நரகாசுரன் என்ற குடிக்காத நல்லொழுக்கனை (‘அசுரன்' என்ற சொல்லே அப்படித்தான் வந்தது - சுரபானம் குடித்த மொடாக்குடியன் ஆரியன் அல்லாதவர் ‘அ சுரன்' என்பதே பொருள்) தீபாவளியன்று ‘பூதேவர்கள்' ஆன நம் நாட்டின் பிரம்மா முகத்தில் பிறந்த ஜாதிக்காரா இருக்காளோன்னோ அவா ஒருத்தருக்கொருவர் பார்த்தா இப்படித்தான் கேட்பா. (தீபாவளி பண்டிகையின்போது).
கங்கை எங்கோ இருக்கே - நான் எப்படி இங்கிருந்து ‘கங்கா ஸ்நானம்' பண்ணுவது அப்படீன்னு சொல்லாம, இவாளும் சம்பிரதாய முறையிலே ‘கங்காஸ்நானம்' ஆச்சுண்ணுவாள்!
அந்த கங்கைபற்றி அப்படி உசாவும் அவாள் பத்திரிகை இனமலரிலே இருக்கிற செய்தியை (25.7.2022) படிக்கலாமா?
‘‘கங்கையில் கலக்கும் கழிவுகள் - பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி!''
கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக கங்கை நதியை சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் கொட்டிச் செலவு செய்தும் ஒரு பிரயோசனமும் இல்லை.
நடத்தப்பட்ட தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு பலனும் கிட்டவே இல்லை.
மக்கள் வரிப் பணம் பல்லாயிரக்கணக்கில் பாழ்பட்டதுதான் மிச்சம்.
இப்போது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது கங்கையில் கழிவு நீரைக் கலக்கும் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுப்பதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கருத்துரை - ஆணை வழங்கியுள்ளது!
அதைவிட கங்கையில் பிணங்கள் அப்படியே போடப்பட்டு, மிதக்கும் நிலையும், அதற்கு முக்கியக் காரணம் என்பதை ஏனோ சொல்லவில்லை!
முன்பு இந்திரா காந்தி ஆட்சியில், அவருக்கு மிகவும் நெருங்கிய தோழி பியுப்புல் ஜெயக்கர் என்ற ஓர் அம்மையார் இந்திய கலாச்சார கழகத் தேசியத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் இராஜீவ் காந்தி பிரதமராக (இந்த அம்மையாரை அவர் ‘ஆண்ட்டி' (Aunty) என்றே அழைப்பாராம்) இருந்தபொழுது, கங்கை மற்றும் நதிகளின் நீரை பல உலக நாட்டின் நதிகளில் கலந்து, கலாச்சார ஒற்றுமையை ஏற்படுத்தும் திட்டம் என்ற பெயரால், கங்கை நீரை - பாரீசில் உள்ள செயின் (Seine) நதியில் கலக்க அந்நாட்டு அரசும், மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, மறுத்துவிட்டனர்.
காரணம், அந்தத் தொற்றும், அசுத்தமும் தங்களுக்கு வந்துவிடும் என்பதே முக்கிய வாதம்!
இப்போதும் நமது மோடி, அமித்ஷா இந்த கங்கா புனித ஜலத்தை பாக்கெட், குடுவையில் கலந்து போஸ்டாபீஸ்களில் விற்பனை செய்து பக்தி பரவசம்மூலம் ஹிந்துத்துவாவைப் பரப்ப செய்த முயற்சிக்கும் பஞ்சமில்லை.
இங்குள்ள கங்கை ‘புனித' கங்கையா?
''Holy Ganges'' என்ற பெயர் - ‘பேரு பெத்த பேரு, தாக நீலு லேது'' தெலுங்கு பழமொழி.
கங்காஜலம் குடிப்பதோ, இதில் ஸ்நானம் செய்வதோ எந்த அளவு சுகாதாரக் கண்ணோட்டத்தில் பயன்தரும் என்று சற்று யோசிக்கவேண்டாமோ!
மதம் என்றால் கண்ணை மறைத்துக் கொண்டு கிணற்றில் விழுகிறார்களே! பஞ்சாப் முதலமைச்சர் மான் ஒரு ‘புனித' தண்ணீரைக் குடித்து வயிற்று வலியில் அவதியுற்று, மருத்துவர்கள்தானே குணப்படுத்தினர்!
‘‘பக்தி வந்தால் புத்தி போகும் -
புத்தி வந்தால் பக்தி போகும்'' என்றார் பெரியார் ஏன் என்று புரிகிறதா?
கங்கா நதியை இப்படி பசுமைத் தீர்ப்பாயம் குறை சொல்லலாமோ, அபச்சாரம், அபச்சாரம்!
கங்கைன்னா என்ன சாதாரணமா?
‘சாட்சாத் பகவான் பழைய பரமசிவன் தலைமேலே இருந்தல்லவா அது உற்பத்தியாகி வருகிறது. அதில் போய் கழிவுகள், அது, இது என்று கூறலாமோ, பேஷா, அதைக் குடிச்சுட்டு, நேரே மோட்சம் போறதற்கு இதைவிடச் சிறந்த வழி எவா காட்டுவா?' என்று சந்தோஷப்பட வேண்டாமோ!
இப்படிக் குறை சொல்லுவது நமது சனாதனத்தைக் குறை சொல்வதாகும்; ‘சனாதனம் என்றால் நிரந்தரமானது; என்றுமே மாறாதது; கங்கை நீர் சூடலானான்' என்று சைவ சமயக் குரவர்களால் பாடிய கங்கையை இப்படி பழிப்பது, பரமசிவனுக்கும் இது காதில் பட்டால், ‘இந்தா பிடி சாபம்' என்று கூறி, பிடி சாம்பலாக்கிவிடப் போகிறார்; உரத்த குரலில் சொல்லாதீர் என்கிறார் ஸ்ரீமான் பக்த கேடியவர்கள்!
உஷார்! உஷார்!!
No comments:
Post a Comment