இலங்கையில் நடக்கும் அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார சீரழிவு - அதன் தாக்கம் குறித்து விவாதிக்க தென் மாநில நாடாளுமன்ற உறுப் பினர்களை 19.07.2022 (செவ்வாய்) அன்று டில் லியில் சந்தித்து கலந்துரையாடினார் ஒன்றிய அரசின் வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்.
சந்திப்பு முடிந்த பிறகு நாளிதழ் ஒன்றுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் போது, தெற்கே உள்ள மாநிலங்கள் சலுகைகளை அள்ளி வீசுவதாலும், மக்களுக்கு அறிவிக்கும் இலவச திட்டங்களாலும் இலங்கை போன்ற ஒரு சூழல் வருமோ என்று அச்சமாக உள்ளது என்றும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிதி நிர்வாகம் சரியாக இல்லாததது கவலை அளிப்பதாகவும், கூறியுள்ளார். சொல்வதை எல்லாம் சொல்லி விட்டு இதில் அரசியல் எதுவும் இல்லை என்று வேறு கூறியுள்ளார்.
மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் இவருக்கு சமூகநீதிக்கான திட்டங்கள் எவை என்று தெரிந்திருக்கும், ஆனால் இவர்களோ பின்வாசல் வழியாக வந்தவர்கள். நேரடியாக குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து அப்படியே அமைச்சர் பதவியில் அமர்ந்தவர்கள்.
மிகவும் சாதாரணமாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்ட அறிவிப்பை நிதி நிர்வாக சீர்கேடு என்று கூறிவிட்டுச் செல்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், நிதி அமைச்சரும் இவரின் இந்த காழ்ப்புணர்ச்சியான கருத்துக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாகும். மாணவர்களுக்கு மதிய உணவு, சத்துணவு, இலவசப் புத்தகங்கள், இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள் இன்னோரன்ன பொருள்கள் அளிப்பதால் கல்வியில் வளர்ந்தோங்கி நிற்கிறது. முதுநிலைக் கல்வியில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே 51 விழுக்காடு என்ற அளவில் முதலிடத்தில் கோலோச்சி நிற்கிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு இல வசத் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இலவசப் பேருந்து பயணத் திட்டம் என்பதில் பொருளாதார ரீதியில் அவர்களுக்கான பலன்கள் அதிகம்.
இலவசப் பேருந்து பயணத்தால் பெண்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது - இதனால் குடும்ப வருவாய்ப் பெருகும்.
இலவச நாப்கின்ஸ் திட்டம் என்பது பெண்களின் சுகாதாரக் கண்ணோட்டத்தில் எவ்வளவு முக்கிய மானது!
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம் பெரும் புரட்சிகரமானது. ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூபாய் 18 ஆயிரம் என்பது எவ்வளவுப் பெரிய உதவி. இதனால் சிசு மரணம், தாய் மரணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு.
டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டம் என்பது எல்லாம் திராவிட மாடல் அல்லவா?
இலவசம் என்று இவற்றை கொச்சைப்படுத்த வேண்டாம். இவை சமூக மாற்றத்திற்கான ஏணிப்படி என்பது நினைவிருக்கட்டும்.
'திராவிட மாடல்' இந்தியா முழுவதும் பரவும் - பரவ வேண்டும். 'வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ' என்று உளற வேண்டாம்!
No comments:
Post a Comment