சென்னை,ஜூலை23- ஜாதி பாகுபாட்டை களையும் வகையில் மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை தமிழ்நாடு அரசுஉறுதி செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மேலையூர்கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி நாகலட்சுமி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நாகலட்சுமி கடந்த 2020-இல் உயிரிழந்தார். மேலையூரில் உள்ள மயானத் துக்குச் செல்லும் பாதையில் மழைநீர்தேங்கியதன் காரணமாக, பொதுப் பாதை வழியாக உடலைக் கொண்டு செல்ல முடி வெடுத்தனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் சடலம் பொதுப் பாதை வழியாக கொண்டு செல்ல அப்பகுதியின் மற்றொரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதலை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் மாற்று பாதையில் உடலைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, மாற்றுப் பாதையில் நாகலட்சுமி உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தமிழ்நாடு அரசுக்கு நேற்று (21.7.2022) அளித்த பரிந்துரையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாகலட்சுமியின் கணவர் கண்ணணுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இரு சமூகத் தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் காவல்துறையினர் மனித உரிமை விதிகளின்படி செயல் படுவதையும், குறிப்பாக சிறுபான்மையினர் உள்ளிட்ட நலிந்த பிரிவினரின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்து வதை உறுதி செய்யவேண்டும்.
ஜாதிப் பாகுபாட்டை களையும் வகையில் மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை தமிழ்நாடு அரசுஉறுதி செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment