2022லும் - ஆவணி அவிட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

2022லும் - ஆவணி அவிட்டம்

நேற்றைய தினமலரில் (பக்கம் 11) 'சந்ததிகளிடம் சேர்ப்பது நமது கடமை' என்ற தலைப்பில் பார்ப்பனச் சிறுவர்கள் பூணூல் தரிக்கும் படத்தோடு கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டது.

சந்ததிகளிடம் சேர்ப்பது நம் கடமை 

இன்று (ஆக.11) ஆவணி அவிட்டம்

"இந்த திருநாளை கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு வேதம் கிடைத்த நன்னாள் ஆவணி அவிட்டம்.

இதனால் இதனை வேதத்தின் ஆண்டு விழா என்றே சொல்லலாம். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் வேதம் ஓதும் அந்தணர்கள் நடத்தும் வழிபாட்டிற்கு 'உபாகர்மா' என்று பெயர். வேதம் கற்கத் தொடங்குவதால் 'உபாகர்மா' எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணூல் அணிந்து வேதத்தை அத்யயனம் (படிக்க) செய்ய ஆரம்பிப்பர். தற்காலத்தில் கோயிலில் இந்த சடங்கை நடத்துகிறார்கள். வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ப்பணமும் கொடுப்பர்.

ரிக் வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள் ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக் வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜுர் வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளாகவே அமையும். சாம வேதிகள் இன்னும் சில நாள் கழித்து பாத்ரபத மாத அஸ்த நட்சத்திரத்தன்று உபாகர்மாவைச் செய்வர். அநேகமாகவிநாயகர் சதுர்த்தியன்றோ அல்லது அதற்கு முன்போ, பின்போ வரும். 

ஆவணி அவிட்டத்தை பெரும்பாலும் புதுப்பூணூல் அணியும் நாளாக கருதுகிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றுவது என்பது உபாகர்மாவின் ஓர் அங்கம் மட்டுமே.

பூணூல் அணிந்த பின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். மனதிற்குள் காம சிந்தனை நுழைவதற்குள் காயத்ரி தேவி நுழைய வேண்டும் என்பர். இந்த மந்திரத்தை ஜபிப்போரின் மனமும், உடலும் தூய்மை பெறும். அதனால் ஏற்படும் ஆன்மிக அதிர்வலைகளால் உலகமே நன்மை பெறும். உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழும். வேதம் நமக்கு அளித்த பெருஞ்செல்வமான காயத்ரி ஜபத்தை சந்ததிகளிடம் சேர்க்கும் கடமை பெற்றோருக்கு உள்ளது."

இதுதான் 'தினமலரில்' வெளி வந்துள்ள செய்தி.

இந்தத் திருநாளை கல்வித் திருநாள் என்கிறார் காஞ்சி மஹா பெரியவர் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன?

ஆகப் பூணூல் தரிப்பது புதுப்பிப்பது என்பது எல்லாம் யாருக்கு? பார்ப்பனர்களுக்குத்தானே. அப்படி என்றால் கல்வித் திருநாள் யாருக்கு? பார்ப்பனர்களுக்கு என்பது வெளிப்படை.

பார்ப்பனர் அல்லாதாரின் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கான மூல வேர் எங்கிருந்து தொடங்குகிறது பார்த்தீர்களா? இன்றைய 'நீட்' - 'தேசியக் கல்வி' என்பவை எல்லாமே இந்த மூலவேரிலிருந்து தொடர்வதுதான்.

பிர்மாவுக்கு வேதம் கிடைத்த நாள்தான் இந்த ஆவணி அவிட்டம் என்ற பூணூல் தரிக்கும் நாள். அந்தப் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன் ஆகி விடுகிறான். இந்தச் சூட்சம ஏற்பாடுகளை ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு பார்த்தால் தான் - இவர்கள் கூறும் - பார்ப்பன ஆதிபத்தியத்தைக் கொண்ட ஹிந்துத்துவாவின் சூழ்ச்சிப் படலம் எத்தகையது என்பது எளிதில் விளங்குமா? விளங்காதா?

பூணூல் பிராமணர்கள்தான் போடுகிறார்களா? செட்டியார் களும், ஆசாரிகளும், விசுவகர்மா என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களும் கூடத்தான் போடுகிறார்கள் என்று பிரச்சினையைத் திசை திருப்புவார்கள் பார்ப்பனர்கள். அவர்களின் சாஸ்திரத்தில் ஆணி அடித்துக் கூறப்பட்ட வைகளை வெளிப்படையாக, அறிவு நாணயத்தோடு பேசி நிலை நிறுத்த முடியாத ஒரு நிலைமையைத் தந்தை பெரியார் ஏற்படுத்தி விட்ட காரணத்தால் இந்தத் தந்திர திசைத் திருப்பல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் சாஸ்திரம் என்ன கூறுகிறது?

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலா லும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனுதர்மம் அத்தியாயம் 2 சுலோகம் 44)

"சூத்திரன் பிராமணன் ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும்"

(மனுதர்மம் அத்தியாயம் - 9; சுலோகம் - 224)

ஆசாரியாரும், செட்டியாரும், விசுவ கர்மாக்களும் பூணூல் அணிகிறார்களே என்று எந்தப் பார்ப்பானாவது, திசை திருப் பினால் இந்த மனுதர்மம் என்ற கோணி ஊசியால் வாயைத் தைத்து விடலாம்.

ஏதோ 'தினமலர்' மட்டுமல்ல; 'சோ' ராமசாமியும் பூணூலுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதுண்டு.

"ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில்தான் முதலாவதாக பிர்மாவுக்கு வேதம் கிடைத்தது. இந்த வேதத்தின் தொடக்கத் துக்குத்தான் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டத்தின் உண்மையான பெயர் 'உபகர்மா' அதன் தொடக்கமாம்."

எப்படி இருக்கிறது? தொடக்கம் என்பதே ஒரு முறை தானே? ஆண்டுதோறும் தொடக்கம் - அதாவது 'உபகர்மா!' என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

சோவுக்கே உரித்தான குயுக்தியான விளக்கம் என்ன தெரியுமா?

"தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற ஒவ்வொரு ஆண்டும் உறுதிமொழி ஏற்கவில்லையா?" என்று புத்தசாலித்தனமாக சொல்லுவதாக அவருக்கு நினைப்பு!

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்படுவது உண்மை தான். ஆனாலும் அதைத் தொடக்கம் என்று சொல்லுவது உண்டா?

"உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மாவைச் செய்ய வேண்டும்" ('துக்ளக்' 1.9.2010) - இதுதான் சோவின் வெண்டைக்காய் விளக்கெண்ணெய்க் கத்தாழை விளக்கம்.

உண்மையச் சொல்ல வேண்டுமானால், பார்ப்பனச் சிறுவர்களுக்குப் பூணூல் அணிவிப்பதைப்  பூணூல் கல்யாணம் என்றே சொல்லுவார்கள். அதற்குப் பிறகுதான் அவன் பிராமணன் ஆகிறான்.

துவி ஜாதி (இருபிறப்பாளன்) ஆகிறானாம். உலக தத்துவம் பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணனிலிருந்து தொழிற்சங்கவாதியாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வி.வி. கிரி உள்பட, சோ, குருமூர்த்தி பார்ப்பான் வரை எதை விட்டுக் கொடுத்தாலும் தங்கள் ஜாதித் திமிர் அடையாளத்தைக் கிஞ்சிற்றும் விட மாட்டார்கள்.

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவரை 'துக்ளக்' சார்பில் பேட்டி காண வந்த போது, திராவிடர் கழகத் தலைவர் சோவைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். "நீங்களும் மனிதன் - நானும் மனிதன் - இதில் வேறுபாடு எதற்கு? நாம் இருவரும் சட்டையைக் கழற்றுவோம். அப்பொழுது தெரிந்து விடும் உங்களின் கதை" என்று சொன்னபோது - சாஸ்திர ரீதியாகப் பதில் அளிக்க வேண்டியதுதானே - அதைச் சொன்னால் வசமாகச் சிக்கிக் கொள்வாரே! சமாளிக்கும் வகையில் வீட்டில் உள்ள பெரியவர்களைத் திருப்திப்படுத்த பூணூல் அணிந்திருப்பதாகச் சொன்னாரா? இல்லையா?

தெரிந்து கொள்ளுங்கள் பார்ப்பனர்களை! பார்ப்பனர்கள் எவ்வளவோ மாறி விட்டனர் என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்!




No comments:

Post a Comment