சேலம், ஜூலை.25 நாமக்கல்லில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை அமைந்துள்ள பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நேதாஜி சிலை எதிரே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சார்பில் இந்த சிலை அமைக்கப் பட்டுள்ளது. இதில் நேற்று (24.7.2022) மாலை பெரியார் சிலை மட்டும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று சிலைகளையும் உடனடியாக மூடினராம்.
மேலும், நிகழ்வு தொடர்பாக நடத்திய விசாரணையில், அவ்வழியாக சென்ற மினிடோர் ஆட்டோ மோதியதில் பெரியார் சிலை சேதமடைந்திருக்கலாம், எனத் தெரியவந்தது. (இது என்ன யூகமோ!) எனினும், சிலை சேதம் அடைந்ததற்கான முழு விவரம் எதுவும் தெரிய வில்லை. நிகழ்வு தொடர்பாக நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அசம்பாவிதம் தவிர்க்க சிலை அமைந்துள்ள பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment