சென்னை, ஆக.27 அரசு மின்னணு சந்தையில் தமிழ்நாடு 3 ஆம் மாநிலமாக விளங்குகிறது என்று தலைமை செயல் அதிகாரி கூறினார்.
அரசு மின்னணு சந்தையின் தலைமை செயல் அதிகாரி பி.கே.சிங், சென்னையில் நேற்று (26.8.2022) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தையின் மூலமாக மேற்கொள்ளப்படும் மொத்த வணிகத்தில் 57 சதவீதம் சிறு தொழில்கள்மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஜெம் சார்பில் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜெம் இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் ரூ.2.83 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஜெம் இணையதளத்தில் கூட்டுறவு அமைப்புகளும் கொள்முதல் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 46.5 லட்சம் பொருட்கள் மற்றும் 250 சேவைகள் இந்த இணையதளத்தில் கிடைப்பதன் மூலமாக, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அமைப்புகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாக இந்த இணையதளத்தில் கொள்முதல் செய்யும் 3 ஆவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பாதுகாப்புத் துறையில் கடந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் கொள்முதல் செய்துள்ள நிலையில் இந்தாண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம் ஊராட்சி அமைப்புகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment