மேட்டூர், ஆக. 3 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருநாடகாவில் கனமழை காரணமாக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 5 மணியளவில் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.
அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 24ஆவது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (2.8.2022) காலை 51,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு மணியளவில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 97,000 கனஅடியும், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.11 அடியாகவும், நீர் இருப்பு 93.64 டி.எம்.சியாகவும் உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதி காரிகள் காவிரி கரையில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி கரையோரங் களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment