என் தந்தையார் திராவிடர் கழகத்தவர்; நானும் மானசீகமாக உங்களோடுதான் இருக்கிறேன் - அமைச்சர் சிவசங்கர்
தோளில் துண்டு போட்டு நடக்கும் உரிமையை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் - அமைச்சர் சி.வெ.கணேசன்
நமது இலட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை'
அதை எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்! - தமிழர் தலைவர் ஆசிரியர்
அரியலூர், ஜூலை 31- திராவிடர் இயக்கத்தின் கொள்கை, தேவை, தந்தை பெரியார் தம் தொண்டின் பலன் ‘விடுதலை' என்னும் பேராயுதம் குறித்து, திராவிடர் கழகத் தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அரியலூரில் நடைபெற்ற மாநாட்டில் முழக்கமிட்டனர்.
ஜூலை 30 அரியலூர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக மாநில இளைஞரணி சார்பில் திறந்தவெளி மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன் வரவேற்புரை நிகழ்த்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரா. வெற்றிக்குமார் தலைவரை முன்மொழிய நிகழ்வு தொடங்கியது.
மாநாட்டு வெற்றிக்கு பெரிதும் காரணமாய் அமைந்த கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இளைஞர் பட்டாளத்தின்
கோட்டையான அரியலூர்
அவரது உரையில் ஒருபுறம் விடுதலை 60,000 சந்தாக்கள் சேகரிப்புப் பணி, மற்றொருபுறம் இளைஞரணி மாநாடு என்ற நிலையில், இளைஞர்கள் வருவார்களா? மாநாடு வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்தோம். ஆனால், இளை ஞர் பட்டாளத்தின் கோட்டையாக இன்று அரியலூர் மாறி, மாநாடு வெற்றியை நிரூபித்துள்ளது என்று கூறி நிகழ்விற்கு ஒத்துழைப்பு தந்த அமைச்சர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார். கிராமம் சார்ந்த மண், காவி கூட்டம் கையகப்படுத்த நினைக்கும் மண். இந்த மண்ணில் காவிக்கு இடமில்லை என்று, பெரியார் நமக்குத் தந்த சொத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், பெரியார் போட்டுத் தந்த பாதையில், அவரின் பணி முடிப்போம் என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து தொடக்க உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.
இனத்தினை காக்கும் தலைவர் ஆசிரியர்
மாநாட்டு வெற்றிக்கு அயராது உழைத்து, உழைப்பின் உருவம் த.சீ. இளந்திரையன் என்று, தமிழர் தலைவரால் மாநாட்டு மேடையிலேயே பாராட்டப்பட்ட மாநில இளைஞர் அணி செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில், தமிழர் தலைவர் வரிக்குதிரையை போன்ற தலைவர். வரிக்குதிரைக்கு இருக்கும் ஒற்றைக் குணம், மற்ற வரிக்குதிரைகள் அதன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறபோதும், ஒற்றை வரிக் குதிரை மட்டும் தனது இனத்தை காக்கும். மற்ற வரிக்குதிரைகளை காக்கும் பணியினை செய்யும். அப்படி நம் இனத்தை அழிக்கும் எதிரிகளை கண்காணிக்கும் உயரிய குணம் படைத்த தமிழர் தலைவர் அவர்களை யாராலும் அசைக்க முடியாது. காரணம், சிங்கம் புலியை கூட சர்க்கஸ் கூடாரத்தில் பழக்கப்படுத்த முடியும். ஆனால், இதுவரை வரிக்குதிரையை பழக்கப்படுத்த முடியவில்லை. அதுபோல் மதவாத, பயங்கரவாத, பாசிசம் என்று எவற்றாலும் இந்த தலைவரை மட்டும் அசைக்க முடியாது என்று உணர்ச்சிப் பெருக்குடன் தனது உரையை தொடங்கி, 30.4.2022 அன்று சென்னையில் இந்தி அழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், இன்று பேரணியில் தலைவரின் தலைமையில் நாங்கள் இருக்கிறோம் என்று கட்டியம் கூறும் மாநாடாக அமைந்தது என்று கூறி, தந்தை பெரியாரின் அறிவுரையை மேடையில் வாசித்து, இனத்தைக் காக்க எங்கள் தலைவர் இருக்கிறார். ஜாதி, மதவாதம், இந்தித் திணிப்பு அவற்றை அழிக்க கட்டளை இடுங்கள்; இன்னுயிர் தரவும் நாங்கள் தயார்! தயார்! என்று ஒட்டுமொத்த கருஞ்சட்டை இளைஞர்களின் குரலாய் பேசி அமர்ந்தார்.
திராவிட இயக்க உணர்வும்,
அரியலூரும் பிரிக்க முடியாத ஒன்று
திராவிட முன்னேற்றக் கழக மாநில உறுப்பினர்கள் சார்பில், மாநில சட்டத் திட்ட குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரசேகர் உரையாற்றினார். அவரது உரையில், அரியலூர் முழுவதுமே திராவிட இயக்க உணர்வோடு இருக்கும் பகுதி. அதிலும், குறிப்பாக செந்துறை மண் திராவிட இயக்க உணர்வோடு பிரிக்க முடியாத ஊர் என்பதை பதிவு செய்து, யாரும் செய்ய முன் வராததை தன் தோளில் சுமந்து பெரியார் செய்த போது அவரது எண்ணங்களை ஈடேற்றும் வகையில் அண்ணாவும் கலைஞரும் அரசியலில் திகழ்ந்த விதத்தை விவரித்து, 90 வயதில் யாரும் எண்ணிப் பார்க்காத முடியாத செயலை ஆசிரியர் செய்கிறார் என்றார். இன உணர்வை ஊட்டுவது ஆசிரியராகவும், அல்லும் பகலும் அதனை ஈடேற்ற முதலமைச்சர் உழைக்கிறார். முழு அதிகாரமும், முழு ஆணவத்தோடும் இருக்கிற பாசிசத்திற்கு எதிராக நம்பிக்கை பெற்ற தலைவராக தளபதி இருக்கிறார் என்று உரையாற்றினார்.
திராவிட மாடலை பார்த்தால்
பிஜேபிக்கு எரிச்சல்!
சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரது, திராவிடர் இயக்கக் குடும்பப் பின் புலத்தை விவரித்து, தனது தந்தை கா.சொ. கணேசன், தாத்தா அணைக்கரை டேப் தங்கராசு ஆகியோர் வாழ்நாள் முழுவதும் எப்படி பெரியார் மீது பற்றும், திராவிட உணர்வும் பெற்றிருந்தார்கள் என்பதை அழுத்தமாக கூறினார். அவரது தந்தை காலத்தில் திறக்க முடியாத பெரியாரின் வெண்கல சிலையை, 2012இல் அவர் திறந்து வைத்ததையும் பதிவு செய்தார். "நானும் கடவுள் மறுப்பாளர் தான்" என்று மாநாட்டு மேடையில் கொள்கை உணர்வுடன் வெளிப்படுத்தினார். தினமலர் தனது நாலாம் பக்க கட்டுரையில் வழக்கம் போல் தேர்தலின் போது ஆரத்தி எடுத்தனர், கடவுளை ஏற்றுக் கொண்டனர். இப்போது கடவுள் மறுப்பு பேசுகிறார் என்ற போது, அவர் சொன்ன பதில்: மக்களை கடவுளாய் நினைத்துக் கும்பிட்டேன். மக்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் நின்றேன் என்று சொன்னதைப் பதிவு செய்தார். எந்தக் கோயில் திருவிழாவுக்கும் நான் செல்லாதவன். ஆனால், மக்களுக்கு நன்மை செய்வேன் என்றார். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்! இன்று நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை பார்த்தால், பிஜேபிக்கு எரிச்சல். காரணம், இந்த ஆட்சி பெரியார், அண்ணா, கலைஞர் சிந்தனையை நிறைவேற்றுகிறது. பெரியாரின் மறு உருவமாக திகழும் ஆசிரியர், தளபதிக்கு ஆலோசனையை வழங்கி, வழிநடத்த வேண்டும். இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்தார்.
அனைவருக்கும் பெரியார் தேவை
சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா (மதிமுக) தனது வாழ்த்துரையில்: தந்தை பெரியார், திராவிடர் கழகத்திற்கு மட்டும் தலைவர் அல்ல. ஆரிய, கலாச்சார பண்பாட்டை எதிர்த்து நேரில் போர் செய்தவர். இந்த மாநாடு பெரும் நம்பிக்கையை தரும் மாநாடு. இன்று தமிழ்நாடு மட்டும்தான் பிஜேபியிடம் தப்பித்துள்ளது. அதனால், நேரடியாக பிஜேபி போர் தொடுக்க தொடங்கியுள்ளது. அந்த சூழலில், இந்த மாநாடு நம்பிக்கையை தரும் மாநாடாக அமைந்துள்ளது. பெரியார், திராவிடர் கழகத்திற்கு மட்டும் சொந்தமில்லை. காரணம், காங்கிரசிலும் கம்யூனிஸ்டிலும் எந்த தளபதியாக இருந்தாலும் பெரியாரால் தயாரிக்கப் பட்டவர்கள். இந்த வயதிலும் தமிழர் தலைவர் போராடுகிறார். தமிழ்நாடு அரசுக்கு ஆலோசகராக இருக்கிறார். தமிழ்நாட் டிற்கு பெரியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார். அவரை அழைத்து காந்தி சிலையை திறக்க, எதிர்ப்பு வந்தது. அவர் ஏன் திறக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர் அவர்கள் தான் திறக்க வேண்டும் என்று உறுதியாய் சொன்னேன். எங்களையும் பெரியாரையும் பிரிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆம், தன்மானத்தோடு வாழ, தேவை பெரியார்! தமிழ்நாட்டிற்கு தேவை பெரியார், அனைவருக்கும் தேவை பெரியார் என்று கூறி முடித்தார்.
எல்லாமும் மக்களுக்கு கிடைக்க எங்களை இழக்கத் தயார்
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவர்கள் அவரது உரையில், அரியலூர் என்ற சின்ன ஊர் இந்த மாநில மாநாட்டினை தாங்குமா என்று நினைத்தபோது, கருங் கடலாக இன்றைக்கு அரியலூர் மாவட்டம் காட்சியளிக்கிறது. அரியலூர் மண்ணுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த மண், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கல் மரமாக ஆன வரலாறு, கல்மரப் பூங்கா அதன் அடியில் கடல் உள்ளது என்பதை இன்றைக்கு கண்டுபிடித்திருக்கிறார்கள். பழைமையான நாகரீகமுடைய மண்ணில், இன்று மதவாதம் அதை சுரண்டும் போக்கு உள்ளது. அந்தச் சூழலில், இந்த மாநாடு அறிவிக்கப்பட்டபோது, நன்கொடை திரட்ட அவர்கள் சென்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரியலூர் மாவட்ட செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர். எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க,கண்ணன் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சின்னப்பா அவர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர், வணிகப் பெருங்குடி மக்கள், பொதுமக்கள், கடைவீதி வசூல் என்று அனைத்து ஊர்களிலும் கிடைத்த வரவேற்பினை அப்படியே காட்சிப்படுத்தி விவரித்தார். அரியலூரை மாநாட்டிற்கு தலைவர் தேர்ந்தெடுத்து இருக்க இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, சமூக நீதியை பாதுகாக்க, நீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி, முதல் களப்பணி நீட்டுக்கு எதிராக மரணித்த குழுமூர் அனிதா பிறந்த மண் அரியலூர். அந்த மண்ணில் நீட்டை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற அறைகூவலை விடுக்கவும், இரண்டு, மதவாத கும்பல் தங்களுக்கு உரியதாக அரியலூர் மண்ணை ஆக்கிக் கொள்ள முயற்சி செய்வதாக கூலிப்படைகளை, அனுமார்களை திரட்டும் பணியில் இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஜாதி, மதவெறி ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த இரண்டு காரணத்திற்காகவும் அரியலூரைத் தலைவர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பதை கூறினார். மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் அரியலூர் மண்ணில், கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை பெற தொடர்ந்து போராடுவோம், பயணிப்போம் என்றார். அரியலூர் மண் மிகப் பெரிய ஆதரவை வழங்கி இருக்கிறது. வெற்றிடம் வெற்றிடம் என்று கலைஞர் மறைவுக்குப் பிறகு கூச்சலிட்டவர்களுக்கு, இது வெற்றிடம் அல்ல கற்றிடம் என்று முதல்வர் காட்டியுள்ளார் என்றார் ஆசிரியர். அரிய அரசியல் ஞானியாக தளபதி விளங்குகிறார். அவருக்கு எல்லா வகையிலும் ஆலோசகராக, ஆலோசனை வழங்கி வருகிறார் தமிழர் தலைவர். எல்லாமும் மக்களுக்குக் கிடைக்க எங்களை இழக்கத் தயார். தலைவரே! ஆணையிடுங்கள் பணி முடிக்க நாங்கள் தயார் என்ற உணர்ச்சிமிகு வரிகளுடன் நிறைவு செய்தார்.
இந்தியா எனும் துணைக்கண்டம்
கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தனது உரையில்: சிறப்பான நேரத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை விவரித்து, ஒரே மதம், ஒரே கல்விமுறை, ஒரே வாழ்க்கை முறை,ஒரே நாடு இந்தியா என்கிறார்கள். சொல்லப்போனால், இந்தியா நாடே அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல இந்தியா ஒரு துணை கண்டம் (subcontinent). 1957இல் நாடாளுமன்றத் திற்கு முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சென்ற போது, அங்கே : "India is not only lingual state but multinational state also" என்று தோழர் சம்பத் அவர்கள் பதிவு செய்தார் என்றார். தொடர்ந்து, சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிறது மனுதர்மம். அதன் வடிவம் தான் தேசிய கல்விக் கொள்கை. இன்றைக்கு நடைபெறும் அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசி, பிஜேபி கொள்கை பிரச்சாரமாக பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இளைஞர்களையும் மாணவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் திட்டம் இது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மாநாட்டை உரிய நேரத்தில் அறிவித்திருக்கிறார். பொதுச்செயலாளர் சந்திரசேகர் அவர்கள் கூறியதைப் போல் தலைவர் ஆணைக் காக தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் ஆணையிடுங்கள் என்று உணர்வு பெருக்கோடு உரையாற்றினார்.
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தீர்மானங்கள்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தனது உரையில், புவியியல் ரீதியாக எப்படி அரியலூர் கடல் சார்ந்த பூமி ஆக இருந்தது என்பதையும், இன்று அதே அரியலூர், மக்கள் கடலாக மாறி இருப்பதை சொல்லி தனது உரையை தொடங்கினார். அங்கொன்றும், இங்கொன்றும் கருப்புச் சட்டைகள் இருப்பார்கள் என்று இனி யாரும் சொல்ல முடியாது. ஆசிரியருடன், மாலை நடந்த பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அமர்ந்து கண்டு களித்தார். ஏதோ, வயதானவர்கள் இருப்பார்கள் என்பதை இனி நிச்சயம் மாற்றி சொல்ல வேண்டும். நூறாண்டு, நூறாண்டு, நூறாண்டு கடந்தும் இந்த இயக்கம் இருக்கும் என்பதை தீர்க்கமாக பதிவு செய்தார். தனது உரையில் காலையில் நிறைவேற்றப்பட்ட 19-ஆவது தீர்மானத்தை விளக்கினார். 1929இல் செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றும் பேசு பொருளாக இருப்பது போல், காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதியான ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் என்று சொல்பவர்கள் ஒரே ஜாதி என்று கூற முன் வருவார்களா? என்ற ஆசிரியரின் கேள்வி இன்று மம்தா வரை சென்றடைந்து இருக்கிறது என்பதைக் கூறி, காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தியா முழுவதற்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தீர்மானங்கள் என்றார். தமிழ்நாடு எப்படிப்பட்ட மண் என்றால் கடந்த முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது ‘குட் ஈவினிங் சென்னை' என்றார், கைதட்டல். வணக்கம் சென்னை என்றார் கைதட்டல். நமஸ்தே சென்னை என்றார், ஒருவரும் கைத்தட்டவில்லை. இதை யாரும் சொல்லிக் கொடுத்து வரவில்லை. இதுதான் திராவிட மாடல். நூற்றாண்டு கண்ட இயக்கம் திராவிடர் இயக்கம் என்று தனது உரையை நிறைவு செய்தார்
மானசீகமாக உங்களோடு தான் இருக்கிறேன்
போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தனது உரையில்: பகுத்தறிவு நம்பிக்கையாக திகழும் ஆசிரியர் என்று தொடங்கினார். தனது தந்தை எஸ்.எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் பெரியாரை அழைத்து மாநாடு நடத்தினார். இன்று ஆசிரியர் அருகில் அமர்ந்து மாநாட்டில் பங்கேற்பதை குறிப்பிட்டு, மாலை பேரணியில் இளைஞர்கள் முழக்கமிட்டு வந்ததைப் பார்த்து அமைச்சர் க.பொன்முடியும், சபாபதி மோகனும் இப்படி முழக்கமிட்டவர்கள், இன்று எங்கள் பிரதிநிதியாக இருப்பதாக ஆசிரியர் சொன்னதை சொல்லி, திமுகவில் நான் இருந்தாலும், பேரணிக்கு வரவில்லை என்றாலும், மானசீகமாக உங்களோடு தான் இருக்கிறேன் என்பதை பதிவு செய்தார். 2011 இல் 'இந்த அரசியலுக்கு, சட்டமன்றம் வரை நாங்கள் வர காரணம் பெரியார்' என்று தான் சொன்னது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்றும், இன்று மேடையில் அதையே நாங்கள் பதிவு செய்ய முடிகிறது என்றால், இதை தான் திராவிட மாடல் என்கிறோம். இந்திய ஒன்றியத்திற்கு மாற்று சித்தாந்தம் திராவிடம். அதை எடுத்துச் செல்லும் பணி முதலமைச்சருக்கு இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த அனிதாவை, தான் முதன் முதலில் சந்தித்த இடம் அரியலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘நீட்' தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது அந்த ஆர்ப்பாட்டம் தான். ஆசிரியர் எழுப்பிய முக்கிய வினா ஒரே ஜாதி என்று கூற முடியுமா என்று சொன்னது அனைவருக்கும் போய் சேர வேண்டிய செய்தி. திராவிடர் கழகம் தேவை, அதன் பணி இன்றும் தேவை, தமிழர் தலைவரின் பணி என்றும் தேவை என்றார் கழக இளைஞர்களை நோக்கி, "வீரர்,வீராங்கனைகளே! உங்களை சுற்றி இருப்பவர்களை அரசியல் படுத்துங்கள்" என்றார். இந்த மேடை என்பது அனைவருக்குமான மேடை. காங்கிரஸ் பாலகிருஷ்ணன் விபூதி வைத்து அமர்ந்திருக்கிறார். திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல - இதனை உணராத சங்கிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு ஆசிரியரி டம் ஆலோசனை பெறுகிறார். கலைஞர் வழியில் முதலமைச்சர் இருப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால், இன்று திராவிடத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கிறார். ஊர்வலத்தில் தீச்சட்டி ஏந்தியவர்கள் ஆசிரியர் கையில் கொடுத்த போது அதை நான் தாங்கிப் பிடிக்கச் சென்றேன். நீங்கள் பிடிக்க வேண்டாம் பத்திரிகைகள் வேறு விதமாக எழுதுவார்கள் என்று ஆசிரியர் எச்சரித்தார். உண்மைதான். சிவன் கோவில் சுவற்றில் திராவிடர் கழக மாநில மாநாடு செய்தி இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்து திராவிடர் கழகத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. திராவிடர் கழகம் இதனை நீக்காவிட்டால், எஸ்.எஸ்.சிவசங்கர் வீட்டை முற்றுகையிடுவோம் என்றனர். காரணம், நாங்கள் திராவிடர் கழகப் பிள்ளைகள். கடவுள் நம்பிக்கை இருக்கா? இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. மக்களுக்கு நன்மை செய்கிறோமா,இல்லையா அதுதான் முக்கியம். இந்துத்துவா தமிழ்நாட்டை கையகப்படுத்த துடிக்கும் நேரம். பல்வேறு எதிர் அணியினர் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், பிஜேபியை கொள்கை ரீதியாக எதிர்க்கும் அரசியல் கட்சி திமுக மட்டும் தான். ஆசிரியர், முக்கியமாக நினைக்கும் கொள்கையை தான் நாங்கள் செய்கிறோம். பகுத்தறிவுப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் உண்மையை நாம் சொல்வோம். மீண்டும், மீண்டும் சொல்வோம். அவர்கள் சினிமாக்காரர்கள் , ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாவற்றையும் கொண்டு வரட்டும் அவற்றை முறியடிக்க , ஆசிரியர் வழியில் செயல்படுவோம். விடுதலையை அனைவருக்கும் கொண்டு செல்வோம் அதன் அறிக்கைகள், அறிவியல் செய்திகள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் எனவே விடுதலையை கொண்டு சேர்ப்போம் என்று சொல்லி முடித்தார்.
அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை அடையாப்படுத்திய மேடை
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் தனது உரையில், தான் தாமதமாக வருகை தந்ததற்கு வருத்தத்தை தெரிவித்து உரையை தொடங்கினார்.ஆசிரியர் மீது தனக்கு எப்போதும் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த மேடை சிறப்புக்குரிய மேடை! அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை, அடையாளப்படுத்திய மேடை. தனது அப்பா, சித்தப்பா இடுப்பில் இருந்த துண்டை, தோளில் போட வைத்த மேடை! கணேசனையும் மேடையில் பேச வைத்த இயக்கம் திராவிடர் இயக்கம் என்று உணர்ச்சி பெருக்கோடு பதிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வியில், சாலையில் நடக்க என்று அனைத்து உரிமைக்கும் அடித்தளமிட்ட தலைவர் பெரியார். அதைத் தொடர்ந்து நடத்திக் காட்டியவர் கலைஞர் என்றார். தமிழர் தலைவர் அவர்கள் எப்படி 90 வயதிலும் 19 வயது இளைஞரை போல் இயங்குகிறார் என்பதை வியந்து சொன்னார். பெரியாரின் கொள்கைகளான பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, ஆகியவற்றை கலைஞர் எப்படி சட்ட மயமாக்கினார் என்பதை விவரித்தார். மகாராஷ்டிராவில், அம்பேத்கர் பிறந்த மண்ணில், அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடியாத போது, தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைத்தது தலைவர் கலைஞர் என்பதை எல்லாம் விவரித்து, ஜாதிப் பேர் கொண்ட தெருக்கள் இருந்த மண்ணில், சமத்துவபுரங்கள் கண்ட கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு சட்ட வடிவம் தந்த கலைஞர். காரணம், பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதே அவரின் குறிக்கோள். இன்றும் பெரியாரின் லட்சியங்களை நிறைவேற்ற, முதல்வர் கிடைத்திருக்கிறார். ஆசிரியர் அவர்கள் திட்டக்குடி வந்தபோது, அவரது உரையை கேட்டு, எப்படி அவரின் தீவிர ரசிகராக மாறினேன் என்பதை சொல்லி, திராவிடர் கழகம் புத்தகங்கள் வந்தால் உடனே வாங்கி படித்து விடுவேன் அந்த அளவிற்கு இந்த கொள்கைகள் தனக்கு பிடிக்கும் என்பதை விவரித்து மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்ந்தார்.
லட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை‘
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதே மேடையில் ஒரு சுயமரியாதைத் திருமணம், ஒரு தாலி அகற்றும் நிகழ்ச்சி அனைத்தையும் நடத்தி வைத்து அதன் பிறகு தனது உரையை தொடங்கி, பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்களின் வருகையால் தனது பேச்சை இடையிலே நிறுத்தி, மீண்டும் தொடங்கி இன எழுச்சி உரையினை வழங்கினார். ஆசிரியர் தனது உரையில், மேடையில் அமர்ந்திருப்பவர்கள் நம்முடைய குடும்பத்துப் பிள்ளைகள். திராவிடர் கழக குடும்பத்துப் பிள்ளைகள். சமூக நீதிப் போராளி பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அமர்ந்திருக்க கூடிய மேடை என்று சொல்லி, தனது உரையை தொடங்கினார். வருகின்ற போது 89 ஆக இருந்த தனது வயது, மாநாட்டில் இருந்து திரும்பும் நேரத்தில் 29 ஆக குறைந்து இருக்கும் என்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் ஒரு சிறப்பான தொண்டர். செய்யுங்கள் என்று சொன்னால், செய்து முடிப்பவர். அவர் மட்டுமல்ல, அரியலூரில் இருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைத்து, சிறப்பான மாநாட்டை நடத்தி இருப்பதை அவர்களையெல்லாம் பாராட்டி, அரியலூரை தேர்ந்தெடுத்தது 100 சதவீதம் அல்ல 200 சதவிகிதம் வெற்றி என்பதை பதிவு செய்தார். அரியலூர் காவிக் கோட்டை என்ற ஒரு கதையைப் பரப்பினர். அந்தக் கனவை, இனி காணாதீர்கள். காரணம், இது வரலாறு படைத்திருக்கும் மாநாடு. 45 நிமிட பேரணி எந்தவித சிக்கலும் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கம் என்பதை நிரூபித்திருக்கிறது என்றார்.
அவர் உரையின் தொடர்ச்சியில் மீண்டு வருகிற இனத்தின் எழுச்சியை சொல்ல, மீண்டும் வருகிறேன் என்று தொடங்கினார். இந்த திராவிட இயக்கம் என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சி. அந்த தலைவர்களின் பதாகைகள் தாங்கிய வாகனம் ஊர்வலத்தில் வந்ததை பதிவு செய்தார். தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் நீதிக்கட்சி ஆட்சியின் போது, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில், கட்டாயம் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அரசாணையை நீதிக் கட்சி வெளியிட்டதை விவரித்து, ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூலில் வீடும் வாழ்வும் என்ற அத்தியாயத்தில், எப்படி பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதவருக்கும் இருந்த வேறுபாட்டை விளக்கி, சுட்ட செங்கலில் வீடு கட்ட கூட உரிமை இல்லாத நிலை என விவரித்தார். அதுதான் சனாதனம், மனுதர்மம் என்றார். இந்த சமயத்தில்தான், பெரியார் எனும் பேராயுதம் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
பெரியார் என்பவர் மருந்து, தீர்வு. அவர் கட்டாயம் தேவைப்படுவார். அவரின் தத்துவத்தை, அதிகாரப்படுத்த முதல்வருக்கெல்லாம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி அமைந்திருக்கிறது. எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிடம்; எல்லோரும் படிக்கக் கூடாது என்பது ஆரியம். இன்று ஆளுநர் பஜனை மடம் நடத்துவது போல் நடத்தி வருகிறார். அவர் தொடர்ந்து சனாதனமா?திராவிடமா? என்று விவாதத்தை கிளப்புகிறார். எதுவெல்லாம் சனாதனம், அந்த சனாதனம் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. அப்படி என்றால், இன்று வருகின்ற மாற்றங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நிராகரிக்க தயாரா? என்று அடுக்கடுக்காக, இந்த மண்ணில் ஏற்பட்ட காணொளி காட்சி, பேனா, அறிவியல் சாதனங்கள் என்று தொடங்கி இன்று குடியரசு தலைவராக இருக்கக்கூடிய ஒரு பெண் இதற்கு உங்கள் சனாதனம் அனுமதிக்கிறதா? என்ற கேள்விகளை அடுக்கினார். எங்கள் பணி என்பது நாங்கள் முன்னே சென்று கண்ணிவெடிகள் எதுவும் இருக்கிறதா என்பதைப் பார்த்து, அதை அகற்றும் பணி எங்களுடையது. இன்று 2000 இளைஞர்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் பஞ்சாயத்து போர்டு பதவிக்குக் கூட போக முடியாது.காரணம், திராவிடர் கழகம் அதற்கு அனுமதிக்காது. ஆனாலும், அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்? காவி கட்சியைப் போல் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டமா? இல்லை! அங்கே போனாலும் காலியாக தான் இடம் இருக்கும். அங்கே இருப்பவர்கள் யார் என்றால் தேடப்படும் குற்றவாளிகள். அப்படி எல்லாம் இருக்கும் நிலையில், இங்கே தூக்கு கயிற்றை முத்தமிடவும், கொள்கைக்காக நாங்கள் தயார் என்று இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கம் எங்களுக்கானதல்ல; உங்களுக்கானது! மக்களுக்கானது! என்றார். தமிழ்நாடு ஏன் இன்றைக்கு தனியாக இருக்கிறது என்றால், தந்தை பெரியாரால்தான்.
படிக்காதே என்றது மனதர்மம். அனைவரையும் படிக்க வைத்தது திராவிடம். ஒவ்வொரு முறையும் மதக் கலவரங்கள், மதவாதம் இந்தியாவை அச்சுறுத்துகிற போது, தமிழ்நாடு மட்டும் எப்படி அமைதி பூங்காவாக இருந்தது என்பதை ஆசிரியர் விவரித்தார். தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து ஞானகுரு என்பவரால் எழுதப்பட்டிருக்கும் "அறியப்படாத இந்து மதம்" என்ற நூலினை அனைத்து இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தி, அந்நூலில் 'சனாதனத்தின் நீட்சியே நீட் தேர்வு' என்ற ஒரு கட்டுரையில் வரும் செய்திகளை எல்லாம் தொகுத்து சொல்லி, சமஸ்கிருதம் படித்தால் தான் ஒரு காலத்தில் மருத்துவம் என்றவர்கள், இன்று நீட் என்கிறார்கள். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த மகிழ்ச்சியில் இருந்தால், இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை என்கிறார்கள். இந்த சூழ்ச்சியை எல்லாம் தமிழ்நாடு மட்டும்தான் கண்டறிய முடியும். காரணம், நாம் அணிந்திருப்பது பெரியாரின் கண்ணாடி, நுண்ணாடி என்றார். தமிழ் மொழிக்கு எவ்வளவு மதிப்பு தற்போது இருக்கிறது? செம்மொழி தமிழ் மொழி என்ற அந்தஸ்து கலைஞரால் பெறப்பட்டது. ஆனால் இன்றைக்குத் தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் மொழியின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பினார். இந்த இயக்கம் பகுத்தறிவு இயக்கம். பகுத்தறிவைப் பரப்புங்கள் என்று முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசியிருக்கிறார்.
நாகரீகத்தோடு மட்டுமல்ல, நயத்தக்க நாகரிகத்தோடு முதல்வர் பேசியிருக்கிறார். ஒருபுறம் பிரதமர், அவருக்கு அருகில் ஆளுநர். அவர்கள் முன்னிலையில் நீங்கள் படித்திருக்கலாம், பட்டம் பெற்றிருக்கலாம் ஆனால், அதனைத் தாண்டி பகுத்தறிவைப் பரப்புங்கள், பகுத்தறிவை நம்புங்கள் என்று பேசியிருக்கிறார். பேசிய அமைச்சர் கணேசன் அவர்கள் நன்றி உணர்ச்சியோடு அவற்றை சொன்னாலும் கூட, அவர் சொன்ன செய்திகள் எவ்வளவு அப்பட்டமான உண்மை. இந்த திராவிடர் இயக்கம் எதையெல்லாம் சாதித்து இருக்கிறது என்பதை விவரித்தார். இதுதான் திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்றார். இந்த புரட்சியை மேலை நாடுகளில் நடத்திக் காட்டுவதற்கு ரத்தம் சிந்த தேவை இருந்தது. ஆனால், ரத்தம் சிந்தாத, துளி ரத்தம் சிந்தாத மாற்றத்தை இன்றைக்கு தமிழ்நாடு பெற்று இருக்கிறது. காரணம், நாம் ஏந்தியது அறிவாயுதம். தந்தை பெரியார் கொடுத்த அறிவாயுதம். அந்த அறிவாயுதத்தின் ஒரு வடிவம் தான் விடுதலை நாளிதழ். எண்ணிக்கைக்காக விடுதலையை நாம் பரப்பவில்லை. மாறாக, லட்சியத்தை பரப்புவதற்காக, கொள்கையை பரப்புவதற்காக விடுதலை அனைவரையும் சென்றடைய வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதைப் போல இளைஞர்களுக்கு, "தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்தின் லட்சியம் மாத்திரம் தெரிந்தால் போதாது, அதை அடைவதற்கான நடைமுறைகளை, கருவிகளை தெரிந்து செயல்பட வேண்டும்" என்றார். அதுபோல், நமது லட்சியத்தை அடையும் கருவி தான் விடுதலை. அதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். சிறப்பாக நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு பாராட்டு! பாராட்டு!
வாழ்க பெரியார்!
வளர்க திராவிட மாடல் ஆட்சி!
என்று ஆசிரியர் தனது உரையை நிறைவு செய்தார்.
தொகுப்பு: வழக்குரைஞர் மதிவதனி
No comments:
Post a Comment