சென்னை,ஆக.24- தமிழ்நாடு அமைச்சரவைக் கூட் டம் வரும் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங் களுக்கு சலுகைகள் வழங்குவது, அனுமதி அளிப்பது தொடர்பான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். தற்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பள்ளி சிறார்களுக்க காலை சிற்றுண்டித் திட்டம், ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அந்த திட்டம் தொடர் பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் அண்ணா பல்கலை. வளாகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது, மாநிலக் கல்வி கொள்கை, ஆராய்ச்சிகளை அதிகரிப்பது, `நான் முதல்வன்' திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக உயர்கல்வித் துறை வட்டாரத்தில் கூறப் படுகிறது.
No comments:
Post a Comment