நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, வடமாநிலங்களைச் சேர்ந்த 299 பேரை தேர்வு செய்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என என்.எல்.சி. நிறுவனம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கெனவே, தங்கள் சொந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக தாரை வார்த்துவிட்டு, அதில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பாவது கிடைக் காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏழைக் குடும்பங் களுக்கு எத்தனை பெரிய பேரிடி இது?
என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது - பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக் கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்.
இது கண்டனத்துக்குரியதாகும் என்று மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் தம் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு குறித்து பல முறை தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்ததுண்டு - போராட்டங்களையும் நடத்தியதுண்டு.
இரயில்வே துறையாக இருந்தாலும் சரி, அஞ்சல் துறையாக இருந்தாலும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கு தொடர் கதையாகி விட்டது.
இந்த நிலை தொடருமேயானால், வேலை வாய்ப்பைத் தேடிக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கொந்தளிக்கும் எரிமலையாக வெடித்துக் கிளம்புவார்கள் என்று எச்சரிக்கிறோம்.
அரியலூரில் கடந்த 30ஆம் தேதி நடத்தப்பட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் (எண் 9) இந்த நேரத்தில் நினைவூட்டி எச்சரிக்கிறோம்.
"தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பொதுத் துறைகளின் வேலைவாய்ப்புகளில் சட்ட விரோதமாக வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. வங்கிகளில் தமிழ் தேர்வு அவசியமில்லை என்பதும், வங்கிச் செயல்பாடுகளில் தமிழைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிகளைக் கொண்டுவருவதற்கு அச்சாரமாக இந்தப் போக்கு இருப்பதையும் காண முடிகிறது. இந்த நிலை தொடர்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதுடன், தமிழ்நாடு அரசின் பணி வாய்ப்புகளிலும் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி, வடநாட்டவர் ஆக்கிரமிப்புத் தொடர்வதை (எ.கா: பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்) மிகுந்த இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப் பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை விரைவுபடுத்திடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது."
No comments:
Post a Comment