“வீண் வம்பு வேண்டாமே!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

“வீண் வம்பு வேண்டாமே!”

கலி.பூங்குன்றன்

“இந்து தமிழ் திசை” (2.7.2022) ஏட்டில் கீழ்க்கண்ட தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“பெரியார் - மணியம்மை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?”

என்பது தான் அந்தத் தலைப்பாகும்.

இந்து - கிறித்தவர் இருவருக்கிடையே நடைபெற்ற திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

“இந்த வழக்கில் வயது வெறும் எண்ணா? என்ற கேள்வி எழுகிறது. எப்போதும், அப்படி இல்லை. சிறப்பு திருமணச் சட்டத்தில், திருமணப் பதிவுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அதை சார்-பதிவாளர் திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்தப் புத்தகம் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். 

அப்படிதான் 72 வயதான பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கும், 27 வயதான மணியம்மைக்கும் நடக்க இருந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மனைவி அவரைவிட 25 வயது மூத்தவர். இதுபோன்ற உதாரண ஜோடி களுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே” என்று நீதிபதி திரு.ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தர வில் கூறியுள்ளார்.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட திருமணம் தொடர்பான வழக்கிற்கும், தந்தை பெரியார் - மணியம்மையார் இருவருக்கும் நடைபெற்ற திருமணம் என்ற ஏற்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

எதற்காக வலிந்து தந்தை பெரியார் - மணியம் மையார் இருவருக்கும் நடைபெற்ற திருமணம் என்ற ஏற்பாட்டை இழுக்க வேண்டும்?

(அதில்கூட ஒழுங்கான தகவல் உண்டா? பெரியாருக்கு வயது 72 என்றும், மணியம்மைக்கு வயது 27 என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் தந்தை பெரியாருக்கு அப்போது வயது 70, மணியம்மையாருக்கு வயது 30 - ஒரு பொறுப்பான பதவியில் இருக்கக் கூடியவர் வாய்க்கு வந்தவாறு எல்லாம் கூறக் கூடாது அல்லவா!)

தனது திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே தவிர, மற்றபடி இயக்கப் பாதுகாப்புக் கருதி செய்யப்பட்ட ஒரு ஏற்பாடேயன்றி வேறில்லை என்பதை தந்தை பெரியார் ’விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார்.

பெரியார் வாழ்வில் எந்த ரகசியமும் கிடையாது - எல்லாம் வெளிப்படைதான். அவர் ஏதோ மறைத்து வைத்ததுபோலவும், அது அந்த பதிவாளர் அலுவலக நோட்டீஸ் மூலமே வெளி உலகத்திற்குத் தெரிய வந்ததாகவும் கூறியுள்ள இந்த நீதிபதி தவறான ஒரு கருத்தை தந்தை பெரியாருக்கு எதிராகப் பரப்பும் விஷமத்தனம் செய்கிறார்.

தந்தை பெரியார் அறிக்கை மூலம் விளக்கமாக ‘விடுதலை'யில் எழுதிவிட்டார் (28.6.1949லேயே). அது சிதம்பர ரகசியம் அல்ல!

 தந்தை பெரியார் விடுத்த அறிக்கைகள், மக்களுக்குத் தெரியப்படுத்தியது, முன்கூட்டியே அறிவித்த விளக்கம் என்பதையெல்லாம் பெரியார் - மணியம்மை திருமணம் என்ற புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருப்பது அந்த அதிபுத்திசாலித்தன சட்ட ‘ஆரோக அவரோகண நீதிபதிக்கு' ஏனோ தெரியாது போயிருக்கிறது!

"நீதிபதிகள் வழக்குரைஞர்களாக இருந்த போது பல அரசியல் கட்சிகள் - கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருந்தாலும், நீதிபதியானதும் அவர்கள் தீர்ப்பு எழுதும் பொழுது அந்த பிரதிபலிப்பு வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்" என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

பல ஆர்.எஸ்.எஸ். அரைக்கால் சட்டை நீதிபதி களுக்கு அந்த நினைப்பிலிருந்து வெளியேற முடியவில்லை போலும்! 

நீதி பரிபாலனத்துக்கு இது ஊறு விளைவிப்பதாகும்.

இவரது பழைய நீதிமன்ற உத்தரவுகளைக் கவனத்துக்குக் கொண்டு வந்தால், இதன் தன்மை எந்த வகையைச் சார்ந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்.

“பகுத்தறிவாளர்களைக் கேலி செய்தது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் சிலரை விமர்சிக்கக் கூடாது. அதில் ஒருவர் பெரியார் - அவர் இந்த நாட்டில் ஒரு புனிதப் பசு! (Holly Cow)” என்று சொன்னவரும் சாட்சாத் இந்த நீதிபதியே!

சிறீரங்கத்தில்  உணவு விடுதியில் இருந்த ‘பிராமணாள்’ பெயர் நீக்கப் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொண்டது தொடர்பான வழக்கில் ஏன் ‘கோனார் மெஸ்’ இல்லையா? அதுபோன்றதே ‘பிராமணாள்’ என்பதும் - என்று கூறியவரும் சாட்சாத் இதே நீதிபதி பெருமான்தான்! (ஜாதிக்கும் - வருணத் திற்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பாடம் எடுக்க வேண்டும் போலும்!)

இவற்றை எல்லாம் தொடர்புபடுத்திப் பார்த்தால் தான் கனம் நீதிபதி திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர் களை அறிய முடியும்.

சென்னை உயர்நீதிமன்றத்திலேயே பார்ப்பன நீதிபதிகள் பற்றித் தந்தை பெரியார் உரக்கவே கூறியுள்ளார்.

திருமணம் என்ற ஏற்பாடு எதற்கு என்று தந்தை பெரியார் வெளிப்படையாகவே எழுத்துப் பூர்வமாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் நீதிபதி திருமண ஜோடி என்று பெரியார் - மணியம்மையார் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில் உள்ள தன்மை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரியார் - மணியம்மை திருமண ஏற்பாடு குறித்து தப்பும் தவறுமாக எழுதி ’விடுதலை’யிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள்.

இது ஒரு புறம் இருக்கட்டும்! ‘இந்து தமிழ்த் திசை’ ஏடு நீதிபதியின் உத்தரவுக்குக் கொடுத்த தலைப்பு என்ன?

“பெரியார்-மணியம்மை திருமணம் வெளிச்சத் துக்கு வந்தது எப்படி?” என்று தலைப்பிட்டுள்ளது.

பெரியார் - மணியம்மை திருமண ஏற்பாடு என்பது வெளிப்படையானது. இதில் “வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?” என்பது எங்கிருந்து வந்தது?

எந்த உயரமான இடத்தில் இருந்தாலும் சிலருக்கு  எப்போதும் தந்தை பெரியார் நினைவு தானா? (Phobia).

நல்லதுதான், நடக்கட்டும்! நடக்கட்டும்!! இதன் மூலம் புதிய தலைமுறையினருக்கு இனவுணர்வு பீறிட மேலும் வீறுப் பெற தூண்டுதலாகவே இருக்கும் - நன்றி!


சங்கராச்சாரியாருக்கு வக்காலத்தா?

"ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி 

ஜி.ஆர். சுவாமிநாதன் தம் தீர்ப்பில் கூறிய கருத்து:

டிசம்பர் 22, 2021- காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்ட போது கண்மூடி அமர்ந்து இருந்தார். இதனையடுத்து, ராமேசுவரத்தில் உள்ள காஞ்சி மடத்தின் கிளையில் தமிழ் ஆர்வலர்கள் நுழைந்தனர் எனவும், அதற்கு மட மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை அவர்கள் மிரட்டியதா கவும் மடத்தின் மேலாளர் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை தமிழ் ஆர்வலர்கள் நாடினர்.

இவ்வழக்கில் நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்குறிப்பிட்ட இரண்டு அரசாணைகள் - 1393, 3584/70-4 ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். “'தமிழ்த்தாய் வாழ்த்து” வழிபாட்டுப் பாடலாகவே இந்த அரசாணைகள் வரையறுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, “தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப் பாடல், அது கீதம் அன்று” என்று குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தச் சட்டமும், அரசாணை யும் இல்லை என்பதாகவும் அத்தீர்ப்பில் கவனப் படுத்தினார்

மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உச்சபட்ச மரியாதையும், மதிப்பும் தரவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பது மரபாக இருக்கிறது என்பது உண்மையே! ஆனால், ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும். பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளை யும் நாம் கொண்டாடும் போது, ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது போலித்தனமானது.

ஒருவர் சந்நியாசி ஆகும் போது பண்பட்ட மரணத்துக்கு ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு எடுத் ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி எளிய வாழ்வினையே வாழ்கிறார். அவர் வழி பாட்டில் ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான நிலையில் இருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்து வழி பாட்டுப்பாடல் என்பதால் சந்நியாசி தியான நிலையில் அமர்ந்து இருப்பது நிச்சயம் நியாயமானது. இந்த நிகழ்வில், மடாதிபதி தியான நிலையில் அமர்ந்து கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த் தாய்க்கு மதிப்பும், மரியாதையும் செலுத்தும் விதமாகும்” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

எப்படி இருக்கு? பெரியார் ‘புனிதப் பசு’ என்று ஓரிடத்தில் கேலி! 

ஒரு பொது நிகழ்ச்சியில் சங்கராச்சாரியார் நடந்து கொண்ட அநாகரிக செயலுக்கு இன்னொரு இடத்தில் நியாயம் கற்பிப்பு!

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடப்படும் போது தள்ளாத வயதிலும் பிறர் துணையோடு எழுந்து நிற்கும் பண்பாட்டையும் நீதிபதிகள் நினைத்துப் பார்க்கட்டும்!

No comments:

Post a Comment