மாணவர்களுக்கு முதலமைச்சரின் கருத்துரை - தந்தை, தாயுமானவரின் கனிவுரை; பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி - 'திராவிட மாடல்' ஆட்சியில் ஓர் அருமையான கல்விப் புரட்சி! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்குக் கூறியுள்ள அறிவுரை மிகவும் தேவையான காலகட்டத்தில், பொறுப்பான அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒருவர் ஒரு தந்தை நிலையிலே மட்டுமல்ல, தாயுமாவார் அவர் என்று கூறத் தகுந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு வகுப்புப் பாடம் எடுக்கும் ஆசிரியரைப் போல கூறியிருக்கிறார்.
இதனை செயல் திட்டமாக மலர வைப்பது பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ஒத்துழைப் புடன் கூடிய பொறுப்பு மிகுந்த கடமை யாகும்.
ஆதாயம் கிட்டாத அரசியல்வாதிகளுக்கு
இது ஒரு புதுமூலதனம்
அண்மைக் காலத்தில், குறிப்பாக கரோனா கொடுந்தொற்று ‘கோவிட் 19' அச்சுறுத்தல், ஆபத்துகள் காரணமாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாலும், ஊர் முடக்கத்தினாலும் ஓடி ஆடி விளையாடும் பருவத்தில், அவர்கள் முடக்கப்பட்டதாலும் பலரும் தேவையின்றியும், தேவைக்கு அதிகமாகவும் கைத்தொலைப்பேசி, வாட்ஸ் அப், டுவிட்டர் போன்றவற்றிற்கு அவர்களை அறியாமல் போதைப் பொருளடிமைபோல் ஆகிவிட்டதால், மீண்டும் பள்ளி, வகுப்புத் தேர்வு, ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வ கண்டிப்பு - பெற்றோர்களின் கவனம், கட்டுப்பாடு -இவற்றைத் தவறாகப் புரிந்து, உடனே சிறு தோல்வி அல்லது ஏமாற்றம் அல்லது எதிர்பார்ப்பு நிறைவேறாமை - இவற்றை எதிர்கொண்டு வெல்லவேண்டிய பக்குவமோ, மனதிடமோ கொள்ளாமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பெற்றோர்களுக்கு இழப்பு; ஆசிரியர்களுக்கு அவமானம், கண்டனம், தண்டனை, அரசுகளுக்கு வீண் அவப் பெயர், ஆதாயம் கிட்டாத அரசியல்வாதிகளுக்கு இது ஒரு புதுமூலதனம் என்ற கெடு வாய்ப்புகள் ஏற்படுகின்றன!
எனவே, முதலமைச்சர் அவர்கள் கூறிய அறிவுரைகளில் முதன்மையானதன்படி,
‘‘தன்னம்பிக்கையோடு எந்த இடர்ப்பாடு - தோல்வி, ஏமாற்றம் இவற்றை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறுவோம்; வெற்றி இலக்கை அடைவோம். தோல்வி என்பது வெற்றியின் முதல் படிக்கட்டே தவிர, வேறு இல்லை'' என்ற மனத்திண்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் அவர்களின் வாழ்வில் ஒளிமிக்க எதிர்காலம் என்ற நம்பிக்கைத் தரும் வாழ்க்கையைத் தரும்.
அறிவாசானின் ஆறுதல் கடிதம்
‘‘தேர்வில் தோற்றவர்களோ, தேர்தலில் தோற்றவர்களோ - வாழ்வில் தோற்றவர் களாக ஒருபோதும் ஆகமாட்டார்கள்'' என்று மன அழுத்தத்திலிருந்த ஒரு நண்பருக்கு மிக நீண்ட காலத்திற்குமுன் தெம்பூட்டும் ஆறுதல் கடிதம் எழுதினார் அறிவாசான் தந்தை பெரியார்!
வெற்றிகள் தரும் பாடத்தைவிட, ஆழ்ந்த பயனுறு பாடத்தை பல தோல்விகள் பலருக்குத் தந்துள்ளன என்பது வரலாற்று உண்மை.
எனவே, மாணவர்களுக்கு வீரமும், விவேகமும், தளராத தன்னம்பிக்கையும் துளிர்த்து மலரும் நிலைக்குப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் அந்நிலை உருவாக்க ஒத்துழைக்கவேண்டும்.
பிள்ளைகளிடம் பேசும்போது, பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, மற்ற சக குடும்பத்தினர், சக மாணவர்கள் - இவர்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பேசி, மனமுடைய அல்லது மன அழுத்தத்திற்கு அவர்களை ஆளாக்கவே கூடாது.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஆசிரி யர், பெற்றோர் - இவர்களுக்கும் உளவியல் மருத்துவர்கள் உரையாடல்களை உரு வாக்கி, அவர்களையும் பக்குவப்படுத்த வேண்டும்!
கல்வி கண்களைப் பறிக்கும் சூழ்ச்சிப் பொறிகள்
‘தகுதி, திறமை' என்பதே மற்ற ஒடுக் கப்பட்ட சமூகத்தவரின் கல்வி கண்களைப் பறிக்கும் சூழ்ச்சிப் பொறிகள்.
மதிப்பெண்ணுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கும் இன்றைய பாடத் திட்ட முறையே மாற்றப்பட்டு, கல்வி என்பதன் உண்மைப் பணி, மாணவர் உள்ளே இருக்கும் ஆற்றலை, திறமையை வெளியே கொணர முயற்சிப்பதாக இருக்க வேண்டுமே அன்றி, வெளியே இருந்து உள்ளே திணித்து அடைப்பது அல்ல.
சரியான கல்வி அணுகுமுறை
1926 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் பகுத்தறிவின் பெருமைபற்றி ஆசிரியர்களிடையே உரையாற்றியபோது சொன்னார்.
‘‘ஆசிரியரிடம் மாணவர்கள் கேள்வி கேட்டு அறிவைப் பெருக்குவதே சரியான கல்வி அணுகுமுறை'' என்றார்; அது வந்தால், பல பிரச்சினைகள் கிளைக்காது!
காலை உணவைப் போதிய அளவில் மாணவர்கள் அலட்சியப்படுத்தாமல், உண்ட பிறகு வகுப்பறைக்கு வரவேண்டும்.
இதுபோன்ற உரை பரப்பப்படவேண்டும்!
இப்பொழுது காலை உணவுக்கும் நமது ‘திராவிட மாடல்' அரசு ஏற்பாடு செய்ய விருப்பது - சிறப்பானதும் - ஆழ்ந்த சிந்த னையும் உடையதாகும்.
தொடர்ந்துவரும் கல்வியில் ஓர் அருமை யான அமைதிப் புரட்சி.
ஏழை, எளிய பிள்ளைகள் மட்டுமல்ல, வீட்டில் உணவைப் புறக்கணித்துவிட்டு வரும் பிள்ளைகள் கனிவுடன் காலைச் சிற்றுண்டியை பள்ளியில் சக மாணவ, மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட்டால், அதனால் பல்வகைப் பலன்கள் ஏற்பட்டு, மாணவர்களின் உடல் வளம், உள்ள வளம், காலந்தவறாமை, கல்வியில் முழு கவனம் போன்றவை பெருகும்! இதற்கென தனியேகூட முதலமைச்சர் நிதி திரட்டி தடை யின்றி நடைபெற ஏற்பாடுகளை செய்யவும் தவறக்கூடாது. மதவாதம் மறைமுகமாக நுழைந்து விடாமல் பார்ப்பது முக்கியம்! பள்ளிக் கல்வித் துறை மட்டுமே இதற்கு முழுப் பொறுப்பேற்க தனிப் பிரிவுகளும், சத்துணவுத் துறை மாதிரியும் ஏற்பாடு செய்து, தூய்மை, தரத்தைக் கண்காணிக்க, தணிக் கைக் குழுக்களை அமைத்து திட்ட செயல் பாட்டை கண்காணிக்கலாம். 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங் கப்பட்டு, இந்தியாவின் முதல் முதலமைச் சரின் முத்தான வழிகாட்டும் சாதனைக்கு வரலாறு கட்டியம் கூறிடும் - வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.7.2022
No comments:
Post a Comment