தமிழ்நாடு கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒன்றிய அமைச்சரிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

தமிழ்நாடு கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒன்றிய அமைச்சரிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜூலை 4 தமிழ்நாட்டில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு ஊரகத் வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அரசு முறை பயணமாக டில்லி வந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை அவரது அலுவலகத்தில்  2.8.2022 அன்று சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு நலன் சார்ந்த  கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், பெரிய கருப்பன் அளித்த பேட்டி வருமாறு: கடந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் வைத்திருந்த பல முக்கியப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முடித்தது குறித்து தெரிவித்தோம். அந்த வகையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், கடந்த அதிமுக ஆட்சியில் முடிக்கப்படாத இருந்த பணிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.20,921 கோடி அளவில்  தொகையை பெற்றது மட்டுமின்றி, அதுசார்ந்த அனைத்துப் பணிகளும் முடித்து  வருகிறோம் என்று கூறினோம். இதை ஒன்றிய அமைச்சர் பாராட்டினார்.

1.5 லட்சம் கிமீ நீளமுள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி கோரினோம். கடலோர மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் வசிப்படப் பகுதிகளில் பிரதான தேவையாக இருப்பது சமுதாயக் கூடங்கள். அதனை தமிழ்நாட்டில் முன் மாதிரியாக எடுத்து பணிகளை செய்திட வேண்டும் என்று மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழ்நாட்டு கிராமப்புற சாலை களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதனை உடனடியாக  பரிசீலனை செய்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment