சென்னை, ஆக.2- சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 தேர்வில், கலந்தாய்வுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற, 66 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இந்த வெற்றியாளர் பட்டியலில் தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள்!
ஒரு போட்டித் தேர்வில் மகளிர்பெற்று இருக்கும் இந்த வெற்றி விகிதம் (87விழுக்காடு) தேசிய அளவில் மகத்தான சாதனை. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 30விழுக்காடு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 66 பணியிடங்களில் 20 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதம் உள்ள 46 பணியிடங்கள் பொதுப் போட்டியில் நிரப்பப்பட்டவை. இவற்றிலும் 37 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, மாவட்ட துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரிஉதவி ஆணையர் உள்ளிட்ட மிகவும் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிகளுக்கான கடினமான தேர்வு. ஏறத்தாழ, அய்ஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு இணையானது.
இத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்வோர் சுமார் 10ஆண்டுகளில் அய்ஏஎஸ் பணிக்குப்பதவி உயர்வு பெறுவார்கள். இத்தனை உயர்ந்த பொறுப்புக்கு வருகிற இளைய தலைமுறையினரில், 87விழுக்காடு பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment