கடுமழையின் காரணமாக திருவாரூர் மாநாடு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

கடுமழையின் காரணமாக திருவாரூர் மாநாடு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருவாரூரில் நேற்று (22.8.2022) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் அரசு  விளக்க மாநாடு மிகப் பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிற்பகல் முதல் மக்கள் பேருந்துகள்மூலமும், வேன்கள்மூலமும் குவிந்துகொண்டே இருந்தனர்.

பிரமாண்டமான மேடை - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆகியோரது கட்-அவுட்டுகள் ஒளிவெள்ளத்தில் ஜொலித்தன.

இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு - மாலை 4 மணி முதல் தொடர்ந்து பொழியத் தொடங்கிய கடும் மழையின் காரணமாக மாநாட்டை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

வாகனங்களில் வந்த மக்கள் எல்லாம் கீழே இறங்க முடியாமல்,  வாகனங்களிலேயே அமர்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

மாநாட்டிற்குத் தலைமையேற்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சி.பி.அய்.(எம்) மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ.,  செந்தில்அதிபன் (ம.தி.மு.க.), திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன் ஆகியோர் கலந்து பேசி, மாநாட்டை கடுமையான மழையின் காரணமாக நடத்த முடியாத ஒரு சூழலில், செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை சிறப்புடன் நடத்துவது என்ற முடிவை செய்தியாளர்களிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

வரலாற்றில் மிக முக்கியமான நாள்

மேலும் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறியதாவது:

இன்றைய நாள் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் மனித உரிமைப் போராட்டத்தில் வெற்றி கிடைத்த நாளாகும். கால் புள்ளியாகவும், அரைப் புள்ளியாகவும் இருந்து வந்த இந்தப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாளாகும்.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போராட்டமாகும்.

அந்தப் போராட்டத்திற்கான அவசியத்தை ஏற்படுத் தாமல் தந்தை பெரியாரின் மாணவரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றியவர். அதனை எதிர்த்து உயர்ஜாதி ஆதிக்கப் பார்ப்பனர்கள்  எடுத்த எடுப்பிலேயே உச்சநீதி மன்றம் சென்று முடக்கினர். பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தன.

மற்றொரு உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்குப் பச்சைக் கொடி காட்டியது.

முதலமைச்சராக மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்த நிலையில், கடந்த 2021 ஆண்டு ஆகஸ்டு 14 அன்று  பார்ப்பனர்கள் அல்லாத சமுதாயத்திலிருந்து பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர் களை அர்ச்சகராகப் பணியமர்த்தும் ஆணையை வழங்கினார்.

அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதியினர் வழக்குத் தொடுத்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்று (22.8.2022) வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நியமனம் செல்லும், விதிமுறை களும் செல்லும் என்று அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பானது.

இவற்றை எல்லாம் விளக்கலாம் என்று எண்ணி யிருந்த நேரத்தில், மழை காரணமாக அந்த வாய்ப்புக் கிட்டவில்லை.

மனித உரிமைப் பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், இலவசங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் போக்குகள் சூழ்ந்து காணப்படுகின்றன. உச்சநீதிமன்றம் வரை சென்று இலவசங்கள் என்னும் மக்கள் நலத் திட்டங்களை குறுக்கு வழியில் சென்று முடக்க சூழ்ச்சி செய்கிறார்கள். 'திராவிட மாடல்' அரசைப்பற்றிப் பொய்யும் புனைவுமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவற்றைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறும் மாநாடு - மழையால் இன்று தடைபட்டாலும் செப்டம்பர் 4 அன்று இதே திருவாரூரில் நடக்க இருக்கும் மாநாட்டில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரிவாக எடுத் துரைப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

No comments:

Post a Comment