கலைஞர் நினைவு போற்றல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

கலைஞர் நினைவு போற்றல்

கடலில் கண்ணாடி தளத்துடன் இரும்பு மேம்பாலம்- 137 அடி உயர பேனா

சென்னை,ஜூலை23- முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தை ஒட்டி வங்கக் கடலின் உள்ளே 137 அடியில் பிரமாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

மேனாள் முதலமைச்சர் கலைஞருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, அவரது நினைவிடத்தை ஒட்டிய வங்கக்கடலினுள் 137 அடி உயரபேனா சின்னத்தை நிறுவ ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு பொதுப் பணித் துறை கோரவுள்ளது.

மேனாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கடந்த2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடவளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கலைஞர் நினை விடம் அருகில் கடலுக்குள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 

42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் பேனா போன்ற நினைவுச் சின்னம் கடலுக்குள் புல்வெளிகள் நடுவில் அமைக்கப்பட உள்ளது.

கடலில் 360 மீட்டர் பாலம்

இதற்கு முன், திமுக ஆட்சியில் குமரிக் கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நிலையில், அதற்கு சற்று கூடுதல் உயரத்தில் இந்த நினைவுச் சின்னம்அமைக்கப்படுகிறது. கலைஞரின் நினைவிடத்தின் உள்ளே இருந்து, கடலின் மேல் 360 மீட்டர் தூரம் சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் ரசிக்கும் வகையில், இரும்பு பாலம் அமைக் கப்படுகிறது.

கடல் அலை மட்டத்தில் இருந்து6 மீட்டர் உயரம், 7 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. கண்ணாடி தளத்தில் அமைக்கப்படும் இந்த பாலத்தில் கடலை இரசித்தபடி பொதுமக்கள் செல்ல முடியும். ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் பொதுப் பணித் துறை இறங்கியுள்ளது.

இதற்கு முன், மகாராட்டிராவில் அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி யளித்து, சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், அதை முன்னிறுத்தி, இந்த சின்னத்துக்கும் அனுமதியைப் பெற தமிழ்நாடு அரசு நட வடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment