கருநாடகா மாநிலம் கல்புர்கியில் உள்ள முக்கிய கோவிலான தாத்தரயா கோவில் பெயரில் போலி இணையதளம் நடத்தி பக்தர்கள் அளித்த ரூ.20 கோடி நிதியை மோசடி செய்த 5 கோயில் அர்ச்சகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்புர்கி மாவட்டம் அப்சல்பூரில் உள்ள தாத்தரேயா கோயில் தென்னிந்தியாவில் திருப்பதி கோவிலுக்கு நிகராக அதிக மக்கள் வரும் கோவில்களில் ஒன்று. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு செல்வது வழக்கமாம்.
இந்த நிலையில், இந்த கோயிலில் பணிபுரிந்த 5 அர்ச்சகர்கள், பக்தர்களிடம் கோயிலுக்காக இணையம் மூலம் நிதி வசூல் செய்து இருக்கின்றனர்.
அதேபோல் சிறப்புப் பூஜைக்கு எனவும் தனியாக ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்து உள்ளனர். இவ்வாறு நிதியுதவி மற்றும் சிறப்புப் பூஜை கட்டணம் வழங்கும் பக்தர்களிடம் இணையம் மூலம் பணம் செலுத்த பூசாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால், கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் இணைப்பைப் பகிராமல், அதேபோல் இவர்கள் தனியாக உருவாக்கிய இணையதளத்தின் இணைப்பைப் பகிர்ந்து இருக்கின்றனர்.
மூடப் பக்தர்களும் அதை உண்மை என்று நம்பி பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அதில் செலுத்தி இருக்கின்றனர். கருநாடகா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயிலுக்கு வழங்கப்படும் நிதி நியாயமாக அரசுக்குச் செல்ல வேண்டிய ஒன்று.
ஆனால், அது இந்த 5 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருக்கிறது. இந்த நிலையில், கோயில் நிர்வாகியான கல்புர்கி இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் கோயில் மேம்பாடு தொடர்பாக கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கோயிலுக்கு வரும் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, இந்த மோசடி வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய அவர், 7 ஆண்டுகளாக போலி இணையதளம் மூலம் அர்ச்சகப் பார்ப்பனர்கள் நிதி மோசடி செய்வதை கண்டறிந்தார். இதுகுறித்துப் பேசிய அவர், "7 முதல் 8 இணையதளங்களை போலியாக தொடங்கி சட்டவிரோதமாக சிறப்புப் பூஜைகளை நடத்தி, பண வேட்டையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளோம். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் என்பது அரசின் சொத்து; எனவே கோயிலின் சேவைகள் அனைத்தும் அரசு இணைய தளம் வாயிலாகவே நடைபெற வேண்டும். 6 முதல் 7 ஆண்டு களாக இந்தப் போலி இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோயில் அர்ச்சகர்களான வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகியோர் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
இந்த நிலையில் மோசடி அம்பலமானவுடன் 5 அர்ச்சகர்களும் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. போலி இணையதளம் மூலமாக மட்டும் சுமார் ரூ.20 கோடி மோசடி நடைபெற்று இருக்கலாம் என காவல்துறை தெரிவிக்கின்றது.
கடவுள் பக்தியின் யோக்கியதைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? அந்தக் கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்டு இருக்கும் - இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருக்கும் அந்தக் கடவுள் சக்தியின் யோக்கியதை எத்தகையது என்பதற்குத்தான் என்ன சாட்சியம் தேவைப்படும்?
கோயில் ஒரு சுரண்டல் கருவி என்பதற்குத் தான் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
வேறு சாட்சியம், ஆதாரம் தேவையில்லை. கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்து மாநாட்டில் என்ன பேசினார்?
"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால், கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும் மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது! என்று சொல்லவில்லையா?
கடவுள் ஒன்று இல்லை என்பது சங்கராச்சாரிகளுக்கும் தெரியும்; அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கும் தெரியும் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?
No comments:
Post a Comment