தமிழர் தலைவர் 29 வயதில் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராக பொறுப்பேற்ற வியக்கத்தகுச் செயலைப் போலவே ‘விடுதலை’ ஏட்டிற்கு அவர் தீட்டிய முதல் தலையங்கமே மக்களின் இயல்பான எதிர்பார்ப்புடன் செல்லாமல் சற்று மாறுபட்டு இருந்தது. 1962 ஆகஸ்ட் 25ஆம் நாள் இதழில் வெளிவந்த அந்தத் தலையங்கத்தின் தலைப்பு ‘வரி இல்லாமல் ஆட்சி நடக்குமா?’ தலையங்கத்தின் தலைப்பே வாசிப்பவரை சற்று சிந்திக்க வைக்கும். ஆசிரியர் அவர்களின் எழுத்தும், பேச்சும் வாசிப்போருக்கும், கேட்போருக்கும் புதிய செய்திகளை, தெரிந்த செய்திகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களைக் கற்றுக்கொடுக்கும் வகையிலும், அவை பற்றிய சிந்தனைகளுக்கு ஆட்படுத்திடும் வகையிலும் அமைந்து வருவது வழமை. தந்தை பெரியாரின் பிரச்சார நெறிமுறையின் முழுமையான வழித்தோன்றல் ஆசிரியர் அவர்கள் என்பதன் வெளிப்பாடே அது.
ஆசிரியரின் முதல் தலையங்கம் காலங்கள் பல கடந்தும் ஒரு நல்லாட்சி என்பது எப்படி அமைந்திட வேண்டும் என்பதை பறைசாற்றிடும் வகையில் அமைந்தது. ஆசிரியர் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். பொது நிதியியலை (Public Finance) பட்டப்படிப்பு பாடமாக படித்தார். அதன் முத்திரை பதித்திடும் வகையில் தலையங்கத்தின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
பொதுவாக ‘புதிய வரி இல்லாமல் நிதிநிலை அறிக்கை அமைந்தால் அது சிறப்புக்குரியது;’ ‘நல்ல பட்ஜட்’ என்ற கருத்து பொது மக்கள் மத்தியில் அன்றும் நிலவியது; இன்றைக்கும் நீடிக்கிறது. இந்தப் பொது மக்கள் கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்டு தலையங்கம் அமைந்திருந்தது. இதோ... இப்படி:
“..... அரசாங்கம் வருமானத்தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்?
தனி மனிதன் பட்ஜெட் என்பது வரவுகேற்ற செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தை பெருக்குவது என்பதாகும். இது பொருளாதார தத்துவத்தின் பால பாடமாகும்.”
தனி மனித பட்ஜட் என்பதும், அரசாங்க பட்ஜட் என்பதும் அடிப்படையில் சற்று மாறுபட்டவை. நிதி ஆளுமை என்பது வரவுக்குள் செலவு அடங்க வேண்டும் என்னும் தனி மனித பொது மன நிலையை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்க பட்ஜட்டின் உள்ளீட்டை புரிந்துக் கொள்ள முயல வேண்டும்.
நம் நாட்டு அரசானது மக்கள் நலம் சார்ந்த அரசாகும் (Welfare State) மக்கள் நலனைக் குறித்து அக்கறைப்படும் அரசானது ஒவ்வொரு நிதியாண்டிலும் வெளியிடும் நிதிநிலை அறிக்கை (Budget) மக்கள் நலம், முன்னேற்றம் இவைகளை மய்யப்படுத்தியே தயாரிக்கப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் அரசுக்கு வருமானமும் இருக்கும்; செலவினமும் இருக்கும்.
“கல்வித் துறையில் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மேன்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செலவினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள் முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாமே! வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்?”
நம் நாடு சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக சமத்துவமற்ற நிலையில் உள்ளதாகும். பொருள் இல்லாதவருக்கும், இருப்பவருக்கும் உள்ள வருவாய் மற்றும் வாழ்நிலை இடைவெளிகள் அதிகமாகும். விகித அளவிலும் விரிந்த விரிசலே நிலவுகிறது.
இந்த இடைவெளியினைக் குறைப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அதனை பிரதிபலிக்கின்ற வகையில் நிதிநிலை அறிக்கையினை அரசுகள் - ஒன்றிய அரசு, மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன்கள் செல்லும் விகிதமும், அதே அளவிலாவது இருக்க வேண்டும் என்பது தான் சமதர்ம லட்சியம். இந்த லட்சியப்பயணத்தின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் ஒவ்வொரு படிக்கட்டு போன்றதே. எத்தனை படிக்கட்டுகள் என்பது லட்சியப் பயணத்தின் நோக்கத் தினை காட்டுவதாகும். படிக்கட்டில் மாற்றம் இல்லாமல் அதே நிலையில் இருப்பது தேக்க நிலையினைக் காட்டு வதாகும். புதிதாக வரியினை விதிக்காத நிதிநிலை அறிக்கை தேக்க நிலையைத் தெரிவிப்பதாகும். தேக்க நிலை என்பது பொது வெளியில் கண்டிக்கத்தகுந்தது - பாராட்டுக்குரியது அல்ல. புதிதாக வரி விதிப்பது என்பதில் யாரிடமிருந்து வசூலிக்கப்படவுள்ளது என்பதுதான் முக்கியமாகும். அரசுக்கு வருவாய் வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே வரிச்சுமையினை தாங்குபவர்களிடம் விதிக்கப்படுதல் கூடாது. வரிச்சுமையினை தாங்கக் கூடிய பணம் படைத்த பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட வேண்டும்.
பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிப் பிற்கு அதிகமாக பயன்பங்கீடு பெற்று அதன் மீது விதிக்கப்பட்ட குறைவான வரி விதிப்பு உள்ள துறைகளையும், வரி விதிப்பு விடுப்பட்ட பகுதிகளையும் கண்டறிந்து அவைகளிடம் - அவர்களிடம் கூடுதலாக வரிவிதிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந் திட வேண்டும். நிதி ஆண்டின் தொடக் கத்திலிருந்து இத்தகைய புதிய வரி - கூடுதலான வரி விதிப்பினை எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல் அரசானது நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கருத்துக்களை வலியுறுத்திடும் வகையில் ஆசிரியர் எழுதிய முதல் தலையங்கம் அமைந்திருந்தது. பொருளா தாரத்தைப் பலவீனப்படுத்திடும் நோய்களை ஒழித்திட வேண்டும். பரிந்துரைத்திடும் மருந்து குறித்து நோயாளிகளின் கருத்துப்பற்றி மருத்துவர் கவலைப்படக் கூடாது. அதைப் புறந்தள்ளி நோயாளியின் உடல் நலத்தை மட்டுமே கருத வேண்டும். அப்படிப்பட்ட மருத் துவர் நிலையிலிருந்து ‘விடுதலை’யின் முதல் தலையங்கத்தை ஆசிரியர் அவர்கள் படைத்துள்ளார். அன்று மட்டுமல்ல இன்றைக்கும் நாட்டுப் பொருளாதாரத்தைப் பிடித்துள்ள நோய் முழுவதுமாக நீங்கியபாடில்லை. பிரிட்டன் அரசியல் ஆதிக்கத்திலிருந்து நம்நாடு மீண்டு 75 ஆண்டுகள் ஆன பின்பும் பொருளாதாரத்தைப் பிடித்துள்ள நோயின் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை.
அண்மையில் வெளிவந்த உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுவதாவது:
The World Inequality Report 2022 says that the top 1 per cent of India held 22 per cent of the total national income as of 2021 and the top 10 per cent owned 57 per cent of the income.
2022 ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கைப்படி இந்தியாவில் 2021ஆம் ஆண்டுக்கான 22 விழுக்காடு தேசிய மொத்த வருமானம் உயர்மட்ட நிலையில் உள்ள 1 விழுக்காடு பகுதியினருக் கானதாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் பொருளாதார உயர்நிலையில் (செல்வந்தர்கள்) உள்ளவர்களுக்கு உடைமையாக 57 விழுக்காடு வருமானம் உள்ளது.
75 ஆண்டு கடந்தும் முழுவதும் நீங்காத பொருளாதார நோயை அன்றே அறிந்து ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் கருத்துக் கல்வியை வழங்கிய தலையங்கமாக ஆசிரியர் எழுதிய முதல் தலையங்கம் அமைந்தி ருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் நாட்டுப் பொருளாதாரத்தின் அன்றைய நிலையினை அறிந்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆட்சியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கும் விதமாக அது இருந்தது. ஏடு நடத்திடும் ஆசிரியர்கள் பலர், பல நாட்கள் கழித்து பக்குவப்பட்ட நிலையில் எழுதிடும் கருத்தாழம் மிக்க தலையங்கம் போன்று விடுதலை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற நிலையில் ‘முதல் தலையங்கமாக’ அவர் எழுதியது தனித்துவம் மிக்கது.
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் கொள்ளை வழித் தோன்றல் என்பதை ‘விடுதலை’ ஏட்டில் தான் எழுதிய முதல் தலையங்கத்திலிருந்து, இன்றைக்கும் தொடர்ந்திடும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்து சமுதா யப் பணி ஆற்றிவருகிறார். ‘விடுதலை’ ஆசிரியரின் 60 ஆண்டு காலப் பணிகள் பகுப்பாயப்பட்டு வருங்காலத்திற்கும் பயன் நல்கிட வேண்டும்.
வாழ்க ‘விடுதலை’ ஆசிரியர்!
தொடர்க அவரது இதழியல் பணிகள்!
No comments:
Post a Comment