சென்னை, ஆக.27 காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 11 டெல்டா மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் நீர்வளத் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருநாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 25.8.2022 அன்று காலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, இரவு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 26.8.2022 அன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்தது. மாலை 4 மணிக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், 16 கண்மதகு வழியாக விநாடிக்கு 27 ஆயிரம் கன அடியும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.
கருநாடகாவில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், கூடுதலாக காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி உள்பட
11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவிரி கரையோர மக்களுக்கும் மேட்டூர் நீர் வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment