவாயில்லை; இப்பொழுதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள். உடனே எனக்கு அவருடைய ரத்தத்தை ஏற்றுங்கள் என்று சொல்வார்.

அவர்களுக்குக் காரியம் ஆகவேண்டுமென்றால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால், காரியம் ஆகவில்லை என்றால், எல்லாவற்றையும் எதிர்பார்கள் என்று சொன்னார்.

அந்த உரையைக் கேட்டவுடன், அன்றிலிருந்து நான் அவருடைய ரசிகனாகிவிட்டேன். 

ஆசிரியர் அய்யாவை பார்ப்பதற்காகவே அவருடைய அலுவலகத்திற்குப் பலமுறை சென்றிருக்கின்றேன்.

ஆசிரியர் அய்யாவினுடைய புத்தகங்கள் புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கிப் படித்துவிடுவேன்.

கருப்புச் சட்டை அணிந்த தொண்டர்கள் யாராவது வந்தால், உடனே அவர்களை அழைத்துப் பேசுவேன்.

90 வயதில்கூட, 19 வயது இளைஞரைப் போன்று உழைப்பவர் ஆசிரியர் அய்யா!

ஆசிரியர் அய்யா அவர்கள் 90 வயதில்கூட, 19 வயது இளைஞரைப் போன்று, இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரே தலைவர், தந்தை பெரியார் அவர்களின் உருவமாக இருக்கக்கூடிய ஆசிரியர் அய்யா அவர்கள் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment