முத்தமிழ் அறிஞர் நினைவை பறைசாற்றும் 134 அடி உயர பேனா சின்னம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

முத்தமிழ் அறிஞர் நினைவை பறைசாற்றும் 134 அடி உயர பேனா சின்னம்

வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டக் கூடியது
செங்கோலை விஞ்சியது கலைஞரின் எழுதுகோல்!
தமிழ்நாடு அரசு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவது மிகப் பொருத்தம்!

கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் 134 அடி உயரத்தில் கடலில் நிறுவப்பட இருக்கும் பேனா வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் சின்னம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொது வாழ்வில் வேறு எந்தத் தலைவரும் செய்திராத சாதனைகளைச் செய்து சரித்திரம் படைத்தவர் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

அவர் 14 வயதில் - மாணவப் பருவத்தில் மொழி, பண்பாடு காக்கும் உரிமைப் போரில் ஈடுபட்டு அவரது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர்.

அது மட்டுமல்ல; அவர் ஒரு பல்கலைக் கழகம். சிந்தனை, எழுத்து, பேச்சு, செயல் எல்லாம் இணைந்த ஓர் அற்புத - அதிசய கலவையாவார்!

எந்தவித பின்புலம், ஆடம்பர, ஆர்ப்பாட்ட வரலாற்றின் அடித்தளத்தில் நின்று, இச்சாதனைகளை செய்து காட்டியவரல்லர்.

எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் கலைஞர்

1969இல் முதலமைச்சர் பதவியேற்கையில் சட்டமன்றத்தில் "நான் எளிய குடும்பத்திலிருந்து வந்தவன். எனக்கென தனிப் பெருமை ஏதும் கிடையாது. மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன். இன்னும் எத்தனை 'மிக'  வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்" என்ற பீடிகையுடன் அவர் ஆற்றிய உரை அடக்கத்தின் இலக்கண உரையாகும்!

அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் என்ற வரிசையில் உயர்ந்தது - அவரது அயராத உழைப்பும், தளராத தன்னம்பிக்கையும், ஆற்றல்மிகு ஆளுமைத் திறன் காரணங்களினாலேயே!

திரைப்படத் துறையை அவர் கொள்கைப் பிரச்சாரத்திற்காக ஒரு கொள்கை பரப்புத் திரையாகவே திருப்பம் ஏற்படுத்திய திராவிடத் தீரர் அவர்!

"கொள் என்றால் வாயைத் திறந்து, கடிவாளம் என்றால் வாயை மூடிடும்" வழமையான குதிரை போன்றவர் அல்ல; அவருக்குக் கடிவாளமும் - சிறைத் தண்டனை, அடக்குமுறை சோதனைகள் - 'பதவி இழப்பது',  விலைகள் என்பவை - கொள்! இவற்றையும்,  5 முறை முதலமைச்சர் பதவி போன்றவைகளையும் சம மாகவே கருதி ஒவ்வொரு நிலையிலும் தகுதி தளும்பிட உழைத்த தனிப்பெரும் ஆற்றலாளர். தண்டவாளத்திலும் தலை வைத்துப் படுக்கத் தயங்காதவர்.

"தந்தை பெரியாரிடம் சேர்ந்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை" என்று கூறியது மட்டுமல்ல. அய்யாவின் வழியில் தன்னை 'ஒரு வரி விமர்சனமாக' 'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்பதை வலியுறுத்திய கொள்கைக் கோமான்!

கலைஞர் பற்றி அண்ணா

அண்ணாவின் அருமைத் தம்பிகளில் இவரைப்பற்றி தொலைநோக்கோடு அய்யாவைப் போலவே அண்ணாவும் "முன் பகுதியை நான் எழுதினாலும் அடுத்த பின்பகுதியை என் தம்பி கருணாநிதி முடித்து வைப்பார்" என்றார்.

அவரது புகழ் மிக்க மொழிகளில் மிக முக்கியமானது மறக்க முடியாதது - என்றென்றும் நிலைத்து நிற்பவையில் முதன்மையானது,

"என்னிடமிருந்து செங் கோலைக்கூட பறித்துக் கொள்ள முடியும்; ஆனால் எவரும், எந்த சக்தியும் எனது எழுதுகோலைப் பறித்துவிட முடியாது" என்றதாகும்.

80 ஆண்டு பொது வாழ்க்கையில் அவர் எழுதாத எழுத்தில்லை; பேசாதப் பொருளில்லை.

ஆட்சியில் அவர் சாமான்ய மக்களையே நினைத்து செய்த சட்ட திட்டங்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து - தனி வரலாற்றை இணைத்த முறை, பெண்களுக்குச் சொத்துரிமை, படிப்புரிமை, பணி உரிமை எல்லாம் தந்து சரிபகுதி மானிடத்தை உயர்த்திய சரித்திரம்.

"செம்மொழி" தகுதியைக் கொண்டு வந்தவர்

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பேதமற்று அனைத்துத் தலைவர்களையும் அவர்கள் மறைந்த பிறகு பெருமைப்படுத்தி சிறப்பு செய்த முறை, 'நீஷபாஷை' என்ற கொடுமையை அழித்து, செம்மொழித் தகுதியை தமிழுக்கு வாங்கிய தனிப் பெரும் சாதனை - இவை எல்லாவற்றிற்கும் மேலாக நவீன தமிழ்நாட்டைஉருவாக்கி, 'திராவிட மாடல்' ஆட்சியினைத் தொடரச் செய்தவர். தனக்குப் பிறகும் ஓர் ஒப்பற்ற தலைமையை" யானைத் தன்  குட்டியைப் பழக்குவது போல"ப் பழக்கி, பல்வேறு தேர்வுகளை அவர் அறியாமலேயே நடத்தி, இந்தியாவின் ஒப்பற்ற முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழும் வண்ணம் அரசியல் மற்றும் கொள்கைப் பயிற்சியையும் ஏற்படுத்தி, 'திராவிட மாடல்' ஆட்சியின் பெருமை திக்கெட்டும் பரவிடவும் வகை செய்தார்.

அப்படி மற்ற அரசியல் கட்சியில் இல்லாததால்தான் இன்றைக்குக் காணும் அலங்கோலங்களின் அருவருக்கத்தக்க நடவடிக்கைகள்; இலட்சிய ஜனநாயக வழிமுறையாலும், நிலைத்த ஆட்சி; நீடித்த புகழ் - நினைவெல்லாம் நிறைந்த ஆட்சிச் சாதனைகளை நித்தம் நித்தம் நிகழ்த்திட களப்பயிற்சியில் தனக்குப் பின்னும் தன் தம்பிமார்களை கொள்கை வயப்பட்டு ஆக்கிய வலிமை கலைஞரின் சாதனைகளில் முத்தாய்ப்பானதாகும்!

134 அடி உயரத்தில் கலைஞருக்குப் 'பேனா' சின்னம்!

அத்தகைய ஒரு தலைவருக்கும், அவருடன் இணைந்த எழுதுகோல் சின்னமான - வலிமை வாய்ந்த கருத்தாயுதமான பேனாவை அடையாளப்படுத்தி ஒரு நினைவுச் சின்னத்தை பேனா வடிவில் 134 அடி உயரத்தில், கடலுள் கண்ணாடிப் பாலம் மூலம் சென்று பார்த்து வியக்கும் அருமையான ஒரு சின்னத்தை தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பது மிகப் பொருத்தமே ஆகும்!

கலைஞரின் பேனா எனின் மொழி இனவுணர்வாளர்களின் பிரதிபலிப்பு

வள்ளுவர் கோட்டம் போல, கன்னியாகுமரி 133 அடி திருவள்ளுவர் சிலை போல, சென்னையில் வங்கக் கடற்கரையில் இப்படி ஒரு திராவிடத் திருமகன் தனது வாழ்வில் 'வாளினும் வலிமை மிக்கது பேனா!' என்ற பழமொழிக்கு உருவகமாக தமிழ்நாடு அரசு செலவில் அமைத்திடுவதை எதிர்ப்பு அரசியல், அங்கலாய்ப்பு, வயிற்றெரிச்சல் காரணமாக சிலர் எதிர்க்கிறார்கள்!

கலைஞரின் அந்தப் பேனா அசாதாரணமானது. அதன் மை - வற்றாத செயல்களாக ஆக்கி இருப்பது. பெரியார் - அண்ணா - தமிழ் இன மொழி உணர்வாளர்களின் சிந்தனை செயலாக உள்ளமை என்பதாம்.

வருங்கால தலைமுறையினருக்கான சின்னம்!

எதிர் நீச்சல் எங்கள் வாடிக்கை என்றே உலகுக்கு உணர்த்திய உன்னத இயக்கம் திராவிடர் இயக்கம் என்பதாம். இந்த சலசலப்புகள் கண்டு தமிழ்நாடு அரசோ, முதலமைச்சரோ யோசிக்க வேண்டியதில்லை.

இது கலைஞர் என்ற ஒரு தனி மனிதருக்கான சிறப்பு மட்டுமல்ல; எழுத்துரிமையில் எதனையும் எதிர் கொண்டு வென்றுகாட்ட முடியும் என்ற சரித்திர உண்மைக்காகவும், சாசுவதமான சரித்திரச் சான்றாகவே அது திகழும்!

அதன் பெருமை சிறப்பு வருங்கால தலை முறையி னருக்கும், எழுத்துக்களால் எப்படி சமுதாயங்களைப் புரட்டிப் போட்டு புத்தாக்கம் செய்து மவுனப் புரட்சியாக நடத்தி சாதிக்க முடியும் - நவீன மின்னணு அறிவியலின் ஆற்றலோடு பொருத்திக் காட்டுவது - மக்களை ஈர்த்து தனித்ததோர் வியத்தகு விஞ்ஞான வெற்றியைக் காட்டும் சிறப்பான ஏற்பாடு; எனவே வயிற்றெரிச்சல்காரர்கள், வம்பு பேசுவோர்   எவரையும் பொருட்படுத்தாது - எடுத்த பணியை முடிக்க - மக்களைத் திரட்டிட அனைத்து முற்போக்காளரின் ஆதரவு  - பேராதரவு உண்டு என்பதால் - வங்கக் கடற்கரையில் வரலாற்றுச் சின்னம் வைரமாக ஒளி பெறட்டும்!

இது கலைஞருக்குப் பெருமை என்பதைவிட, நமது நன்றி உணர்ச்சிகளின் வெளிப்பாடு அல்லவா!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4.8.2022


No comments:

Post a Comment