சென்னை பெரியார் திடலில் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா - ஆசிரியர் கி.வீரமணி கலந்துறவாடல்
கருநாடகா மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் இன்று (31.07.2022) சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தார். காலை 10.30 மணியளவில் பெரியார் திடலுக்கு வந்தவர், பெரியார் அருங்காட்சியகத்திற்குச் சென்று தமிழர் தலைவரைச் சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழர் தலைவரைச் சந்திப்பதில் - அவருடன் உரையாடுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
சித்தராமையாவை தமிழர் தலைவர் வரவேற்றார்
பெரியார் திடலுக்கு வருகை புரிந்த சித்தராமையா அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பித்து வரவேற்றார். திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகளாக வந்துள்ள பெரியார்தம் கொள்கை விளக்க ஆங்கில புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.
தமிழர் தலைவருக்கு சித்தராமையா சிறப்பு செய்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கருநாடகா மாநில மேனாள் முதலமைச்சர் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பித்து மகிழ்ந்தார்.
90 வயதினை எட்ட உள்ள (டிசம்பர் 2) தமிழர் தலைவரும், 73 வயதினை விரைவில் (ஆகஸ்டு 12) எட்டிட உள்ள சித்தராமையா அவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும், உடல் வளம் பேணி மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமுதாயப் பணி ஆற்றிட வேண்டும் எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.
பெரியார் அருங்காட்சியகத்தில்
பெரியார் பயன்படுத்திய கட்டிலைப் சித்தராமையா அவர்கள் பார்த்து அருகில் சென்றவுடன் ஆசிரியர் அவர்கள் பெரியார் தனது வாழ்நாளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த நிகழ்வுகளையெல்லாம் சுருக்கமாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் பலரும் அந்த இடத்தில் சந்தித்துத்தான், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்த, சமூகநீதி பிரச்சினைகள் குறித்து பெரியாரிடம் ஆலோசனை பெற்று ஆணைகள் பிறப்பித்த செய்திகளை ஆசிரியர் விளக்கமாகக் கூறினார்.
திருச்சிக்கு அருகில் சிறுகனூரில் அமைந்திடவுள்ள 'பெரியார் உலகத்தில்' நிறுவப்பட உள்ள தந்தை பெரியாரின் மாதிரி சிலையினைப் பார்த்த சித்தராமையா அதற்கு அருகில் நின்று பெருமையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். 'பெரியார் உலகம்' பற்றிய செய்திகளை தமிழர் தலைவர் சித்தராமையாவிடம் எடுத்துரைத்தார். அருங்காட்சியகத்தியில் உள்ள பெரியார் வாழ்நாள் தொடர்புடைய பல அரிய ஒளிப்படங்களை பார்த்து சித்தராமையா வியந்து பாராட்டினார்.
பின்னர் இரண்டு தலைவர்களும் நாட்டில் நிலவும் அரசியல் சமுதாயச் சூழல் குறித்து தனித்து உரையாடினர்.
பெரியார் நினைவிடத்தில் சித்தராமையா மரியாதை
அருங்காட்சியகத்திலிருந்து நேராக தமிழர் தலைவருடன் பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து தந்தை பெரியாருக்கு வீர வணக்கம் செலுத்தினார். மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். நினைவிடப் பாதையில் இரு பக்கங்களிலும் தந்தை பெரியாரின் பொன்மொழிகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தாங்கி நிற்கும் கற் பலகைகளைச் சுட்டிக்காட்டி சித்தராமையா அவர்களுக்கு தமிழர் தலைவர் விளக்கினார்.
செய்தியாளர் சந்திப்பு
பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் பொழுது சித்தராமையா குறிப்பிட்டதாவது:
"இன்று தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திட பெரியார் திடலுக்கு நான். வந்துள்ளேன்; சீரிய பகுத்தறிவாளரும், சிறந்த விடுதலைப் போராட்ட வீரருமான தந்தை பெரியாரின் தீவிர தொண்டன் நான். தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்தினை தந்தை பெரியார் பேணி வளர்த்தார். இந்த நிலப்பரப்பிலுள்ள அனைத்து திராவிடர்களையும் ஒற்றுமைப்படுத்திட கடுமையாகப் பாடுபட்டார். ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நீண்ட நாள்களாகவே அறிவேன், அவருடன் பழகியும் வந்துள்ளேன் நான். ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வர தொடர்ந்து பாடுபட்டு வருபவர். சமூகநீதிக்காகப் பாடுபட்டு வரும் தலைவர்களுள் முன்னணியில் இருப்பவர்.
ஒவ்வொருவரும் சமூகநீதியை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியை மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பணியாற்றிய பாபா சாகேப் அம்பேத்கர் இதனை தெளிவாகவே அன்று எடுத்துரைத்தார். நானும் பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் தீவிர தொண்டன். வகுப்புகளற்ற, ஜாதிகளற்ற சமத்துவமான சமுதாயத்தினை உருவாக்கிட அம்பேத்கர் விரும்பினார். கிடைத்துள்ள அரசியல் ஜனநாயகம் உண்மையானதாக, வலிமையானதாக இருக்க வேண்டுமென்றார். அதற்கு பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் உரிமைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் சமூக ஜனநாயகம் வெற்றி பெறும். அரசியல் ஜனநாயக - சமூக ஜனநாயக நடைமுறையில்தான் உண்மையான ஜனநாயகம் ஏற்படும். நாம் அனைவரும் இதனை உணர்ந்து அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கப் பாடுபட வேண்டும்.
நேற்று ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சென்னையில் இல்லை. வெளியூரில் இருந்தார். என்னைச் சந்திப்பதற்காகவே 200 மைல் பயணம் செய்து இன்று சென்னை வந்துள்ளார். அவர் என்னுடைய கொள்கைப் பூர்வ அரும் நண்பர் ஆவார். அவரை ஆகஸ்டு 8ஆம் நாளன்று பெங்களூருவில் நடைபெறவுள்ள சமூகநீதி பற்றிய பொன் விழாவுக்கு நாங்கள் அழைத்துள்ளோம்" என்றார்.
நாம் அனைவரும் சமூகநீதிக்கான பயணத்தில் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்.
செய்தியாளர் சந்திப்பில் அடுத்துப் பேசிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:
"கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களை பெரியார் திடலுக்கு வரவேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம். அவர் மேனாள் முதலமைச்சர் மட்டுமல்ல, சமூகநீதிக்காக தொடர்ந்து போராடி வரும் போராளி ஆவார்.
தந்தை பெரியாரும், பாபா சாகேப் அம்பேத்கரும் கொள்கை நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். இருவரது கொள்கைகளிலும் பற்றுக் கொண்ட நண்பர் சித்தராமையா சமூகநீதிக்காகப் பாடுபட்டு வருகிறார். அவர் எடுத்து வரும் அனைத்து அரசியல் முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்; சமூகநீதிப் பயணத்தில் புதிய அத்தியாயம் படைப்பார்.
சித்தராமையா அவர்களது முயற்சியில், தலைமையில் ஆட்சி மாற்றம் கருநாடகா மாநிலத்தில் நடைபெற விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம். அப்படி அமைக்கப்படவுள்ள ஆட்சியும் 'திராவிட மாடல்' ஆட்சியாக இருந்திட விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம்" என்றார்.
(மேலே குறிப்பிட்டவைகள் செய்தியாளர் சந்திப்பில் இரண்டு தலைவர்களும் ஆங்கிலத்தில் பேசியதன் தமிழாக்கம்)
செய்தியாளர் சந்திப்பிற்குப் பின் சித்தராமையா அவர்களுக்கு அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி சால்வை அணிவித்து பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் உரிமை வேண்டுதல் பற்றிய விவரங்களையும் அவரிடம் அளித்தார்.
உடன் வருகை தந்தோர்
பெரியார் திடலுக்கு வருகை புரிந்த கருநாடகா மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களுடன், கருநாடக மாநில மேனாள் அமைச்சரான எச்.எம். ரேவண்ணா, பெங்களூரு மேனாள் மேயர் ரவிச்சந்திரப்பா, கருநாடக மாநில குல்பர்கா சங்கத்தின் பொதுச் செயலாளரும், மேனாள் மேயருமான வெங்கடேசமூர்த்தி, கருநாடக சட்டமன்றத்தின் மேனாள் கொறடா அசோக்பட்டன்; கருநாடக பிற்படுத்தப்பட்டோர் துறையின் மேனாள் இயக்குநர் ராவய்யா, மேனாள் முதலமைச்சரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் கே.வி. பிரபாகர், மூத்த வழக்குரைஞர் மனோகரன் ஆகியோர் வருகை தந்தனர்.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் சார்பாக, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரசு கட்சி ஊடகப் பிரிவின் செயலாளர் கோபண்ணா மற்றும் திருச்சியிலிருந்து சமூகப் பணியாளர் சின்னராஜூ ஆகியோர் வந்திருந்தனர்.
சந்திப்பின் பொழுது கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழர் தலைவரிடம் விடைபெற்றார்
குறுகிய கால நிகழ்விலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிடும் வாய்ப்பு பெற்று, தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு பெங்களூரு செல்வது மிகுந்த மனநிறைவைத் தருவதாக கூறி சித்தராமையா தமிழர் தலைவரிடமிருந்து விடை பெற்றார். வரும் ஆகஸ்டு 8 அன்று பெங்களூருவில் நடைபெறவுள்ள சமூகநீதிப் பொன் விழாவிற்கு தமிழர் தலைவரை அழைத்து விட்டு விமான நிலையத்திற்கு சித்தராமையா கிளம்பிச் சென்றார்.
தொகுப்பு: வீ. குமரேசன்
No comments:
Post a Comment