திருச்சி: மகளிரணி - மகளிர் பாசறை - கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
திருச்சி, ஜூலை 3 இந்தக் கூட்டம் நடைபெறும் இந்தத் தெருவிற்கு, ‘குறத்’தெரு என்ற பெயரை மாற்றி, பொது நலத் தொண்டர்களின் பெயரை வைக்க, இந்தக் கூட்டம் வாயிலாகத் திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர், உறுப்பினர்கள் மற்றும் அனைவரையும் ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசையும் சேர்த்துக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சியில் கடந்த 12.6.2022 அன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்
1.7.2022 அன்று வெளிவந்த அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிகழ்வு
நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வெள்ளி விழா நடைபெற்றது. பேச்சு போட்டிகள் என்றால், வழக்க மாக நான் பங்கேற்று பரிசுகள் வாங்குவேன். அப்போது நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பேராசிரியர்கள் நடுவர்களாக இருப்பார்கள். அன்றைய இணைவேந்தர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள்.
பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் எல்லாம் அவரிடம் மிகவும் மரியாதை உள்ளவர்கள். அவருடைய சமூ கத்தை, ஜாதியைச் சார்ந்தவர் மிக முக்கியமான நீதிபதிகளில் ஒருவர். அவர் எனக்கும் பேராசிரியர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். பெரியாரிடம் மிகவும் மரியாதை கொண்டவர். இதே ஊரில் உள்ள ரத்தினவேல் தேவர் மண்டபத்தில், அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
என்னை ‘‘டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடைய தொண்டு’’ என்ற தலைப்பில் பேசச் சொன்னார்கள்.
ஜாதிப் பெயரை சொல்வது என்பதில்
எனக்கு உடன்பாடு கிடையாது
அந்தத் தலைப்பில் நான் உரையாற்றுவதற்காக வந்த பொழுது, என்னுடைய இயல்பான நிலை என்னவென் றால், ஜாதிப் பெயரை சொல்வது என்பதில் உடன்பாடு கிடையாது.
ஆகவே, ஒரு சொற்றொடரை நானே உருவாக்கி - எங்களுடைய இணைவேந்தர் முத்தய்ய வேள் என்று சொன்னேன். அந்த சொல்லை மூன்று, நான்கு முறை சொன்னேன்.
ஆகவே, ஜாதிப் பட்டத்தை எடுப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல.
இந்தத் தெருவின் பெயரைமாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்
இந்தத் தெருவைப் பொறுத்தவரையில், திருச்சி மாநகரம் நல்ல வாய்ப்பாக தி.மு.க. தலைமையில் இருக்கிறது; மேயர், துணை மேயர் ஆகியோர் இருக்கிறார்கள். ஒரு ஆற்றல் வாய்ந்த அமைச்சர், நம்முடைய செயல்வீரர் நேரு அவர்கள் இந்த நகரத்திற்கு உரியவராக, எதையும் துணிந்து முடி வெடுக்கக் கூடியவராக, நகராட்சித் துறை அமைச்சராகவும் அவர் இருக்கிறார். அரசும் இந்தக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, உங்கள் அனைவரின் முன்னிலை யிலும் ஒரு வேண்டுகோளை இந்த உரையில் தெளிவாக வைக்க விரும்புகிறேன்.
இந்தக் கூட்டம் நடைபெறும் இந்தத் தெருவிற்கு, ‘குறத்’தெரு என்ற பெயரை மாற்றி, பொதுநலத் தொண்டர்களின் பெயரை வைக்க, திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர், உறுப்பினர்கள் மற்றும் அனைவரையும் இந்தக் கூட்டம், ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசையும் சேர்த்துக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தெருப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றக்கூடிய வாய்ப்பை நீங்கள் உருவாக்கவேண்டும்.
ஒரு காலத்தில் இதுபோன்று இருந்திருக்கலாம்; இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பெயர்கள் இருக்கக்கூடாது; ‘குறத்’தெரு என்று சொன்னால், அது யாருக்கும் பெருமையாக இருக்காது. அவர்கள் உழைக்கின்ற மக்கள் - இருளர்களுக்காகத் தனி வாய்ப்பு.
நம்முடைய முதலமைச்சர் பாராட்டுக்குரிய அளவில், நரிக்குறவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களுடைய வீட்டுப் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்தவர்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்
சமத்துவ நாள்!
டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை சமத்துவ நாள் என்று அறிவித்து, அந்த சமத்துவத்தைச் செய்த முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஆட்சியில், இது நடைபெறவேண்டும் என்று அன்போடு, உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
அவர்கள் விரும்புகிற பொதுத் தலைவர்கள், காண்ட்ரவர்சி இல்லாத தலைவர்களின் பெயரை வைக்கலாம். வ.உ.சி. அவர்களுக்கு 150 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். எனவே, அவ ருடைய பெயரைக் கூட வைக்கலாம். அதற்காக ஜாதித் தலைவர்களின் பெயரைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம்;
ஜாதி ஒழிப்பிற்காக பிறந்த இயக்கம்
அடுத்து நண்பர்களே, இங்கு பல கருத்து களைத் தெளிவாக விளக்கினார்கள்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், இந்த இயக்கத்தைப்பற்றி நண்பர்கள் இங்கே சுட்டிக் காட்டியதைப்போல, சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம்; ஜாதி ஒழிப்பிற்காக பிறந்த இயக் கம்; அனைவரும் சமத்துவம் என்று சொல்லுகின்ற இயக்கம்.
உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டிலாவது...
பெரிய ‘ஞானபூமி’ என்று மார்தட்டிக் கொண்டிருக் கின்ற இந்த நாட்டைத் தவிர, உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டிலாவது பிறக்கும்பொழுது
ஒருவன் பிராமணனாக - இன்னொருவன் சூத்திர னாக,
ஒருவன் பார்ப்பானாக - இன்னொருவன் பறையனாக
ஒருவன் உயர்ஜாதிக்காரனாக - இன்னொருவன் கீழ்ஜாதிக்காரனாக,
ஒருவன் தொடக்கூடியவனாக - இன்னொருவன் தொடக்கூடாதவனாக,
ஒருவன் படிக்க உரிமையுள்ளவனாக- இன்னொரு வன் படிக்க உரிமையில்லாதவனாக ஆக்கக் கூடிய ஜாதி முறை உண்டா?
இங்கே ஜாதி முறையை உண்டாக்கியதோடு மட்டுமல்ல, அந்த ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்டு, நம்முடைய மக்கள் கல்வி கற்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஏன் நம்முடைய ஆட்கள் மேலே வர முடியவில்லை? இன்னமும் நாம் இட ஒதுக்கீடு, வகுப்புரிமை என்று போராடிக் கொண்டிருக்கின்றோமே, அதற்கு என்ன காரணம்?
நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல
திராவிடர் கழகம் அறிவுபூர்வமாகவும், ஆதாரப்பூர்வ மாகவும் கருத்துகளை எடுத்து வைக்கின்ற ஓர் இயக்கம். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. புரியாதவர்கள் சிலர் எங்களை எதிரிகள் என்று கருதிக் கொண்டிருக் கின்றார்கள்.
ஆனால், சனாதனத்திற்கும், ஜாதிக்கும் நாங்கள் எதிரிகள்; அதுபோன்ற தத்துவங்களுக்கு எதிரிகள்.
தொடாதே என்று சொன்னால், என்னை தொடாதே என்று சொல்வதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்று சொல்லி, திருப்பிக் கேட்கக்கூடிய பகுத்தறிவை தந்தை பெரியார் நமக்கு அளித்திருக்கிறார்.
இதோ என் கைகளில் இருப்பது மனுதர்மம். இங்கே மகளிரில் வழக்குரைஞர்களும் இருக்கிறார்கள். இங்கே வழக்குரைஞர் மதிவதனி பேசினார்.
இந்த இயக்கம் என்ன செய்தது என்று கேட்டால், இங்கே இருக்கின்ற மகளிர் தோழர்களில் அருள்மொழி வழக்குரைஞர், வீரமர்த்தினி வழக்குரைஞர், மணி யம்மை வழக்குரைஞர், நானும் வழக்குரைஞர்தான்.
அவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் வாதாடுவார்கள்; நான், உங்களுக்காக வாதாடுகிறவன். எங்களுடைய மன்றம் வெவ்வேறு; அவசியப்பட்டால், நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடுவேன்.
இந்த சூழ்நிலையில், தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் - மதிவதனியை அழைக்கும்பொழுது, எம்.எல். என்று ஒரு வார்த்தையை சொல்லி அழைத் தேன். ஏனென்றால், நாங்கள் எல்லாம் பி.எல். படித்த வர்கள்.
தமிழர்களில், திராவிடர்களில், பார்ப்பனரல்லாதவர்களில்
பி.எல். படித்தவர்கள் கிடையாது
ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களில், திராவிடர்களில், பார்ப்பனரல்லாதவர்களில் ஆண்களில் கூட எம்.எல். படித்தவர்களே கிடையாது. பார்ப்பனர் கள்தான் எம்.எல். (மாஸ்டர் ஆஃப் லா). படித்திருப்பார்கள். நம்மவர்கள் பி.எல். (பேச்சலர்ஸ் ஆஃப் லா) தான் படித்திருப்பார்கள்.
அன்றைக்குப் பார்ப்பனர்கள்தான் வழக்குரை ஞர்களாக இருந்தார்கள்.
கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.எல்.
நீண்ட நாள்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சுப்பிரமணிய பிள்ளை - அவருடைய அடை யாளத்திற்காக ஜாதியையும் சேர்த்துச் சொன்னேன். கா.சு. பிள்ளை என்று அவரை அழைப்பார்கள். அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்கூட பேராசிரி யராக இருந்தார்.
கா.சு. பிள்ளை என்ற அவருடைய பெயர் மாறி, எல்லோரும் அவரை எப்படி அழைத்தார்கள் என்றால், எம்.எல். பிள்ளை என்றுதான்.
ஏனென்றால், தமிழ்நாட்டிலேயே, தமிழர்களில் ஒரே ஒருவர் எம்.எல். படித்தவர் அவர். அதனால், அவரை எம்.எல். பிள்ளை என்று அழைத்தார்கள்.
இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. நம்மு டைய பிள்ளைகளில், எம்.எல். பிள்ளைகள் ஏராளம். அதுதான் மிக முக்கியம்.
இப்படிப்பட்ட நிலை வந்ததற்கு என்ன காரணம்?
தந்தை பெரியார் அல்லவா!
மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்-
87 சதவிகிதம் நாங்கள்தான் மெஜாரிட்டி என்று சொல்லுகிற இடத்தில், இந்துலாவில் உள்ள அடித்தளம் என்ன? அதற்கு மூலாதாரம் என்ன?
இது அறிவு கொளுத்துகிற இயக்கம் - எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் - யாருக்காவது சந்தேகம் இருந்தால் தெரிந்துகொள்ளவேண்டும். ஏன் நாங்கள் இந்தப் பணியை செய்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். யாரையும் புண்படுத்துவதற்கோ, சங்கடப் படுத்துவதற்கோ அல்ல.
அசல் மனுதர்மம்
இதோ என் கைகளில் உள்ளது அசல் மனுதர்மம் - 1919 இல் வெளிவந்து, அதற்குப் பிறகு பலப் பதிப்புகள் வந்திருக்கின்றன. இன்றைக்கு 8 ஆவது பதிப்பாக பல லட்சம் பிரதிகள் வெளிவந்திருக்கிறது.
இதை நாங்கள் அச்சடிக்கவில்லை - கோமாண்டூர் இளையவல்லி இராமானுஜ ஆச்சாரியார் - அவர் சமஸ்கிருதத்தில் இருக்கின்ற மனுதர்மத்தை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிற வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
எதற்காக இந்த இயக்கத்தை நாங்கள் நடத்து கின்றோம்?
இதைப் பேசாதீர்கள், அதைப் பேசாதீர்கள் என்று சொல்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் யாரும் தேவையில்லாமல் பேசுபவர்கள் அல்ல. ஆதா ரத்தோடு பேசுபவர்கள் நாங்கள். யாரையும் புண்படுத்து வதற்காகப் பேசுபவர்கள் அல்ல. வம்பு, வழக்குகளை உண்டாக்குவதற்காகப் பேசுபவர்கள் அல்ல. கலவரத்தை உண்டாக்குவதற்காகப் பேசுபவர்கள் அல்ல; கலவரத் தைத் தடுப்பதற்காகப் பேசக்கூடியவர்கள் நாங்கள்.
‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார்.’’
மனுதர்மம் முதல் அத்தியாயம்; 87 ஆவது சுலோகம், 15 ஆவது பக்கம்.
முகத்தில் பிறந்தவன் பிராமணன், உயர்ந்த ஜாதி; தோளில் பிறந்தவன், சத்திரியன்; தொடையில் பிறந்தவன் வைசியன்; காலில் பிறந்தவன் சூத்திரன். பஞ்சமன் அதற்கும் கீழே பிறந்தான்; அதற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண்களும்.
‘‘இந்து மதம்
எங்கே போகிறது?’’
ஏன் அப்படி எல்லா ஜாதி பெண்களும் கீழே என்றால், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தை எழுதிய அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் அழகாக அதற்குக் காரணம் சொன்னார்.
‘‘அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்குக் கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண் ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந் தார்கள்.’’
ஆகவே, எல்லாப் பெண்களையும் அவர்கள் கீழ் ஜாதியிலும் கீழ்ஜாதியாக, உயர்ந்த ஜாதிப் பெண்களையும், அவர்களோடு இருக்கக்கூடிய பெண்களையும் சேர்த்து, பெண்களுக்கு எந்த உரிமையுமில்லை என்று சொன் னார்கள்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், இன்றைக்கு இருக்கின்ற நிலை வந்திருக்க முடியுமா?
இன்னமும் ஜாதி இருக்கிறதே, திருமணத்தில் ஜாதி பார்க்கிறார்களே, இன்னும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், உண்மைதான்.
5 ஆயிரம் ஆண்டுகாலத்து
மூடநம்பிக்கை
இது 5 ஆயிரம் ஆண்டுகாலத்து மூடநம்பிக்கை -
5 ஆயிரம் ஆண்டுகாலத்து அவதி -
ஒரு கட்டடமாக இருந்தால், உடனே தரைமட்டமாக்கி விடலாம். அம்பேத்கர் அவர்கள் சொன்னதுபோல, மனதிற்குள் இருக்கின்ற ஒரு சிந்தனை - கற்பனை. அதை நம்பி, இவன் மயக்கத்தில் இருக்கிறான்.
ஜாதியை ஏன் ஒழிக்க முடியவில்லை? மனிதர்களால் உண்டாக்கப்பட்டது என்றால், அதை ஒழித்திருக்கலாம். அதற்காக அவர்கள் பாதுகாப்பாக ஒரு திட்டத்தைப் போட்டார்கள். ஜாதியை கடவுள் உண்டாக்கினார் என்று சொன்னார்கள்.
அந்தப் பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக - இந்த வார்த்தையைப் பாருங்கள்.
ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறவர்கள், ஜாதி ஒழிப்பிற்காகத் தங்களைத் தியாகம் செய்துகொள்ளக் கூடியவர்கள். சமத்துவம் வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள், கடவுளைப்பற்றி பேசாமல், காரணத்தைச் சொல்லாமல் செய்ய முடியுமா?
பகவத் கீதை, மிகப்பெரிய நூல் என்று பலர் பிரச்சாரம் செய்கிறார்கள். நாங்கள் படித்த அளவிற்கு அந்த பகவத் கீதையைப் படித்திருக்கமாட்டார்கள்.
‘‘கீதையின் மறுபக்கம்’’
‘‘கீதையின் மறுபக்கம்’’ என்ற தலைப்பில் 28 அத்தியாயங்கள் வெளிவந்த நூல் - பல லட்சம் பிரதிகள் வெளிவந்துள்ளன. அதில் உள்ள ஒரு வார்த்தைக்கு மறுப்புத் தெரிவிக்க அவர்களால் முடியவில்லை.
700 சுலோகங்களையும் படித்து, மூன்று ஆண்டு கள் ஆய்வு செய்து, சமஸ்கிருதம் சுலோகம் உள்பட அதில் மறுப்பாக எழுதினோம்.
இதில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால் நண்பர்களே, வருண தர்மம், இன் றைக்குத் தமிழ்நாட்டு ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி என்ற ஒரு ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி - சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டில், ஜாதி, வன்முறை ஏற்பட்டால், அதை நியாயப்படுத்திப் பேசுவது அந்தப் பதவியில் ஒரு நொடிகூட நீடிக்க தகுதியற்ற ஒருவர் என்பதுதான் அதன் வெளிப்பாடாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment